இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) வசதியான பயண அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும் வகையில் அவ்வப்போது மேம்பட்ட வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. நீங்கள் ஒரு இடத்தில் போர்டிங் செய்ய டிக்கெட் எடுத்தாலும் கூட, அந்த போர்டிங் பாயிண்டை உங்கள் வசதிக்கேற்ப மாற்றம் செய்ய IRCTC புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலவசமாக நீங்கள் உங்களது போர்டிங் பாயிண்டை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. எப்படி போர்டிங் பாயிண்டை மாற்றுவது என்பது குறித்து கீழே பார்ப்போம்!

இலவச போர்டிங் பாயிண்ட் மாற்றம்
நாம் ஒரு இடத்தில் ரயிலில் ஏறுவதற்கு டிக்கெட் புக் செய்து இருப்போம். ஆனால் அவசர சூழ்நிலைகள் காரணமாக வேறு இடங்களுக்கு சென்று விட்டால், புக் செய்த அதே இடத்தில் இருந்து ரயிலைப் பிடிக்க முடியாமல் போய்விடும். இதனால் டிக்கெட் கட்டணம் வீணாவதோடு, போய் சேர வேண்டிய இடத்தையும் நாம் அடைய முடியாமல் போய்விடுகிறது. ஆனால் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவுடன் பயணிகள் ஏறும் இடத்தை மாற்ற அனுமதிக்கிறது. இதன் மூலம் நீங்கள் உங்களது போர்டிங் பாயிண்டை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

கன்பார்ம் டிக்கெட் அவசியம்
இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ள பயணிகள், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் தங்கள் போர்டிங் ஸ்டேஷனை ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம். ஒரு பயணிகள் போர்டிங் பாயிண்டை மாற்றியவுடன், அசல் போர்டிங் பாயிண்டிலிருந்து ரயிலில் ஏறுவதற்கான அனைத்து உரிமைகளையும் இழப்பார்கள். இதற்கு நீங்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்திருப்பது மிகவும் அவசியம். கன்பார்ம் டிக்கெட் இல்லால் நீங்கள் போர்டிங் ஸ்டேஷனை மாற்ற முடியாது. பயணிக்க சரியான அதிகாரம் இல்லாமல் பயணம் செய்வது கண்டறியப்பட்டால் பயணிகள் அபராதத்துடன் கட்டணத்தைச் செலுத்த நேரிடும்.

போர்டிங் ஸ்டேஷனை எப்படி மாற்றிக் கொள்வது?
o முதலில், உங்கள் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் IRCTC இணையதளத்தில் உள்நுழையவும்.
o உங்கள் கணக்கில் உள்நுழைந்ததும் எனது பரிவர்த்தனைகளுக்குச் சென்று, 'புக்கிங் டிக்கெட் வரலாறு' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
o நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு நீங்கள் உங்கள் போர்டிங் பாயிண்டை மாற்ற விரும்பும் பொருத்தமான ரயிலைத் தேர்ந்தெடுக்கலாம். சரியான ரயிலைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்யவும்.
o 'போர்டிங் பாயிண்டை மாற்று' பட்டனை கிளிக் செய்யவும்.
o தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் பாதைக்கு இடையே உள்ள நிலையங்களின் பட்டியலுடன் ஒரு பாப்-அப் சாளரம் தோன்றும். உங்களுக்கு விருப்பமான போர்டிங் பாயிண்டைத் தேர்ந்தெடுக்கவும்.
o பின்னர் மாற்று போர்டிங் ஸ்டேஷன் பிரிவின் கீழ் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து புதிய போர்டிங் ஸ்டேஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
o முடிந்ததும், உங்கள் மொபைல் எண்ணில் புதுப்பிக்கப்பட்ட போர்டிங் பாயின்ட் குறித்த செய்தியைப் பெறுவீர்கள்.

நீங்கள் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் கவனிக்கவேண்டிய விஷயங்கள்
o இந்த வசதி ஆன்லைன் முன்பதிவுகளுக்கு மட்டுமே.
o போர்டிங் பாயிண்ட் மாற்றம் ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படும். போர்டிங் பாயிண்ட் ஒரு முறை மாற்றம் செய்யப்பட்டால் அதே பயணத்தில் மறுபடியும் மாற்றம் செய்ய இயலாது.
o போர்டிங் பாயிண்ட் மாற்றத்தை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மட்டும் தான் செய்யலாம்.
o பயண முகவர்கள் அல்லது பயணிகள் முன்பதிவு அமைப்பு மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு இந்த வசதி பொருந்தாது.
o VIKALP விருப்பத்துடன் PNR களுக்கு போர்டிங் பாயின்ட் மாற்றம் அனுமதிக்கப்படாது.
o டிக்கெட் கைப்பற்றப்பட்டால் போர்டிங் பாயின்ட் மாற்றம் அனுமதிக்கப்படாது.
o ஐ-டிக்கெட்டுக்கு ஆன்லைன் போர்டிங் பாயிண்ட் மாற்றம் அனுமதிக்கப்படாது.