Search
  • Follow NativePlanet
Share
» »நவராத்திரி - 9 இடங்களில் 9 விதமான கொண்டாட்டம்!

நவராத்திரி - 9 இடங்களில் 9 விதமான கொண்டாட்டம்!

By Staff

'தாண்டியா ஆட்டமும் ஆட, தசரா கூட்டமும் கூட' என்று கோலாட்டச் சத்தத்தில் நாடே 9 நாட்கள் முழுகிக்கிடக்கும் கோலாகலமான பண்டிகை நவராத்திரி திருவிழா.

தமிழ்நாட்டில் கொலு வைத்தால், கொல்கத்தாவில் பந்தல்கள் அமைக்கிறார்கள். ஆந்திராவில் மலர் தாம்பாளத்தை சுற்றி நடனமாடினால், குஜராத்தில் மண் பானையை சுற்றி நடனமாடுகிறார்கள்.

மைசூரின் தசரா கொண்டாட்டங்கள்மைசூரின் தசரா கொண்டாட்டங்கள்

இப்படியாக நவராத்திரி திருவிழா தசரா, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுகா, குல்லு தசரா என்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதங்களில் நாடு முழுவதும் வெகு உற்சாமாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் இப்படி அத்தனை இடங்களுக்கும் சென்று நம்மால் இந்த திருவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது நடக்கிற காரியமா? எனினும் இந்த கட்டுரை உங்களை அந்தந்த இடங்களுக்கு எப்படி அழைத்து செல்கிறது என்று பாருங்கள்!!!

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நவராத்திரி திருவிழாவை துர்கா, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு அர்ப்பணிக்கிறார்கள். அதாவது முதல் மூன்று நாள் துர்காவையும், அடுத்த மூன்று நாள் லக்ஷ்மியையும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதி தேவியையும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். அதிலும் குறிப்பாக பிராமன சமுதாயத்தில் உள்ள பெண்கள் நவராத்திரி விழாவை கொலு வைத்து சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த கொலுவில் நவராத்திரியின் ஒன்பது நாட்களையும் குறிக்கும் விதமாக ஒன்பது படிகளில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். அதோடு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான சுண்டல்களை செய்து படைக்கிறார்கள். மேலும் நவராத்திரி கொலுவுக்கு பக்கத்துக்கு வீடுகளிலிருந்து திருமணமான பெண்களை அழைத்து வளையல், காதணி போன்றவற்றை கொடுப்பது வழக்கமாகும்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசத்தின் மற்ற பகுதிகளில் நவராத்திரி விழா கொண்டாடப்படும் விதத்தை விட 'தெலங்கானா' பகுதியில் 'பத்துகம்மா பண்டுகா' என்ற பெயரில் வெகு விமரிசையாக நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. 'பத்துகம்மா' என்றால் தெலுங்கில் 'எங்கள் பெண் தெய்வமே உயிர் பெற்று வா' என்று அர்த்தம். எனவே இந்த விழாவினை தாய்மையை கொண்டாடும் விழாவாகவே தெலங்கானா பகுதி மக்கள் பார்க்கிறார்கள். இந்த திருவிழாவின்போது பெண்கள் ஒரு தாம்பாளத்தின் மீது 7 அடுக்குகளாக வெவ்வேறு மலர்களை ஒரு குவியல் போல வடிவமைத்து வழிபடுவார்கள். அதன் பின்னர் பெண்கள் எல்லோரும் ஒன்று கூடி தாங்கள் தயாரித்த மலர் குவியலை நடுவில் வைத்து அதைச் சுற்றி நாட்டுப்புறப் பாடல்களை பாடி நடனமாடுவார்கள். இதைத்தொடர்ந்து அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு நீர்நிலைக்கு சென்று அந்த தாம்பாளத்தை நீரில் மிதக்க விடுவார்கள்.

கேரளா

கேரளா

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை போல் அல்லாமல் கேரளாவில் நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் மட்டுமே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அதாவது விஜயதசமியும் அதற்கு முந்தைய 2 தினங்களான அஷ்டமியும், நவமியும் கேரளாவில் முக்கிய நாட்களாக கருதப்படுகின்றன. இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் அதிகம் உள்ள மாநிலமான கேரளாவில் இந்த 3 நாட்களும் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கிவைக்க ஏற்ற சிறந்த நாளாக கொள்ளப்படுகிறது. அதோடு அஷ்டமி தினத்தன்று சரஸ்வதி தேவி முன்பாக புத்தகங்களை வைத்து வணங்கி பின்பு விஜயதசமி தினத்தன்று எடுத்து படிக்கிறார்கள்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவை பொறுத்தவரை நவராத்திரி திருவிழா தசரா என்ற பெயரில் 10 நாட்கள் வெகு உற்சாமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 403-வது தசரா விழாவை மைசூரில் கொண்டாட இருக்கிறார்கள். அதாவது விஜயநகர மன்னர்களின் ஆட்சி காலத்தில் 17-ஆம் நூற்றாண்டிலிருந்து தசரா பண்டிகை கர்நாடகாவில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜம்பூ சவாரி என்ற யானைகள் ஊர்வலம், வானவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள் என்று கர்நாடகாவே கோலாகலப்படும். அதிலும் மைசூரில் தசரா கொண்டாட்டங்கள் பட்டையை கிளப்பும் என்பதால் கர்நாடக அரசு பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து மைசூருக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் நவராத்திரி திருவிழாவை துர்கா பூஜா என்று அழைக்கிறார்கள். இவ்விழாவின் போது பல இடங்களில் 'பேண்டல்கள்' (பந்தல்கள்) அமைத்து அதில் அசுரனை வதம் செய்யும் துர்கா சிலை, லட்சுமி சிலை, சரஸ்வதி சிலைகளை அமைத்து வழிபடுவார்கள். இந்த பந்தல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட தீம் கொண்டு அமைக்கப்படுவதோடு இரவு முழுவதும் வங்காளிகள் ஒவ்வொரு பந்தலுக்கும் சென்று வழிபாடு செய்வார்கள். மேலும் சிறந்த பந்தல்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும்.

குஜராத்

குஜராத்

குஜராத்தின் நவராத்திரி திருவிழாவின் போது மனித உயிரின் ஆதாரமான கருப்பையின் குறியீடாக மண் பானை முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த மண்பானையில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு பாக்கையும், ஒரு வெள்ளி நாணயத்தையும் போட்டு அதைச் சுற்றி அலங்கார ஆடைகள் அணிந்த பெண்கள் நடனமாடுவார்கள். மேலும் கர்பா நடனம் என்று அழைக்கப்படும் இந்த நடனத்தை ஆண்களும் சில நேரங்களில் பெண்களோடு சேர்ந்து ஆடுவதுண்டு. அதேவேளையில் குஜாரத்தின் சில பகுதிகளில் தாண்டியா நடனமாடியும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக ஏதேனும் தொடங்குவதாக இருந்தாலும், கார், பைக் என்று புதிய பொருட்களை வாங்குவதானாலும் நவராத்திரி சமயத்தில் செய்வதை நற்பேற்றின் அடையாளமாக மக்கள் கருதுகிறார்கள். இந்த நாட்களில் பெண்கள் தங்கள் பெண் தோழிகளை வீட்டிற்கு அழைத்து தேங்காய், பூ, வெற்றிலை பாக்கு கொடுத்து நெற்றியில் மாங்கல்யம் நிலைக்க திலகமிட்டு மகிழ்கிறார்கள். இவைதவிர குஜராத்தை போலவே மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையிலும் கர்பா மற்றும் தாண்டியா நடனங்கள் ஆடி நவாராத்திரி விழாவை கொண்டாடுகிறார்கள்.

ஹிமாச்சல பிரதேசம்

ஹிமாச்சல பிரதேசம்

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் என்று நவராத்திரி திருவிழா முடிகிறதோ அந்த நாளில்தான் ஹிமாச்சல பிரதேசதில் விழா தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அயோத்திக்கு திரும்பிய வெற்றியை கொண்டாடும் விதமாக நவாரத்திரி விழாவை பார்க்கிறார்கள் ஹிமாச்சல பிரதேச மக்கள். இந்த நாட்களில் சொந்தங்கள் ஒன்று கூடி ஒன்றாக இறைவனை வழிபடுகிறார்கள். அதோடு கிராமங்களில் கோயில் சிற்பங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகின்றன. மேலும் 10-ஆம் நாளான குல்லு தசரா ஆட்டம், பாட்டம் என்று வெகு உற்சாமாக கொண்டாடப்படுகிறது.

பஞ்சாப்

பஞ்சாப்

உலகப்புகழ்பெற்ற தங்கக்கோயில் அமைந்திருக்கும் பஞ்சாபில் நவராத்திரி விழாவை பக்தி பரவசத்தோடு மக்கள் கொண்டாடுகிறார்கள். அதாவது 7 நாட்கள் துர்கைக்கு விரதம் இருந்து 8-ஆம் நாளான அஷ்டமியில் 9 இளம் பெண்களுக்கு விருந்து கொடுத்து விரதத்தை முடிக்கிறார்கள். இந்த விருந்து 'பண்டாரா' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அப்போது அந்த பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்க மங்கள குறியீடாக சிவப்பு நிற துப்பட்டாவும் வழங்கப்படுகிறது. மேலும் நவராத்திரியின் ஒருநாள் உறங்காமல் பக்தி பாடல்களை பாடி துர்கைக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X