இந்தியாவில் இருக்கும் பொது போக்குவரத்து சேவைகளான பேருந்து, ரயில், விமானம் மற்றும் கப்பல்களில் நாம் பயணித்து இருப்போம். ஆனால் மிகவும் த்ரில் ஆன ரோப்வே கார்களும் கூட இந்த போது போக்குவரத்து சேவைகளில் சேர இருக்கிறது. ஆம்! முதன் முதலாக இது உத்தரப்பிரதேச மாநிலத்தின் "இந்தியாவின் மிகவும் பழமையான நகரமான வாரணாசியில்" தொடங்கவிருக்கிறது. மேலும் இந்த புதிய ரோப்வேக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி செல்ல உள்ளார். இதனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

உலகப்புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில்
காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வாரணாசியின் புகழ்பெற்ற மலைத்தொடர்கள் ஆகிய இரண்டிற்கும் மிக அருகில் உள்ள இடங்களில் ஒன்று கோடௌலியா சௌக் ஆகும். ரோப்வே திட்டம் வாரணாசி கான்ட் முதல் கோடௌலியா சௌக் வரையிலான பகுதியை இணைக்கும். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உத்தரப்பிரதேசத்தின் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தருகின்றனர். ரோப்வே கார்கள் இந்த உலகப்புகழ்பெற்ற நகருக்கு வருகை தரும் மக்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை வழங்குவதோடு, சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்.

நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப்வே
ரோப்வேயின் நீளம் கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர்கள் மற்றும் கோடௌலியா சௌக் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இடமாகும். இது தவிர, ரோப்வே கிரிஜா கர், வாரணாசி கான்ட், ரத யாத்ரா, கோடௌலியா சௌக் மற்றும் வித்யாபீத் ஆகிய ஐந்து நிலையங்களை உள்ளடக்கும். இந்த புதிய போக்குவரத்து முறை பயண நேரத்தை பதினைந்து நிமிடங்களாக குறைக்கும் என கூறப்படுகிறது. இந்த புதிய போக்குவரத்து முறைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் உதவி
இந்த திட்டம் பிரதமர் மோடியின் பாராளுமன்ற தொகுதியில் மிகவும் மதிப்புமிக்க திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கட்டுமானத்திற்காக M/s விஸ்வ சமுத்ரா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட M/S Bartholet Maschinenbau AG உடன் இணைந்து செயல்படும்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ரோப்வே
மாநில தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். சம்பிரதாயங்களை முடித்துவிட்டு மார்ச் 2023க்குள் பணிகளைத் தொடங்குமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். வாரணாசியின் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் இது என்றும் அவர் கூறினார். இந்த புதிய முறை போக்குவரத்து முறை நெரிசலைக் குறைக்கவும் உதவும். கூடுதலாக, நகரம் சுற்றுலாப் பயணிகளால் சலசலக்கிறது மற்றும் ரோப்வே ஒரு சிறந்த ஈர்ப்பாக இருக்கும். மேலும் இது நகரத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம் என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.

பொது போக்குவரத்தில் இணையும் ரோப்வே
ரோப்வே அமைப்பு இந்தியாவில் புதியதல்ல, ஆனால் நகர்ப்புறங்களில் பொதுப் போக்குவரத்து முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. குல்மார்க், பாட்னிடாப், மணாலி, முசோரி, காங்டாக் மற்றும் அவுலி போன்ற வடக்கு மலைப் பகுதிகள் வான்வழி போக்குவரத்து அமைப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் அவை சுற்றுப்புறத்தின் அழகிய காட்சியை வழங்குகின்றன. மலைப்பாங்கான பகுதிகளில் இந்த முறை பயனுள்ளதாக இருந்தாலும், வாரணாசியில் இதை செயல்படுத்த முடிவு செய்திருப்பது வெற்றிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
நீங்கள் அடுத்தமுறை வாரணாசிக்கு செல்லும் போது இந்த பொது ரோப்வே கார்களில் பயணிக்கலாம் மக்களே! தமிழ்நாட்டின் பழநி முருகன் கோயிலில் ரோப்வே கார்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications





