» »தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட இடங்கள்

தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட இடங்கள்

Written By: Staff

இந்தியாவில் எத்தனையோ நகரங்கள், நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. ஆனால், அவைகளுக்கு எல்லாம் கிடைக்காத சிறப்பு சில சிறு நகரங்களுக்கு, பெயரே தெரியாத ஊர்களுக்கு கிடைத்திருக்கிறது. காரணம் : இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் இந்த இடங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது. 

Vellore

Photo Courtesy : Eliduwiki

வேலூர் :

இந்தியாவின் முதல் சிப்பாய்க் கலகம் என்றால் எல்லோரும் 1857'இல் என்று பரவலாக சொல்வார்கள்; வரலாற்றிலும் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், 1806'இல் சிப்பாய் கலகத்திற்கான முதல் விதை தூவப்பட்டது நம் வேலூரில்தான்.

இரண்டு காரணங்களை சொல்கிறார்கள்.
1. பணியில் உள்ள சிப்பாய்களை, மத அடையாளங்களை துறக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள்.
2. திப்பு சுல்தானின் மகன்கள், வேலூர் கோட்டையில், ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களின் தூண்டுதலும் ஒரு காரணம்.

மணியாச்சி ரயில் நிலையம்:

Maniyachi

Photo Courtesy : Sundar

தூத்துக்குடி அருகே இருக்கும் இந்த சின்ன‌ ரயில் நிலையம், இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு முக்கிய நினைவுச் சின்னமாக விளங்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 1911'ஆம் வருடம், ஜூன் 17'ஆம் தேதியில், மணியாச்சி ரயில் நிலையத்தில், ராபர்ட் ஆஷ் என்ற மாவட்ட ஆட்சியரை, வாஞ்சிநாதன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார். இதன் நினைவாக இன்று வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.

புதுச்சேரி:

(அன்று) புதுச்சேரி, ப்ரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு அங்கமாக வகிக்கிறது. அதற்கு காரணம் பாரதி. பாரதி தன் இலக்கியம் மற்றும் பத்திரிகை பணிகளுக்கு ப்ரிட்டிஷ் அரசால் பெரும் தொல்லை நேர்ந்தபோது புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்தார்.

Pondicherry

Photo Courtesy : Wikipedia

இங்குதான் பாரதிக்குப் பல புரட்சியாளர்களின் நட்பு கிடைத்தது. அரவிந்தர், வி.வி.எஸ். அய்யர் போன்றோரும் இங்குதான் இருந்தனர். பாரதி, இந்தியா, விஜயா, பால பாரதம்(ஆங்கிலம்) போன்ற பத்திரிகைகளை நடத்தினார்.

திருப்பூர் :

திருப்பூர் குமரன், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் வெடித்தது.

Kumaran

Photo Courtesy : Wikipedia

திருப்பூரில், 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று, தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில், குமரன் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தலைமை ஏற்றுச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாளே அவர் உயிர் பிரிந்தது. இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார். 2004'இல் இவரின் நினைவாக தபால் தலை ஒன்றை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, திருச்செந்தூர் :

18ம் நூற்றாண்டைச் சேர்ந்த , மதுரை நாயக்கர் அரசின் பாள‌யக்காரராக விளங்கிய, பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீர பாண்டிய கட்டபொம்மனால் இக்கோட்டை கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

Kattabomman

Photo Courtesy : Wikipedia

இந்தக் கோட்டைக்கும் சுதந்திரப் போரட்டத்திற்கும் தொடர்பு உள்ளது. 1799ல், மன்னன் வீர பாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்ட போரின் போது, ஆங்கில அரசு இந்தக் கோட்டையை கைப்பற்றியது. பின்னர், அவரது சகோதரர், ஆங்கில அரசிடமிருந்து இந்தக் கோட்டையை மீட்டார்.

சுதந்திரத்திற்குப் பின், இந்திய தொல்பொருள் ஆய்வகம், இந்தக் கோட்டையை நிர்வகித்து வருகிறது. 1974ல், தமிழக அரசு, பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் நினைவாக ஒரு புதிய கோட்டையை கட்டி, அதற்கு 'கட்டபொம்மன் நினைவுக் கோட்டை' எனப் பெயரிட்டது