Search
  • Follow NativePlanet
Share
» »தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!

தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!

திற்பரப்பு நீர்வீழ்ச்சி திற்பரப்பு நீர்வீழ்ச்சி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது, குமரி குற்றாலம் என அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவிலும் உள்ளது.

இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டு உள்ளது. தக்கனின் வேள்வியை கலைத்த பிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கீழ் பகுதி வட்டமாகவும், மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திற்பரப்பு திகழ்கிறது. திற்பரப்பு அருவியிலிருந்து 5 கி.மீ தொலைவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருநந்திக்கரை குகைக் கோவில்கள் உள்ளன.

இந்த அருவியில் குளிப்பதற்கு ஆண்களுக்கு ஆழமான பகுதியும், பெண்களுக்கு ஆழமற்ற பகுதியும் தனித்தனியாக உள்ளன. உடை மாற்றும் பகுதியும் தனியாக இருக்கிறது. இந்த அருவி தமிழ்நாடு சுற்றுலா துறையினால் பராமரிக்கப்படுகிறது.

இந்த ஆறு காடுகளின் வழியாக பாய்ந்து வருவதால் பல மூலிகைகளின் குணம் தண்ணீரில் சேர்கிறது. கால்களில் உள்ள பித்தவெடிப்பு , மற்ற தோல் நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக சொல்லப்படுகிறது.

மக்களும் குறைந்தது ஒரு மணி நேரமாவது குளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு என்று தனியாக நீச்சல்குளம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முதல் உள்நாட்டு மக்களும் வந்து செல்லும் இந்த அருவியில் காலை முதல் மாலை வரை எல்லா நாட்களிலும் அனுமதி உண்டு.

பேருந்து வசதி ஒரு குறை. சொந்தமாக வாகனம் வைத்து இருந்தால் நன்றாக இருக்கும். நேரம் கிடைத்தால் ஒரு முறை குடும்பத்துடன் சென்று வாருங்கள்.

tada waterfalls

குற்றாலம் அருவி

'பேரருவி', 'குற்றால அருவி' அழைக்கப்படுகிறது. தென்காசி ரயில் நிலையம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து குற்றாலத்திற்கு பேருந்து வசதி உண்டு. மதுரையிலிருந்து நிறைய பேருந்துகள் குற்றாலம் வரை செல்கிறது.

தென்னகத்தின் "ஸ்பா" என அழைக்கப்படுகிறது. குற்றால அருவி நீர், பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் என்பதால், இதில் நீராடுவது உடலுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவக்காலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழும். சுற்றுலா மக்களைக் கவரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள்தான் "குற்றால சீசன்". வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இரண்டு நாட்கள் தங்கி செல்வதை விரும்பும் வகையில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

கேரளாவில் பிரபலமான நேந்திரங்காய் சிப்ஸ் தமிழ்நாட்டில் அதிகம் கிடைப்பதும் இங்கேதான். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடுகிறது. குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன.

முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருவியில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும். அனைத்து அருவியிலும் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் தேய்த்து குளிக்க, நீதிமன்ற தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உங்களுக்கு லக் இருந்தா? ஏப்., மாதங்களில் ஓரிரு நாட்கள் தண்ணீர் விழும்.

ஐந்தருவி

குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க இரு கிளை அருவிகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன.

சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது. குற்றால சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஐந்தருவி அருகே அமைந்துள்ள 'சுற்றுச்சூழல் பூங்கா' கவர்ந்திழுக்கிறது. கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை பார்த்து ரசிக்க ஏராளமானோர் குடும்பத்துடன் படையெடுக்கின்றனர். நீரோடை பாலம், நீரூற்று, சிறுவர் விளையாட்டு திடல், தாமரை குளம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

கொன்றை மலர்கள், இட்லிப்பூக்கள் என பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீரோடை பாலத்தின் ஓரம் அமைக்கப்பட்ட பார்வையாளர் மாடத்தில் இருந்து சல சலவென்ற சத்தத்துடன் பாய்ந்து செல்லும் பழத்தோட்ட அருவியின் அழகை ரசிக்கலாம்.

தொடர்ந்து பல மாதங்களுக்கு மழை பெய்யாவிட்டாலும் குற்றாலம் ஐந்தருவியில் மட்டும் தண்ணீர் கொஞ்சமாவது விழுந்துக்கொண்டிருக்கும் ரகசியம் என்ன தெரியுமா... வேறு ஒன்றுமில்லை. மெயின் அருவியின் நீரோடையில் மனித ஆக்கிரமிப்புகள் அதிகம்.

ஐந்தருவியின் நீரோடையில் மனித ஆக்கிரமிப்பு குறைவு. நேரம் கிடைக்கும் போது வனத்துறை அலுவலகத்தில் அனுமதிப் பெற்று, மெயின் அருவியின் நீரோடையை பின்தொடர்ந்து சுற்றிப்பாருங்கள். அதன்வழியே மலைத்தோட்டப் பயிர்கள் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள், குட்டி குட்டி இந்து மத வழிபாட்டு ஸ்தலங்கள் இருப்பதை காண முடியும்.

agasthiyar waterfalls

பழைய குற்றாலம் அருவி

குற்றாலம்-கடையம் செல்லும் பாதையில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது, பழைய குற்றால அருவி. குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.

300 அடிக்கு மேல் உயரத்திலிருந்து இந்த அருவி விழுகிறது. இங்கும் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே குளிக்க வசதி உள்ளது. பெண்கள் காசு கொடுத்து, துணி மாற்றும் அறைகளைப் பயன்படுத்துவது நல்லது.

அருவியில் குளித்து முடித்த உடன் குளிர்ந்த உடம்புக்கு இதமான மிளகாய் பஜ்ஜி, வடை, டீ, காபி என, ஏகப்பட்ட நாக்கு ருசி தரும் உணவுவகைகள் உண்டு. மலைப் பழ வகைளை குவியல், குவியலாக வைத்து விற்பனைக்கு கிடைக்கும்.

விவரத்துடன் கேட்டு வாங்க வேண்டும். குற்றாலத்தில் அருவி மட்டும்தான் என எண்ணி விடாதீர்கள். குற்றாலநாதர் திருக்கோவில், சித்திரசபை, படகுக் குழாம், பாம்புப் பண்ணை, சிறுவர் பூங்கா ஆகியவையும் உண்டு.

குற்றாலத்தில் உள்ள குரங்குகள் வினோதமானவை. கையில் வைத்திருக்கும் பொருளை தைரியமாக வந்து பறித்துச் செல்லும். குற்றாலம், திருநெல்வேலியில் இருந்து 59 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. பேருந்திலும் செல்லலாம். ரயிலில் தென்காசி வரை சென்று அங்கிருந்து நகர்ப் பேருந்து மூலம் குற்றாலம் செல்லலாம். பிரதான அருவியில் இருந்து ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றுக்கு நகர்ப் பேருந்து வசதி உண்டு.

குற்றாலத்தில் தங்கும் வசதிகள் உள்ளன. இரண்டு படுக்கை கொண்ட அறைகள் வாடகைக்குக் கிடைக்கும். தனியான குடில்களும் உண்டு. வசதிக்கு ஏற்ப கட்டணமும், உணவு விடுதிகளும் உள்ளன. ப்ரீயா மசாஜ் பண்ணணும்னா... மேலே இருந்து விழும் அருவில் கொஞ்சம் நின்னு பாருங்க... உண்மையான மசாஜ் எப்படி இருக்கும்னு அந்த வெள்ளி அருவியின் துளிகள் உங்களுக்கு உணர்த்தும்.

ஆகாய கங்கை அருவி

கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.

தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த குற்றாலம் அருவியில் கூட, சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டும். ஆனால் இந்த அருவியில் மழைக்காலங்களில் அதிக அளவிலும், கோடைகாலங்களில் குறைந்த அளவிலுமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும்.

இந்த அருவிக்கு அறப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து செங்குத்தான 1000 படிகளில் இறங்கி செல்ல வேண்டும். முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் செல்ல முடியாது என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அறப்பளீஸ்வரர் கோவில் அருகே உள்ள சிற்றருவியில் இவர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இங்கு நீராடும் சுற்றுலா பயணிகள், அறப்பளீஸ்வரரை தரிசித்து விட்டு, ஓய்வு எடுப்பதற்கு வசதியாக கோவில் முன் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் பகுதியாக வாடலூர்பட்டியில் உள்ள படகு இல்லம் திகழ்கிறது.

இந்த படகு இல்லத்தில் ஏற்கனவே 4 படகுகள் இருந்தன. தற்போது மேலும் 3 புதிய படகுகள் வாங்கி, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து படகு சவாரி செய்யாமல் திரும்பாதீங்க.

மகளிர் சுயஉதவி குழு மூலம் இப்படகு இல்லம் பராமரிக்கப்படுவதால், மிக குறைவான கட்டணத்திலேயே சவாரி செய்ய முடிகிறது. அத்துடன் படகு இல்லத்தின் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவும் நிறுவப்பட்டு உள்ளது.

cortallam waterfalls

கேத்ரின் நீர்வீழ்ச்சி

பசுமையான தேயிலை தோட்டங்கள், அழகிய மலை முகடுகளின் வழியே வழிந்து, பாறைகளை நனைத்து, பார்வையாளர்களின் மனதையும் நனைக்கிறது கேத்ரீன் நீர்வீழ்ச்சி. கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் அரவேணுவில் இருந்து 2.5.கி.மீ., தொலைவில் உள்ளது.

காட்சி கோபுரத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு செல்பவர்கள், தண்ணீரில் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். சற்று கவனம் சிதறினாலும் பாசி படிந்திருக்கும் பாறைகள், காலை வாரி விடும்.

காட்சிக் கோபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை தாண்டினாலும், விபத்து ஏற்படும். நீர் வீழ்ச்சியை ரசிக்க செல்பவர்கள் இதை கடைபிடித்தால், இனிமையான சுற்றுலாவாக இருக்கும். அழகான புகைப்படம் எடுக்க சிறந்த இடம்.

குன்னூரிலிருந்து 20 கி.மீ, கோத்தகிரி, ஊட்டியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. நீலகிரி மலைப்பகுதியின் இரண்டாவது மிகப்பெரிய அருவி கேத்ரின் நீர்வீழ்ச்சியாகும். நல்ல மலையேற்ற தலமாகவும் விளங்கும் இந்த அருவிக்கு, கோத்தகிரியிலிருந்து தனியார் வாகங்களின் மூலம் செல்லலாம்.

உலக்கை அருவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் வாய்ந்த அருவியாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தோவாளை தாலுக்காவிலுள்ள அழகியபாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த அருவியில் எல்லா மாதமும் நீர் வந்து கொண்டு இருக்கும். காடுகள் வழியாகச் செல்லும் ஒதுக்கப்பட்ட பாதைகள் மூலமே இந்த அருவியை அடைய முடியும்.

அருவியில் குளிப்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்குமாகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே அதிகம் வருகின்றனர். அருவியை சுற்றிப் பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா காடுகளும், மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன.

நீர்வீழ்ச்சி மலை அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. எனவே உலக்கை அருவிக்கு செல்வது சிறந்த மலையேற்ற பயிற்சி செய்வது போன்றதாகும். பூதப்பாண்டியையொட்டியுள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உள்ள இந்த அருவி, மலை உச்சியில், சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக பாய்கிறது.

சற்று தொலைவில் இருந்து இதனைப் பார்க்கும்போது ஒரு பெரிய உலக்கைபோல் காட்சிதருகிறது. இதனைக் கண்டுகளிக்கவும், ஏராளமான மூலிகைகளுடன் கலந்துவரும் தண்ணீரில் குளித்து மகிழவும் சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர்.

அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டும், அருவியில் நீராடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

வெள்ளி நீர்வீழ்ச்சி

கொடைக்கானல் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பன்னீர் தெளித்து வரவேற்பது போல இயற்கையாகவே அமைந்துள்ளது வெள்ளி நீர்வீழ்ச்சி. கொடைக்கானல் ஏரி மற்றும் பல இடங்களிலிருந்து மலைப் பாதை வழியாக வந்து 180 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டும் இடம்தான் வெள்ளி நீர்வீழ்ச்சி.

பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கும். கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருவியில் குளிக்க முடியாது. ஆனால் அந்த அருவி முன் நல்ல போட்டோ சூட் எடுக்கலாம். கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி காணும் இடமாகவும் வெள்ளி நீர்வீழ்ச்சி இருக்கிறது.

திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் போகும் வழியில் சாலையின் அருகில் அமைந்துள்ளது. அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் அருவியுடன் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். வெள்ளி நீர்வீழ்ச்சியில் குரங்கு தொல்லை அதிகமாக இருக்கும். வெள்ளி நீர்வீழ்ச்சியை காலை 6 மணியிலிருந்து இரவு 6 மணிவரை அருகில் சென்று பார்க்கலாம்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+