» »ஒரே பயணத்தில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள்...

ஒரே பயணத்தில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள்...

Written By: Sabarish

இவ்வுலகில் உயிர்கள் வாழ நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகிய இந்த ஐந்து வகையான இயற்கை சக்திகள் அத்தியாவசியமானது என நாம் அறிவோம். இந்த ஐந்து வகையான இயற்கை சக்திகள் 'பஞ்ச பூதங்கள்' அல்லது பஞ்ச பூத சக்திகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சக்திகளில் ஒன்று இல்லாவிடினும், உயிர்கள் வாழ்வது, குறிப்பாக மனித வாழ்வு சாத்தியம் இல்லை.

பஞ்சபூதங்கள்

பஞ்சபூதங்கள்


இந்த ஐந்து சக்திகளுக்கும் உலகை ஆக்கும் வல்லமையும், காக்கும் வல்லமையும், அழிக்கும் வல்லமையும் உண்டு. இந்த வல்லமையைக் கருத்தில் கொண்டு ஐம்பெரும்சக்திகள் என்றும் தமிழில் அழைப்பதைப் போல சமஸ்கிருதத்தில் பஞ்சபூதங்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த ஐம்பூதங்களின் அதிபனாக இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் தென் இந்தியாவின் ஐந்து கோவில்கள் பஞ்சபூத சிவதலங்களாக விளங்குகின்றன. அத்தகைய கோவில்கள் அனைத்திற்கும் ஒரே பயணம் சென்று வழிபட விரும்புகிறீர்கள் என்றால் முன்னதாக கீழே தரப்பட்டுள்ள குறிப்புகளை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Jagadeeswarann99

சிதம்பரம் நடராசர் கோவில்

சிதம்பரம் நடராசர் கோவில்


சென்னையில் இருந்து பஞ்சபூத தலங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டீர்கள் என்றால் முதலில் அருகில் உள்ள கோவிலில் இருந்து அடுத்தடுத்த கோவிலுக்கு பயணம் செய்வது சிறந்தது. அதன்படி, சென்னையில் இருந்து 217 கிலோ மீட்டர் தொலைவில் கடலூர் அடுத்து அமைந்துள்ள சிதம்பரம் கோவில் முதல் தேர்வாக இருக்கட்டும். கடற்கரை வழிச் சாலையில் எளிதிலும் இத்தலத்தை அடைந்து விடலாம்.

Karthik Easvur

சிதம்பரம் நடராசர்

சிதம்பரம் நடராசர்


சிவனின் பல ரூபங்களில் ஒன்றான நடராஜர் எனப்படும் நடன அவதாரக்கோலம் என்று கூறும்போதே அடுத்து நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் கோவில்தான். சோழ வம்சத்தின் அடையாளச்சின்னமாக அறத்துக்கும் ஆன்மீகத்துக்கும் திராவிட பூமியின் முன்னோர்கள் அளித்துச்சென்ற அங்கீகாரமாக இக்கோவில் விளங்குகின்றது. இதுவே பஞ்தலங்களில் ஆகாயத்திற்கு உரிய தலமாக போற்றப்படுகின்றது.

SARAVANAN UTHAYASURIAN

தலஅமைப்பு

தலஅமைப்பு


சிதம்பரம் நடராஜர் கோவில் வெறும் ஆன்மீகத் தலம் மட்டுமின்றி சோழர்களின் கட்டிடக் கலைக்கும் சான்றாக திகழ்கிறது. கோபுர வாயிலை தாண்டி கோவில் வளாகத்தில் கால் பதித்த உடனேயே நம்மை சூழ்ந்து கொள்கிறது புராதன திராவிடக் கட்டிடக்கலையின் வரலாறுகள். நகரின் மையப்பகுதியில் ஒரு பிரமாண்ட நீள்சதுர அமைப்பில் வீற்றிருக்கும் இந்த கோவிலின் ஒட்டுமொத்த வளாகமும் கோட்டைச்சுவர்கள் போன்று 10 மீட்டர் உயரம் கொண்ட கருங்கல் சுவர்களால் பிரிக்கப்பட்ட அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது. அதாவது கோவிலின் கருவறை அமைப்பு தரைமட்டத்திற்கு கீழே பாதாளவெளியில் வீற்றிருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

Ms Sarah Welch

கலை நுணுக்கங்கள்

கலை நுணுக்கங்கள்


வெளிவாசலை கடந்தவுடன் முதல் பிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி கோட்டைசுவர் அமைப்பினால் நாற்புறமும் சூழப்பட்டு இடம்பெற்றுள்ளது. அதற்கடுத்து ராஜகோபுர வாசல் வழியாக உள் நுழைந்தபின் கருங்கற்கள் பதிக்கப்பட்ட அடுத்த பிரகார வளாகப்பகுதி காணப்படுகிறது. நான்கு திசையிலும் உள்ள கோபுரங்கள் ஒன்றுக்கொன்று நேர் கோட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கலைநயம் மிளிரும் நடைக்கூடம் அவ்வளவாக கவனிக்கப்படாமல் இருந்தாலும் இது கோவிலின் நுணுக்கமான கட்டிடக்கலை அமைப்புக்கான சான்றாய் தோற்றமளிக்கின்றது.

Nittavinoda

சிதம்பரம் - திருவாரூர்

சிதம்பரம் - திருவாரூர்


சிதம்பரத்தில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் சுரக்குடி, சேந்தமங்கலம் அடுத்து அமைந்துள்ளது திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோவில். தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோவில்களுள் இதுவும் ஒன்று. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில் 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சுமார் 33 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட ஏராளமான சந்நிதிகளுடன் பிரம்மாண்டமாகக் காணப்படும் இது பஞ்சபூதங்களில் நிலத்திற்கானதாக திகழ்கிறது.

Kasiarunachalam

தலஅமைப்பு

தலஅமைப்பு

தியாகராஜசுவாமி கோவிலில் மூலஸ்தானம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதியில் வான்மிகிநாதர் என்ற சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியில் தியாகராஜருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வான்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். இதில், வான்மிகிநாதரின் சந்நிதியில் வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kasiarunachalam

திருவாரூர் டூ திருவானைகாவல் - நீர்

திருவாரூர் டூ திருவானைகாவல் - நீர்


திருவானைகாவல் அல்லது திருவானைகோவில் என்றழைக்கப்படும் இந்த தொன்மை வாய்ந்த நகரம் திருவாரூரில் இருந்து திருவையாறு வழியாக 116 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சாவூர் வழியாக 119 கிலோ மீட்டர் தூரத்திலும் காவேரி ஆற்றின் வடகரையில், ஸ்ரீரங்கத்தின் அருகாமையில் அமைந்துள்ளது.

Ssriram mt

பஞ்சபூதஸ்தலம் என்னும் புனித நீர்

பஞ்சபூதஸ்தலம் என்னும் புனித நீர்


திருவானைகாவல் நகரில் ஜம்புகேஸ்வரர் கோவில் அமைந்திருப்பதால் இது சிவபக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த கோவிலின் முதன்மை தெய்வமான சிவனைத் தவிர இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தேவி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியையும் பக்தர்கள் ஏராளமானோர் வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலின் உட்பிரகாரத்தில் அமைத்துள்ள பஞ்சபூதஸ்தலம் எனப்படும் புனித நீர் தொட்டியில் நீராடினால் பாவங்கள் தீர்ந்து மோட்சத்துக்கு வழிவகுக்கும் என்பது தொன்நம்பிக்கை. இதுவே நீருக்கான தலமாகவும் திகழ்கிறது.

Ilya Mauter

திருவண்ணாமலை

திருவண்ணாமலை


திருவானைகாவலில் இருந்து 178 கிலோ முட்டர் தொலைவில் உள்ளது திருவண்ணாமலை கோவில். பெரம்பலூர், திருக்கோவிலூர் வழியாக இதனை அடையலாம். திருவண்ணாமலை நகரம் பஞ்ச பூத தலங்களில் ஒன்றாக கருதப்படும் நெருப்புக்கு உகந்ததாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோத்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. அதில், கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் தீபநாள் தமிழகத்தில் மிகவும் பிரசிதிபெற்றது. பத்து நாட் கொண்டாட்டத்தில் கடைசி நாளில் பக்தர்கள் மலையின் உச்சியில் மூன்று டன் வெண்ணெய் கொண்ட ஒரு பெரிய பாத்திரத்தில் விளக்கு கொழுத்துகிறார்கள். இதனைக்காண லட்சக் கணக்கானோர் அங்கு கூடுவது வழக்கம்.

Ashiq Surendran

திருகாளஹஸ்தி

திருகாளஹஸ்தி


திருவண்ணாமலையில் இருந்து ஆரணி, திருத்தணி வழியாக திருப்பதியை அடைந்து ஸ்ரீ காளஹஸ்திக்கு செல்லலாம். இதன் தூரம் 229 கிலோ மீட்டர் ஆகும். ஸ்ரீ காளஹஸ்தி என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த மகிமை வாய்ந்த ஆன்மீக திருத்தலம் சாதாரணமாக காளஹஸ்தி என்றும், பஞ்சபூதத்தில் காற்றுக்கான தலமாகவும் குறிப்பிடப்படுகிறது.

Krishna Kumar Subramanian

ஸ்ரீ காளஹஸ்தி

ஸ்ரீ காளஹஸ்தி


தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற திருப்பதி மலைக்கோவிலுக்கு அருகிலேயே உள்ள ஸ்ரீகாலஹஸ்தி ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஸ்ரீ காளஹஸ்தி எனும் பெயரில் ஸ்ரீ, காள மற்றும் ஹஸ்தி ஆகிய மூன்று சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஸ்ரீ என்ற சொல் சிலந்தியையும், காள எனும் சொல் பாம்பையும், இறுதியாக வரும் ஹஸ்தி எனும் சொல் யானையையும் குறிக்கின்றன.

Rajachandraa

சுற்றுவட்டாரம்

சுற்றுவட்டாரம்


வெய்யிலிங்கல கோணா நீர்வீழ்ச்சி ஸ்ரீ காளஹஸ்தி நகரத்திற்கு அருகில், நகர எல்லையிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அற்புதமான இயற்கை எழிற்காட்சிகளை கொண்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சி பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி மகிழாமல் திரும்புவதில்லை.

Rahuljoseph ind

ரிட்டன் டூ சென்னை...

ரிட்டன் டூ சென்னை...


சரியான திட்டமிடலுடன் சென்னையில் இருந்து பஞ்சபூத தலங்களை தரிசிக்க செல்கிறீர்கள் என்றால் மொத்தம் இரண்டு முதல் மூன்றே நாட்களில் உங்களது பயணத்தை நிறைவு செய்யலாம். கூடுதல் நேரம் இருப்பின் இத்தரங்களின் அருகில் உள்ள சுற்றுலாப் பகுதிக்கும் சென்று வாருங்கள். ஸ்ரீ காளஹஸ்தியில் தரிசனத்தை முடித்து 117 கிலோ மீட்டர் பயணம் செய்தீர்கள் என்றால் இரண்டு மணி நேரத்தில் சென்னையை அடைந்துவிடலாம்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்