தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரம் என்று அழைக்கப்படும் மதுரை, மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் போன்ற பல்வேறு பிரபலமான வழிபாட்டுத் தலங்களின் பெருமைகளைக் கொண்ட கோயில்களின் நகரமாக அறியப்படுகிறது. ஆனால் மதுரையைச் சுற்றி பல அழகிய சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. அவற்றில் முதன்மையானது கொடைக்கானல். மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு உங்களுக்கு மனதிற்கு பிடித்தவருடன் சாலை வழியாக பைக்கில் சென்றால் மிகவும் உற்சாகமாக இருக்கும் அல்லவா? எப்போது செல்வது? எந்த வழி செல்வது? எங்கே இறங்கி போட்டோ எடுப்பது? மற்றும் ரூட் மேப் போன்ற பயனுள்ள தகவல்கள் கீழே!

மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு ஏன் பைக்கில் பயணம் செய்ய வேண்டும்?
உங்கள் வசதிகேற்ப ஒரு நாள் அல்லது இரண்டு நாள் பயணமாக மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு ட்ரிப் பிளான் பண்ணுங்கள். நிச்சயம் குதூகலமடைவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், , இதமான வானிலை, காலனித்துவ பாரம்பரியம், மற்றும் முடிவற்ற இயற்கை அழகு ஆகியவற்றின் சிறந்த கலவையாகும். மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு சாலை வழியாக பைக்கில் பயணம் செய்வது மிகவும் இனிமையாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் பசுமையான அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு கொண்டே பயணிக்கலாம்.

மதுரை to கொடைக்கானல் பைக் ட்ரிப்
சாலைகள் நன்கு பராமரிக்கப்பட்டு உள்ளதால் பயணம் களைப்பாக இருக்காது, அதே நேரத்தில் செங்குத்தான வளைவுகளும் இல்லை. இது பாதுகாப்பான பயணமாகவே இருக்கும். இரண்டு நகரங்களுக்கிடையேயான தூரம் தோராயமாக 120 கிமீ என்பதால் சுமார் 3 மணி நேரத்தில் நீங்கள் கொடைக்கானலை அடைந்திடலாம். பயணிக்கும் வழியிலேயே நீங்கள் பல்வேறு சிறிய நீர்வீழ்ச்சிகளையும் அழகிய காட்சிகளையும் காணலாம். ஆங்காகே நின்று இன்ஸ்டா, பேஸ்புக் மாற்றம் வாட்ஸ் அப் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் விதத்தில் பல அழகான போட்டோக்களையும் எடுக்கலாம்.

லாஸ் காட் வழியாக கொடைக்கானல் பயணம்
மதுரைக்கும் கொடைக்கானலுக்கும் இடையே பயணிக்க இதுவே குறுகிய மற்றும் சிறந்த பாதையாகும். இந்த வழியில் சென்றால் நேரமும் சிறிது மிச்சப்படுகிறது. ஏனெனில் இந்த வழித்தடத்தில் மதுரை முதல் கொடைக்கானல் வரை போக்குவரத்து மிகவும் குறைவாக உள்ளது. பெரிதாக சாலை மூடல்கள் எதுவும் இல்லை. மதுரைக்கும் கொடைக்கானலுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 115 கிமீ ஆகும். இந்த வழித்தடத்தில் கொடைக்கானலை அடைய அடைய மூன்று மணி நேரம் ஆகும்.

வழியில் நீங்கள் கடந்து செல்லக்கூடிய அழகிய இடங்கள்
மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு செல்லும் வழியெல்லாம் பசுமை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் ஏராளம் உள்ளன. தலையார் நீர்வீழ்ச்சி வியூபாயிண்ட், கொடை காட் ரோடு, லேக் வியூ, தேனி அல்லி நகரம், டம் டம் பாறை மற்றும் நீர்வீழ்ச்சி ஆகியவற்றை நீங்கள் கடந்து செல்வீர்கள். அருகிலுள்ள மஞ்சளார் அணைப் பகுதியையும் நீங்கள் பார்வையிடலாம். அது மட்டுமின்றி பசுமை நிரம்பிய உள்ளூர் பூங்கா, நீச்சல் குளங்கள், பல்வேறு வாட்டர் கேம்ஸ், அட்வென்ச்சர் கேம்ஸ் நிறைந்த தீம் பார்க்குகளும் வழியில் உள்ளன. நிறைய வியூபாயின்ட்கள் அழகாக இருக்கின்றன. ஆதலால், பாதுகாப்பாக நிறுத்தி பார்த்து ரசித்துவிட்டு செல்லுங்கள்.

கொடைக்கானலில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்
மலைகள், காடுகள், ஏரிகள், காபி மற்றும் மசாலாத் தோட்டங்களுடன், கொடைக்கானல் மிகவும் வசீகரமாக இருக்கிறது. மேலும் இங்கே நிலவும் இதமான வானிலைக்காகவும் அமைதிக்காகவும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி மற்றும் கயாக்கிங், கோக்கர்ஸ் வாக்கில் நடைபயணம் மேற்கொள்ளுங்கள். சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சி, பிரையன்ட் பார்க், குணா குகை மற்றும் கிரீன் வேலி வியூ பாயிண்ட் ஆகியவற்றை ரசித்துவிட்டு, டால்பின் நோஸ் பாயிண்ட்டில் சூரிய அஸ்தமனம் பார்த்துவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கலாம். அல்லது ஒரு இரவு தங்கிவிட்டு ஷாப்பிங் செய்துவிட்டும் கீழே இறங்கலாம்.

பார்வையிட சிறந்த நேரம்
மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட கொடைக்கானல், ஆண்டின் பெரும்பாலான பகுதிகளில் இனிமையான வானிலையை பயணிகளுக்கு கொடுக்கிறது. ஆனால் இந்த மலைப்பாங்கான நகரத்தை பார்வையிட நீங்கள் அக்டோபர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடையில் செல்ல வேண்டும். நீங்கள் கோடைக்காலத்திலும் இங்கு பயணிக்கலாம், கோடைக்காலமும் பயணிக்க வசதியாக இருக்கும். சிலருக்கு மழைக்காலங்களில் கொடைக்கானலுக்கு பயணம் செய்வதும் பிடிக்கும். ஆனால் கனமழையின் போது மலைப்பாங்கான பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.
பழனி மலையில் 7200 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் நிச்சயமாக உங்களை இயற்கைக்கு நெருக்கமாக இருப்பது போன்ற உணர்வை கொடுத்து, நிச்சயம் உங்களை ஆசுவாசப்படுத்தும். ஆகவே உங்களுக்கு மனதுக்கு நெருக்கமானவர்களுடன் அல்லது நண்பர்களுடன் ஒரு பைக் ட்ரிப் செய்து பாருங்கள்.