» »கடவுளின் தேசத்திலுள்ள தோனி மலைக்கு விசிட் பண்ணியிருக்கீங்களா? இல்லைன்னா பண்ணிடுங்க!!

கடவுளின் தேசத்திலுள்ள தோனி மலைக்கு விசிட் பண்ணியிருக்கீங்களா? இல்லைன்னா பண்ணிடுங்க!!

Written By: vicky

கேரள மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற தோனி மலை, அடர்ந்த காடு, மலை மற்றும் நீர்வீழ்ச்சியும் இணைந்த ஒர் அழகிய சுற்றுலா ஸ்தலமாகும். இயற்கை வளம் நிறைந்த தோனி மலை, பாலக்காடு இரயில் நிலையத்திலிருந்து ஏறத்தாழ 12 கி.மீ தொலைவில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் தோனி மலை மலையேற்ற விரும்பிகளுக்கும் வாலிபர்களுக்கும் மிகச் சிறந்த சுற்றுலா மையமாகும்.

நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இங்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற சமயமாகும். அதிக உஷ்ணமான கோடைக் காலத்திலும் மழைக் காலத்திலும் தோனி மலைக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

இங்கு காணப்படும் சுவிட்சர்லாந்து மாட்டுப் பண்ணை சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கிறது. தோனி மலைக்கு செல்பவர்கள் முதியவர்களையும் நடக்க இயலாதவர்களையும் கூட அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தோனி மலை அடிவாரத்தில் காணப்படும் அலுவலகத்தில் மலையேற்றம் செய்வதற்கான நுழைவுச் சீட்டை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

dhonihills

PC: Abhishek Jacob

மலையேற்றம்:

தோனி மலை அடிவாரத்திலிருந்து ஏறத்தாழ 5 கி.மீ தூரம் மலையேற்றப் பதையில் சுமார் 2 மணி நேரம் நடந்து சென்றால் அழகிய நீர்வீழ்ச்சியைக் காணமுடியும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்து செல்லக்கூடிய நீண்ட மலையேற்றப் பாதையில் நீங்கள் பலவகை மிருகங்களும் பறவையினங்களும் காணமுடியும். இராட்சத அணில்கள், சிங்கவால் குரங்குகள், கரடிகள், யானைகள், சிறுத்தைகள், நீலகிரிக் குரங்குகள், காட்டுப் பூனைகள் மற்றும் புள்ளி மான்கள் போன்ற பலவிதமான மிருகங்களை நீங்கள் பார்க்க முடியும். இயற்கையின் அழகை இன்னும் அதிகமாக ரசிக்க, நீங்கள் பாதுகாக்கப்பட்ட காட்டிற்குள் செல்லலாம்.

விடியற்காலையிலே நீங்கள் இந்த மலையேற்ற பயணத்தை துவங்குவது நல்லது. அப்படிச் செய்வதால் உங்களது களைப்பை நீங்கள் சற்று குறைத்துக் கொள்ளலாம். காலையிலும் மாலையிலும் பயணம் இனிதாய் இருக்கும்படி இதமான குளிர் காணப்படுகிறது.
மலையேற்றம் செய்வதற்கேற்ற காலணிகளை நீங்கள் அணிந்து செல்வது உங்கள் பயணத்தை இலகுவாக்கும். அழகாய் தோற்றமளிக்கும் வண்ணவண்ணப் பூக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் உங்கள் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்ற இறக்கமான நடைபாதையின் இருபுறமும் உயர்ந்த மரங்கள், பறவைகள் எழுப்பும் இனிமையான ஒலி மற்றும் கண்ணுக்கு எட்டியவரை இயற்கைக் காட்சிகள் உங்கள் மனதிற்கு ரம்மியமாக இருக்கும். போதுமான அளவு குடிநீரையும் திண்பண்டங்களையும் எடுத்துக் கொண்டு செல்வது நல்லது. (காலி பட்டில்களை இங்கு வீசி விடாமல் எடுத்துக் கொண்டு வருவது ஒரு முக்கியமான விஷயமாகும்).

பாழடைந்த பங்களா:

அருவிக்குப் போகும் வழியில் பாழடைந்த நிலையிலிருக்கும் ஒரு பழைய பங்களா காணப்படுகிறது. கவரக்கண்ணு பங்களா என்று அழைக்கப்படும் இந்த கட்டடம் 1850 ல் இங்குள்ள எஸ்டேட்டுகளைக் கண்காணிப்பதற்காக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடத்தை பழுது பார்த்து சுற்றுலாப் பயணிகளிக்கு பயனுள்ள இடமாக மாற்றினால் நன்றாக இருக்கும்.

தற்போது உபயோகத்திலில்லாத தார் ரோடு ஒன்றையும் நீங்கள் பார்க்கலாம். பாலக்காடு, கோவை, மணற்காடு, நீலம்பூர் மற்றும் சைலன்ட் வெலி போன்ற சில இடங்களை இணைக்க சுதந்திரதிற்கு முன் ஆங்கிலேயர்களால் இந்த ரோடு போடப்பட்டது.
தோனி நீர் வீழ்ச்சியிலிருந்து மலம்புழா அணை செல்வதற்கு மெய் சிலிர்க்க வைக்கும் மலையேற்றப் பாதை ஒன்று இருக்கிறது. சாதனை விரும்பிகள் இக்காட்டுப் பாதையில் 5 கி.மீ தூரம் நடந்து சென்றால் மலம்புழா அணையை அடைந்து விடலாம்.

இப்பாதையில் நடப்பதற்கு மாவட்ட வன அதிகாரியிடமிருந்து அவசியம் முன் அனுமதி பெற வேண்டும். மேலும், உள்ளூர் வழிகாட்டியின் உதவியையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இப்பாதையில் யானைகள் அதிகம் காணப்படுகின்றன. மிகப் பெரிய தேக்கு மரங்களும் இப்பகுதிகளில் பெருமளவில் காணப்படுகின்றன.
நீர் வீழ்ச்சியை சென்று அடைவதற்கு பல வழிகள் உண்டு. வழி தவறி சென்று விடாமலிருக்க குழுவாகச் செல்வது நல்லது.

dhonihills

PC: keralatourism

தோனி நீர் வீழ்ச்சி:

தோனி நீர் வீழ்ச்சியை அடைவதற்கு ஏறத்தாழ 500 மீட்டர் முன்பே தண்ணீர் விழும் சப்தம் நம்மை ஈர்க்க ஆரம்பித்து விடுகிறது. இந்த குளிர்ந்த அருவியில் குளிப்பவர்கள் கவலைகளை மறந்து உல்லாசமாக மகிழ்ந்திருக்கலாம். இயற்கையுடன் இணைந்த இந்த அருவிக் குளியல் உங்கள் வாழ்வில் ஒர் மறக்க முடியாத அநுபவமாக மாறி விடும். இந்த அருவியில் குளிப்பதால் நீங்கள் மனச்சோர்வுகள் நீக்கி உற்சாகத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தோனி அருவி ஒரு தொடர் அருவியாக (series of falls) இருப்பது மிக அழகாகத் தோற்றமளிக்கிறது. வேகமாக தண்ணீர் வந்து விழும் பாறைகள் வழுக்கக் கூடியவை. மேலும், குளிக்குமிடத்தினருகில் மறைவான ஆழ்கிணறுகள் இருப்பதால் கவனமாக குளிக்க வேண்டும். ஏற்கனவே பல அசம்பாவிதங்கள் இங்கு நடந்திருக்கின்றன. குழந்தைகளை அழைத்துச் செல்பவர்கள் மிகவும் கவனமாக அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும்.

தோனி பாதுகாக்கப்பட்ட காடுகள்:

தோனி மலையின் உச்சிக்கு சென்றபின், கண்ணைக் கவரும் எழில் நிறைந்த பாதுகாக்கப்பட்ட காடுகளை நீங்கள் பார்க்கலாம். இந்த அடர்ந்த பசுமையான காட்டிற்குள் வந்து தங்கும் காண்பதற்கரிய பல விஷேசித்த பறவையினங்கள் பறவை கண்காணிப்பாளர்களுக்கு ஒரு போனஸ். ஆசிய தேவதை நீலப்பறவை போன்ற பறவைகளையும் நீங்கள் பார்க்க முடியும்.

பலவிதமான தாவரங்களும் விலங்கினங்களும் இங்கு காணப்படுகின்றன. இயற்கையின் பொக்கிஷமாய் விளங்கும் இக்காடுகளுக்குள் செல்வதற்கு மாலை 3 மணி வரை தான் அனுமதி கிடைக்கும். ஏனெனில், மாலை நேரங்களில் இக்காட்டிற்குள் யானைகள் நடமாட்டம் அதிமாகக் காணப்படுகின்றன. இக்காட்டிற்குள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கோ சாப்பிடுவதற்கோ அனுமதி இல்லை. பிளாஸ்டிக் பைகளை இக்காட்டிற்குள் எடுத்துச் செல்லக் கூடாது. பல கட்டுபாடுகளுடன் இந்தக் காட்டின் சுற்றுப்புறச் சூழல் கெட்டுப் போகாமல் பாதுகாக்கத்து வருகிறார்கள்.

dhonihills

ஷாப்பிங்:

நுழைவாயில் அருகே உள்ள விற்பனைக் கூடத்தில் ஒரு சில பொருட்கள் விற்கப்படுகின்றன. வாசனை திரவியங்கள், அலங்காரப் பொருட்கள், யூக்லிப்டஸ் எண்ணெய், தேயிலை மற்றும் எலுமிச்சை புல் போன்ற பொருட்கள் இங்கு கிடைக்கின்றன.

விஸ்வநாத ஸ்வாமி கோயில்:

இந்த காட்டுக்குள்ளே விஸ்வநாத ஸ்வாமி கோவில் இருக்கிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதோல்சவம் என்ற நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பண்டிகையாகும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த தேர்த்திருவிழாவிற்கு தூரத்திலிருந்து எராளமான மக்கள் வருகிறார்கள்.

சுவிட்ச்சர்லாந்து மாட்டுப் பண்ணை:

இங்குக் காணப்படும் மாட்டுப் பண்ணை சுவிட்சர்லாந்து அரசாங்கத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பண்ணையில் நூற்றுக்கணக்கான சுவிட்சர்லாந்தைச் சார்ந்த உயர்ந்த இன பசு மாடுகளை நீங்கள் பார்க்க முடியும்.

தோனி மலைக்குப் போகும் வழி:

பாலக்காடு இரயில் நிலையத்திலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ தொலைவில் தோனி மலை உள்ளது. கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 78 கி.மீ தொலைவிலும், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 100 கி.மீ தொலைவிலும் தோனி மலை அமைந்துள்ளது. பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து பல KRTC பேருந்துகளும் செல்கின்றன.
பிரபலம் அடைந்து வரும் தோனி மலைக்குச் சென்றுவர மொத்தமாக குறைந்த பட்சம் ஆறு மணி நேரம் உங்களுக்குத் தேவைப்படும். அன்றாட வேலைப் பளுவிலிருந்தும் இறுக்கத்திலிருந்தும் விடுபட்டு இயற்கையுடன் இணைந்து சில மணிநேரம் செலவிட்டு சந்தோஷமாயிருக்க தோனி மலை மிகச் சிறந்த இடமாகும். தோனி மலை, கேரளா செல்லும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்.

தோனி மலைக்கு அருகில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்:

தோனி மலை சுற்றுலா பயணத்தின் போது அருகிலுள்ள மலம்புழா அணை, பரம்பிக்குளம் சரணாலயம், சைலன்ட் வேல்லி தேசிய பூங்கா, நெல்லியம்பதி மலை வாசஸ்தலம், திப்பு சுல்தான் கோட்டை, திருவலத்தூர் பகவதி கோவில், மயிலாடும்புரா மயில்கள் சரணாலயம், மான் பூங்கா, மற்றும் போத்துண்டி நீர்த்தேக்கம் போன்ற இடங்களுக்கும் நீங்கள் சென்று வரலாம்.

அதிகம் பேர் படித்த டாப் 5 கட்டுரைகள்

திருமணத்துக்கு முன்னாடி நீங்க இதையெல்லாம் அனுபவிச்சே ஆகணும் பாஸ்

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் வீழ்ந்த இடம் எது தெரியுமா?

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?


ஜெயலலிதாவும் கோடநாடும் தெரிந்ததும் தெரியாததும்


அமலா பாலுடன் நடுக்காட்டில் ஒரு சுற்றுலா போலாமா?

Read more about: travel, பயணம்