Search
  • Follow NativePlanet
Share
» »காரங்காடு கடல் உணவை சுவைக்க மறக்காதீங்க...!

காரங்காடு கடல் உணவை சுவைக்க மறக்காதீங்க...!

சினிமாக்களில் வரும் அலையாத்தி காடுகள் ஊடே நாமும் ஒரு முறையாவது படகில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கும். இந்த ஆவல், சென்னை, புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றிய மக்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால், தென் மாவட்ட மக்களுக்கு இந்த வாய்ப்பு குறைவு என்றே இருந்தது. இந்த குறையை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரங்காடு போக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு முறை போயிட்டு தான் வாங்க.

உப்பு நீரில் வளரும் தன்மை கொண்ட சதுப்பு நிலக்காடுகள் பலவகைப்பட்ட உயிரினங்களுக்கு புகழிடமாக உள்ளன. அலையிடை, கடலோர மரக்காடுகள், மழைக்காடுகள், அலையாத்திக் காடுகள், தில்லைவனம், சுரப்புன்னைக் காடுகள், கண்டன் காடுகள் என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தச் சதுப்பு நிலக் காடுகள், புயல், வெள்ளம், மண் அரிப்பு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றில் இருந்து மனிதர்களைக் காக்கும் பெரும் பணியை அசால்ட்டாக செய்து வருகின்றன.

karangadumangroveforest

மனிதர்களுக்கு நேரும் இத்தகைய துயர்களைப் போக்கும் சதுப்பு நிலக் காடுகள் நிறைந்த, சூழல் சுற்றுலா பகுதியில் ஒன்று தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள காரங்காடு.

எங்கு உள்ளது

ராமநாதபுரத்திலிருந்து தொண்டி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், மணக்குடி என்ற ஊருக்கு அருகில் இருக்கிறது காரங்காடு கிராம். 75 ஹெக்டேர் பரப்பில் கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில், கடல் நீருக்கு கரைகளாக வளர்ந்து நிற்கின்றன மாங்குரோவ் எனப்படும் அலையாத்திகள். இவற்றின் அழகை கண்டு ரசிக்க, 3 கி.மீ., தூரம் என்ஜின் பொருத்தப்பட்ட படகில் பயணம் செய்தாக வேண்டும்.

மக்களுடன் கைகோர்த்த வனத்துறை

தமிழக வனத்துறை காரங்காடு கிராம மக்களுடன் இணைந்து,காரங்காடு சூழல் மேம்பாட்டுக் குழு' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் மூலம் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா' ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு படகு சவாரி, ஸ்நார்க்கிங் எனப்படும் தண்ணீருக்கு அடியில் உள்ள உயிரினங்களைக் காண்பது போன்ற கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

காரங்காடு கிராமத்தின் கரையோரம் தொடங்கி, பாக் நீரிணை கடலின் குறிப்பிட்ட தூரம் வரை சென்று, திரும்ப பாதுகாப்புடன் கூடிய படகு பயணம் உள்ளது. பயணத்தின்போது அலையாத்திக் காடுகளுக்கு இடையே இரை தேடியபடி செல்லும் சதுப்புநிலக் காட்டு பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, குதிரைத் தலைக் கோட்டான், ஆலாக்கள், கடற்புறாக்கள், செந்நாரை, பவளக்காலி, கொக்குகள் ஆகியவை நம்மையும், நம் குட்டீஸ்களையும் குதுாகலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இவற்றுடன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்துள்ள அலையாத்திக் காடுகளின் அழகை கடல் பசு தீவு' பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் காட்சி கோபுரத்தின் மீது இருந்து கழுகு பார்வையில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்

காட்சி கோபுர பார்வை முடிந்து, கரைக்குத் திரும்பும் வழியில் கடல் நீருக்கு அடியில் வளரும் புற்கள், நட்சத்திர மீன்களைக் கடலில் மூழ்கியவாறே கண்டு களிக்கலாம். இதற்கென பிரத்யேகமான கண்ணாடி, மூச்சு விடும் கருவிகள் வழங்கப்படுகின்றன.

பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை இவற்றை அணிந்து கடல் தாவரங்களையும், அதன் ஊடாக வளரும் சிறு மீன் இனங்களையும் காண்பது அலாதிதான்.

karangadumangroveforests

துடுப்பை நாம் இயக்க வாய்ப்பு

அமைதியான ஏரி போன்று பரந்து விரிந்து காணப்படும் கடல் நீரின் மீது துடுப்பு படகுகளை நாமே இயக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. கயாக்கிங் எனப்படும் இந்தப் பயணத்துக்கென வண்ணமயமான படகுகள் உள்ளன.

பாதுகாப்பு மிதவை உடையை அணிந்து கொண்டு கைகளில் துடுப்பை எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடங்கலாம். கடலின் ஆழம் குறைவாக இருப்பதால் துடுப்பை இயக்கத் தெரிந்த சிறுவர்களும் இந்தப் பயணத்தில் ஈடுபடலாம்.

படகு சவாரி, கயாக்கிங், நீரில் மூழ்கி கடற்புற்களைக் காணுதல் என எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு கரை திரும்புபவர்களின் பசியைப் போக்க அமைந்துள்ளது, ருசியான உணவுக் கூடம்.

இங்கு கடல் உணவுகளான மீன் குழம்பு, நண்டு கிரேவி, நண்டு சூப், இறால் கட்லெட், கணவாய் கட்லெட், மீன் வறுவல் மற்றும் தக்காளி சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் தாகம் தீர்க்கும் இயற்கை பானங்களான மோர், எழுமிச்சை சர்பத், இஞ்சி டீ என, நாவுக்கு ருசியூட்டும் உணவு பதார்த்தங்களுக்கு பஞ்சமிருக்காது.

ஆனால், படகு பயணத்துக்கு முன் ஆர்டர் கொடுத்துவிட்டு சென்றால் கடல் உணவுகளை கரை திரும்பியவுடன் ஒரு கை பார்க்க வசதியாக இருக்கும். பள்ளி செல்லும் மாணவ மாணவிகளின் பொழுதுபோக்குத் தளமாக மட்டுமன்றி கடல், அதில் வாழும் உயிரினங்கள், அலையாத்திக் காடுகள், அவற்றின் மூலம் பெருகி வரும் உயிரினங்கள் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் இடமாகவும் இது விளங்கி வருகிறது.

ராமநாதபுரத்திலிருந்து தொண்டி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 40 கி.மீ தூரத்தில் மணக்குடி எனும் சிற்றூர் உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ கிழக்கு நோக்கிச் சென்றால் காரங்காடு. இந்தக் கிராமத்தில் உள்ள தேவாலயத்தின் அருகில் அமைந்துள்ளது, வனத்துறையினரின் படகு குழாம்.

கட்டணம்:

படகு சவாரி

நபர் ஒருவருக்கு ரூ.100

சிறுவர்களுக்கு ரூ.50

துடுப்பு படகு ரூ. 200 (ஒரு நபர்), ரூ.300 (2 நபர்).

மீன் சாப்பாடு (மீன் குழம்பு, வறுவல், நண்டு கிரேவி, கணவாய் கட்லெட்).

(ஹலோ இது உத்தேச கட்டணம் தான். தற்போது விலைப்பட்டியல் மாறி இருக்க வாய்ப்புள்ளது.)

எது எப்படியோ... குற்றாலம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளு, குளு இடங்களுக்கு போக முடியவில்லை என ஆதங்கப்படும் தென் மாவட்ட மக்களுக்கு, காரங்காடு ஒருவித மாறுபாடான அனுபவத்தை கொடுக்கும். ஹலோ கோவப்படாதீங்க...! மற்ற ஊர்காரங்களும் போலாம்.

More News

    Read more about: chennai tamilnadu india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+