இந்த உலகில் மனிதர்களுக்கு உரிமை எந்த அளவிற்கு உள்ளதோ அதை விட தாண்டிய உரிமை வன விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், தாவரங்களுக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் உண்டு. பிற உயிரினங்களை பாதுகாத்து வளர்ப்பதற்கு இந்திய அரசும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சென்னையின் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான ஆமைகள் முட்டைகளை இட்டு செல்வது வழக்கம். பருவம் முடியும் நிலையில் (மார்ச் - ஏப்ரல்) முட்டைகளிலிருந்து ஆமைக் குஞ்சுகள் வெளிவந்து கடலுக்குள் செல்லும். அவைகளுக்கு எந்த தொந்தரவும் செய்யாமல் இயற்கையாக நடக்கும் இந்த அதிசய நிகழ்வை கண்டு ரசிக்க ஏராளமான பொதுமக்களும் தன்னார்வலர்களும் வருடா வருடம் சென்னையின் கடற்கரைகளில் கூடுவது உண்டு! இந்த அரிய நிகழ்வில் நீங்களும் கலந்துக் கொள்ள வேண்டாமா?

சென்னை கடற்கரைகளுக்கு வருகை தரும் வருடாந்திர விருந்தாளிகள்
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஏராளமான ஆமைகள் தமிழக கடற்கரை ஓரங்களில் முட்டைகளை இட்டு விட்டு கடலுக்குள் சென்று விடுகின்றன. அந்த நேரத்தில் இருந்து சரியாக இரண்டு முதல் மூன்று மாத இடைவெளியில் முட்டைகளில் இருந்து ஆமைக்குஞ்சுகள் வெளிவந்து கடலுக்குள் சென்று விடுகின்றன. சிறிய அழகான உருவத்தில் ஆயிரக்கணக்கான ஆமைக்குஞ்சுகள் கூட்டம் கூட்டமாக கடலுக்குள் அதிகாலை வேளையில் செல்வதைப் பார்க்க கண் கோடி வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். மார்ச் மாத இறுதி முதல் ஏப்ரல் மாத முதல் வாரம் வரை நிகழும் இந்த அதிசய நிகழ்வை காண தன்னார்வலர்களும், பொது மக்களும் சென்னையின் திருவான்மியூர், நீலாங்கரை, கோல்டன் பீச் கடற்கரைகளுக்கு வருகை தருகின்றனர்.
சென்னை கடற்கரைகளை அலங்கரிக்கும் ஆமைக்குஞ்சுகள்
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் தமிழ்நாட்டின் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சுப்ரியா சாஹு ஆமைக்குஞ்சுகள் வெளிவந்து ஊர்ந்து செல்லும் அதிசய நிகழ்வை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆமை குஞ்சுகளின் இரண்டு கவர்ச்சிகரமான வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டின் கடற்கரைகள் ஆமைக் குட்டிகளால் சலசலப்பதாக அவர் தனது தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரை கலக்கும் வீடியோக்கள்
ஆமை முட்டையிடும் பருவத்தில் தமிழ்நாடு வனத்துறை மும்முரமாக செயல்பட்டு அவைகள் வெற்றிகரமாக கடலுக்குள் செல்வதை உறுதிபடுத்துகிறது. சென்னையில் உள்ள குஞ்சு பொரிப்பகம் இந்த சீசனில் ஏற்கனவே 25,000 ஆமை குஞ்சுகளை வெளியிட்டுள்ளது. சுப்ரியா சாஹு மேற்கோள் காட்டுகையில், இது பல ஆண்டுகளில் இதுவரை இல்லாத அதிகபட்சமாகும். இது வெறுமனே ஆச்சரியமாக இல்லையா? என்றும் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டரில் வீடியோக்கள் வெளிவந்த நிமிடம் முதல் லைக்ஸ், ஷேர்களை குவித்து வருகிறது.

அழகான இயற்கை நிகழ்வு
முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் வெயிலில் பட்டோ அல்லது வழி தெரியாமலோ அல்லது கூட்டத்தை கண்டோ சரிவர கடலுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்படுக்கிறது. ஆனால் தமிழக வனத்துறை அதிகாரிகள் ஆமைகள் முட்டையிட்ட காலத்தில் இருந்து அவற்றை சரிவர கவனித்து வருவதோடு, வெளிவந்த ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்டு விடுக்கின்றனர். சுப்ரியா சாஹு வெளியிட்ட முதல் வீடியோவில், சாம்பல் நிறத்தில் ஆமைகள் மணலில் துள்ளிக் குதிப்பதைக் காணலாம். அதிகாரிகள் குஞ்சுகளை எடுத்து பெரிய கூடையில் வைக்கின்றனர். இரண்டாவது வீடியோவில், ஆமைக் குட்டிகள் கடலில் விடப்படுகின்றன. சிறிய ஆமைகள் கடலை நோக்கி வலம் வருவதைப் பார்ப்பது மிகவும் அழகாக இருக்கிறது.

ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம்
தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் ஆமைகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கான மிகப்பெரிய மற்றும் விரிவான நடவடிக்கையாக, மாநில அரசு ரூ.6.3 கோடி செலவில் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மீட்கப்பட்ட ஆமைகளின் மறுவாழ்வுக்கான மருத்துவ வசதிகளுடன், ஆமை பாதுகாப்பு மையத்தில் ஆமை குளம், ஆமை கொட்டகை போன்ற வசதிகள் இருக்கும். நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த ஆமைகள் இயற்கையான வாழ்விடத்திற்குத் திரும்புவதற்கு முன், இந்த மையம் தற்காலிக இல்லமாகச் செயல்படும். நவீன பார்வையாளர் வசதிகளுடன் கூடிய வளம் மற்றும் அறிவு மையம், ஆமை பாதுகாப்பு குறித்த கற்றல் மற்றும் விழிப்புணர்வுக்கான அதிநவீன மையமாக மாறும்.
வனவிலங்கு பிரியர்களே, ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்படுவதைக் காண தமிழக கடற்கரைகளுக்குச் செல்ல இதுவே சரியான நேரம். இயற்கை அன்னை வழங்கும் அற்புதங்களில் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முழுமையான மகிழ்ச்சியை நீங்களும் உணர இப்போதே செல்லுங்கள்!



Click it and Unblock the Notifications





