» »மதுரையும் மார்டின் ஸ்கார்சஸியும்

மதுரையும் மார்டின் ஸ்கார்சஸியும்

Written By: Staff

வருடத்தில் எத்தனையோ படங்கள் வருகிறது; ஆனால், சில படங்கள்தான் ஒரு குறிப்பிட்ட நகரை, நகரின் தனித்தன்மையை, அந்த நகரின் மக்களைப் பிரதானப்படுத்தி நெய்யப்பட்ட படங்களாய் வருகிறது. அப்படிப்பட்ட சில‌ படங்களைப் பார்க்கலாம் :

ஜிகிர்தண்டா - மதுரை

jigar

மதுரையை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் மதுரையை அழகாய் காட்டிய‌ ஒரே படம் ஜிகிர்தண்டா. குறிப்பாக, இரவு நேர மதுரையை, சிறு வீதிகளை, கையேந்தி பவன்களை காட்டியவிதம் பிரமாதம். கார்த்திக் சுப்புராஜ், ஓளிப்பதிவாளர் கேவ்மிக் யு ஏரி இருவரின் தேர்ந்த பங்களிப்பு திரையில் கண்கூடாய் தெரிந்தது. ஓளிப்பதிவாளர் பயன்படுத்திய பிரத்யேக லைட்டிங்குகள், வித்தியாச கலர் டோன்கள் எல்லாமே தமிழ் சினிமாவிற்குப் புதிது.

பல காட்சிகள் என்னமோ ஓவியங்களைப் பார்ப்பதன் பிரமை தந்தது.

சமீப வருடங்களில், சிறந்த பாடல் படமாக்கம் என்று யோசித்தால் கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சா.... சட்டெனத் தோன்றுகிறது. வீடுகளுக்குள் இருக்கும் ஒளியமைப்பு, மார்கெட் வீதியில் இருக்கும் ஒளியமைப்பு, கோவிலுக்குள் இருக்கும் ஒளியமைப்பு ஒவ்வொன்றிற்கு வேறுபாடு காட்டியிருக்கிறார்.

விளைவு : மதுரை படு பிரமாதமாய்த் தெரிகிறது.

நேருக்கு நேர் - பாய்ஸ் - சென்னை.

nerukku

தமிழ் சினிமாவின் பல படங்களின் பிரதான களம் சென்னை. ஆனால், உலகமயமாக்கலுக்குப் பிறகுள்ள சென்னையை, மாறி வரும் இளைஞர் மன நிலையை இரண்டு படங்கள் முதன் முதலாய் காட்டியது. 

அக்னி நட்சித்திரம் 80'களின் சென்னையை காட்டியது என்றால் ஒன்பதே வருடங்களில் - பெப்ஸி, பீட்சா ஹட் , ஷாப்பிங் மால்கள், என மாறி வரும் சென்னையைக் காட்டியது நேருக்கு நேர். இதற்கும் ஒரு படி மேலே போய் சென்னையை அழகாய் காட்டிய படம் பாய்ஸ். உலகமயமாக்கலக்குப் பிறகுள்ள சென்னையை, ஈ.சி.ஆர் சாலையில் தோன்றிய கடல் சார் உணவகங்களை, மாறி வரும் இளைஞர்களின் விருப்பு வெறுப்பை, உணவு பழக்கத்தை காட்டிய படம் பாய்ஸ்.

27 Down - மும்பை

27down

எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் சுயசரிதையில் ஒரு குறும்பான வரி வரும் Bombay is the only City in India; while the Calcutta and Madras are overgrown villages. அது மிகச் சரியான வாக்கியம். 90'கள் வரை வெளிநாட்டுப் பயணிகளுக்கு, உலகத்திற்கு, இந்தியாவில் தெரிந்த, நகரம் என்று ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரே நகரம் மும்பை மட்டும்தான்.

மும்பையை எண்ணற்ற படங்கள் களனாக வைத்து, நேர்த்தியாய் காட்டியிருக்கின்றன. ஆனால், மும்பை ரயில் நிலையத்தை 27 Down போல் எந்தப் படமும் காட்டியதில்லை.

அவ்தார் கிருஷ்ணா கவுல் இயக்கிய இப்படத்திற்கு சிறந்த ஹிந்திப் படம் மற்றும் ஓளிப்பதிவிற்கான‌ தேசிய விருது கிடைத்தது.

அப்பாவின் கட்டாயத்தால் மும்பை ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராய் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை. அவனது கனவுகள், ஆசைகள் வாழ்வின் ஓவ்வொரு கட்டத்திலும் எப்படி தன் அப்பாவால் அழிந்து போகின்றன என்பதை ரயில்களின் பின்னணியில் சொல்லிய அற்புதமான படம்.

இந்திய சினிமாக்களில் தலைசிறந்த ஓளிப்பதிவு கொண்ட படங்களில் இந்தப் படம் கட்டாயம் இடம்பெறும். ஷாட்களின் நேர்த்தி - மும்பை ரயில் நிலையத்தில், ரயில் வந்து சேரும்போது, சாரை சாரையாய் மக்கள் ரயிலை விட்டு வெளியே வரும் காட்சி வெகு பிரசித்தம்.

டாக்சி ட்ரைவர் - நியு யார்க்

taxi

மார்டின் ஸ்கார்ஸசியின் சிறந்த படங்களில் ஒன்று டாக்சி ட்ரைவர். படத்தின் களன் நியு யார்க். நியு யார்க்கை மையப்படுத்தி பெருமை சேர்த்த படங்களில் முதன்மையானது இந்த டாக்சி ட்ரைவர் (இன்னொன்று: வுடி ஏலன் இயக்கிய மேன்ஹாட்டன்)

படத்தின் நாயகன், ராபர் டி நிரோ, வியட்நாம் போரில் பணியாற்றிவிட்டு, நியு யார்க்கில் டாக்சி ஓட்டும் தொழிலுக்கு வருகிறார். தீவிர தூக்கமின்மை நோய், தனிமை, இரவு நேர நியு யார்க் நகரத்தில் சர்வ சாதாரணமாய் நடக்கும் பாலியல் சார்ந்த பிரச்சனைகள் அவரை மன நோய்க்குத் தள்ளுகிறது. கற்றது தமிழ் பிரபாகரன் கதா பாத்திரம் இதன் பாதிப்பில் வந்திருக்கலாம்

படம், நியு யார்க்கின் புற நகர் வீதிகள், பிரதான சாலைகள், நிறவெறி சார்ந்த பிரச்சனைகள் என பலவற்றையும் பேசுகிறது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்