இந்த வார இறுதியில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ண ஒரு சூப்பர் இடத்தை நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்! சென்னையிலிருந்து வெறும் 1 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த குமிழி ஏரியில் நீங்கள் குளிக்கலாம், குழந்தைகள் விளையாடலாம். இந்த ஏரிக்கு செல்லும் வழியே மிகவும் பச்சை பசேல் என இருப்பதால் நீங்கள் ஏதோ ஒரு கிராமத்திற்கு செல்வதை போன்ற ஆனந்த உணர்வை தருகிறது! வீட்டில் சமைத்த உணவை, ஏரிக்கு அருகில் ஒரு பாய் போட்டு அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டே சாப்பிட இது ஒரு சூப்பரான பிக்னிக் ஸ்பாட் ஆகும்!
சென்னைக்குள் இப்படி ஒரு அழகிய இடமா?
சென்னைக்குள் ஒரு மறைக்கப்பட்ட ரத்தினம் போல சொர்க்க பூமியான குமிழி ஏரி சென்னையின் புறநகரில் அமைந்துள்ளது. பெரிய ஏரி ஒரு பக்கம் மலை மற்றும் காடுகளுடன் ஒரு அழகிய காட்சியை வழங்குகிறது, மேலும் ஏரி முழுவதும் பறவைகள் கூடுகின்றன. இயற்கையாகவே, இந்த ஏரி பரபரப்பான நகரத்திலிருந்து இயற்கையைத் தழுவிச் செல்ல சரியான இடமாக மாறிவிட்டது.

புதிய சுற்றுலாத் தலமாக மாறிய குமிழி ஏரி
சென்னை கேளம்பாக்கம் அருகே அமைந்திருக்கும் குமிழி ஏரி முழுவதுமாக நிரம்பி இருப்பதால்அந்த இடமே அழகிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. சென்னை வாசிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் மக்களும் கூட்டம் கூட்டமாக இந்த அழகிய இடத்திற்கு படையெடுத்து வருகின்றனர். குடும்பம் குடும்பமாக குமிழி ஏரிக்கு வருகை தரும் மக்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கை, கால் நனைத்து, மீன் பிடித்து மகிழலாம்
முழுதாக நிரம்பி வழியும் ஏரியை காண மக்கள் திரள் திராளாக வருகை தருகின்றனர். ஆனால் சில இடங்களில் ஏரி ஆழமாக இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். நீங்கள் கரை ஓரமாக அமர்ந்து அழகிய மலைகளையும் சுற்றியுள்ள பசுமையையும் ரசிக்கலாம். அல்லது பாதுகாப்பாக அமர்ந்து குளிக்கலாம், நீச்சல் தெரிந்தால் கண்டிப்பாக நீச்சல் அடிக்கலாம். ஆனால் நீச்சலடிப்பது பாதுகாப்பானது அல்ல என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஆதலால் பாதுகாப்பாக கரை ஓரமாக நடந்து செல்லலாம், மீன் பிடிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

குடும்பத்தோடு பிக்னிக் செல்ல ஏற்ற இடம்
இங்கே வந்தால் இயற்கை அழகை ரசிக்க மட்டும் தான் முடியுமா என்று எண்ண வேண்டாம். ஏரியை சுற்றி அழகான வயல்களும், மரங்களும், காடுகளும் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது. நீங்கள் அமர்வதற்கு போர்வை அல்லது பாய், சாப்பிடுவதற்கு சாப்பாடு கொண்டு வந்து இங்கே பொழுதையும் கழிக்கலாம். நிச்சயம் நீங்கள் ஏதோ ஒரு அழகிய கிராமத்திற்கு சென்று வந்தது போல ஒரு வித்தியாச உணர்வை இந்த ட்ரிப் உங்களுக்கு வழங்கும்.
கண்டிப்பா அனைவரும் செல்ல வேண்டிய இடம்
இந்த ஏரி மிகவும் பெரிய ஏரி என்பதால், நீர் வரத்து வருடத்தின் எல்லா மாதங்களிலும் இருக்கும் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். நீங்கள் பெண்கள், குழந்தைகளுடன் வருகிறீர்கள் என்றால் வார இறுதியில் சென்று வாருங்கள். வார இறுதிகளில் நீங்கள் குடும்பங்களின் கூட்டத்தை மட்டுமே காணலாம். நீங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வருகிறீர்கள் என்றால் வார நாட்களில் சென்று வாருங்கள். தனியா, ஜாலியா இருக்க வார நாட்கள் தான் பெஸ்ட்.
குமிழி ஏரிக்கு எப்படி செல்வது?
குமிழி ஏரி கேளம்பாக்கம், படூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி மக்களுக்கு அருகில் அமைந்துள்ளது. வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள குமிழி ஏரிக்கு நீங்கள் Google Maps குமிழி ஏரி என்று டைப் செய்தால் போதும். அதை அப்படியே பாலோ பண்ணி இந்த அழகிய இடத்திற்கு பிக்னிக் போயிட்டு வாங்க! ஆனால் பகல் வேளையில் செல்வதே பரிந்துரைக்கப்படுகிறது!



Click it and Unblock the Notifications





