» »திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் - தென்னகத்தை காக்கும் தெய்வம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் - தென்னகத்தை காக்கும் தெய்வம்

Written By:

திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோவில் இதுவாகும். இரண்டு கோவில்களும், 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். புராணங்களின்படி, சிவபெருமான் தமது தாண்டவ நடனத்தை ஆடிய பல்வேறு தலங்களில் நெல்லையும் ஒன்றாகும். இதனால், பரத நாட்டியம் போன்ற பழமையான நடனக்கலைகளுக்கும் இதர கலைகளுக்கும் முக்கியமான இடமாக திருநெல்வேலி கருதப்படுகிறது. இப்படிப்பட்ட இடத்தில் குடி கொண்டு உள்ள தெய்வமான சிவபெருமான், பார்வதியுடன் நெல்லையப்பராக காட்சி தருகிறார். இந்த கோயிலில் இப்போதுதான் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. வாருங்கள் நெல்லையப்பரை தரிசித்துவிட்டு வரலாம். அதனுடன் நெல்லையப்பர் கோயிலின் அருகே என்னென்ன இடங்கள் இருக்கின்றன, அவற்றிற்கு போகும் வழி, தூரம், நேரம் ஆகியவற்றையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தாமிர அம்பலம்

தாமிர அம்பலம்

பொதுவாக சிவன் கோயில்களில் இல்லாத சில சிறப்புகள் இந்த கோயிலில் இருக்கும். நெல்லையப்பருக்கும், காந்திமதியம்மனுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் உள்ளே, தாமிரத்தினால் ஆன மேடை என்னும் பொருள் படும் தாமிர அம்பலம்/தாமிர சபை அமைக்கப்பட்டு உள்ளது. திருக்கல்யாணம், நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற சிறப்பான விழா நாட்களில் இக்கோவிலைத்தரிசனம் செய்வது இனிமையான அனுபவமாகும்.

விழாக்கள்

அக்டோபர் மாதம் 15 முதல் நவம்பர் மாதம் 15 வரை அதாவது தமிழ் மாதமான ஐப்பசி திங்களில் மேலே கூறிய விழாக்கள் நடைபெறும். தைப்பூச திருவிழாவானது இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் மற்றொரு திருவிழாவாகும். நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் இக்கோவிலை கண்டுபிடித்து வந்து சேருவதில் சுற்றுலாப்பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இருக்காது.

PC Theni.M.Subramani

எப்படி சென்றடைவது?

எப்படி சென்றடைவது?

சென்னையிலிருந்து....

விமானம் மூலமாக வருவதென்றால் சென்னையிலிருந்து தூத்துகுடி வந்து அல்லது மதுரை வந்து திருநெல்வேலியை அடையலாம்.

ரயில் மூலமாக திருநெல்வேலி சந்திப்புக்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலமாக டவுன் நெல்லையப்பர் கோயில் முன்பே சென்று இறங்கலாம்.

பேருந்து மூலமாக செல்வதென்றால் சென்னையிலிருந்து 624கிமீ தூரம் கிட்டத்தட்ட 10 மணி நேரங்கள் பயணித்து புது பேருந்து நிலையத்தை அடைந்து, அங்கிருந்து நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். நெல்லை சந்திப்பிலிருந்து நெல்லை நகரம் பேருந்தில் ஏறி கோயிலுக்கு செல்லலாம்.

கோவையிலிருந்து ...

விமானம் மூலமாக தூத்துக்குடி அல்லது மதுரையை அடைந்து அங்கிருந்து நெல்லைக்கு பயணிக்கலாம்.

ரயில் மூலமாக கோவையிலிருந்து மதுரை வழியாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு நிறைய ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பேருந்து மூலமாக 360 கிமீ பயணித்து மதுரை வழியாக நெல்லையை அடையலாம். கன்னியாகுமரி, தூத்துக்குடி செல்லும் பேருந்துகளும் இந்த வழியாகத்தான் செல்லும்.

 தொன்னம்பிக்கை கதை

தொன்னம்பிக்கை கதை

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தொன்னம்பிக்கை கதை இருக்கும். இது காலம் காலமாக வாய்வழியாக பரப்பப்பட்டு நிறைய பேர் நம்பும் கதையாகும். நெல்லையில் சிவ பக்தர் ஒருவர் வறுமையிலும் வீடு வீடாக சென்று நெல் சேகரித்து சிவனுக்கு நெய்வேத்தியம் செய்வார். ஒருநாள் அப்படி நெல்லை உலர்த்துவதற்காக நெல்லை காயப்போட்டுவிட்டு குளிக்கச் சென்றார். திடீரென பேய் மழைக் கொட்டியது. நனைந்துவிடப்போகிறது என்று ஓடோடி வந்த சிவபக்தர் அங்கு ஒரு அதிசயத்தைக் கண்டார். மற்ற இடங்களில் பேய் மழைக்கொட்ட நெல் காயப்போட்ட இடம் மட்டும் வெயிலாக இருந்தது. சிவபெருமானின் சக்தியை எண்ணி அவருக்கு நெல்வேலிநாதர் என்றும், அந்த ஊரை நெல்வேலி என்றும் அழைத்தனர். அதுவே தற்போதைய திருநெல்வேலி ஆகும்.

சிவசபைகள்

நடராசராக சிவபெருமான் தோன்றும் ஐந்து சபைகளில் இரண்டு திருநெல்வேலியில் இருக்கின்றன. நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபை என்றும், குற்றாலநாதர் ஆலயம் சித்திர சபை என்றும் அழைக்கப்படுகிறது.

அமைப்பு

நெல்லையப்பர் ஆலயம் சுமார் 14 ஏக்கரில் தெற்கு வடக்காக 756 அடி நீளத்திலும் மேற்கு கிழக்காக 378 அடி நீளத்திலும் மிகப் பெரிய சிவன் கோயிலாக அமைந்துள்ளது.

காந்திமதியம்மனுக்கு தனி சந்நிதியும், நெல்லையப்பருக்கு தனி சந்நிதியும் அமைக்கப்பட்டு, கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆயிரம் கால் மண்டபம் சுற்றுலாப் பயணிகளை பெரும் அளவில் ஈர்க்கிறது.

வெள்ளை நந்தி

கோயிலுக்குள் நுழைந்தவுடன் 10 அடி உயரத்தில் ஒரு அழகான வெள்ளை நிற நந்தியை காணலாம். அடுத்து கொடி மரத்தைச் சுற்றி விட்டு, உள்ளே சென்று மூலவரைக் காணமுடியும். அதற்கு கொஞ்சம் முன்பாக 9 அடி உயர மிகப் பெரிய விநாயகரை தரிசிக்கலாம்.

மூலவரைச் சுற்றி மூன்று பிரகாரங்கள் இருக்கின்றன. தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை அம்மன், சண்டிகேசுவரர், மகிசாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை இந்த கோயிலுக்குள் காணலாம். கோவிந்த பெருமாள் சந்நிதியும் கோயிலுக்கு அருகே உள்ளன.

Nellai

தலச் சிறப்பு

தலச் சிறப்பு

இங்குள்ள சிவபெருமான் சுயம்பாக தோன்றியதாக நம்பிக்கை. நெல்லையப்பருக்கு வேண்ட வளர்ந்தநாதர் என்ற பெயரும் உண்டு. இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரியும். இங்கு காட்சி தரும் விநாயகர் முக்குறுணி விநாயகர் என்ற பெயருடன் இருக்கிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல் அல்லாமல், வலது கையில் மோதகமும், இடது கையில் தந்தமும் வைத்திருப்பது இந்த கோயிலின் விநாயகரின் சிறப்பாகும்.

பொதுவாக நவக்கிரக சன்னதிகளில் புதன் பகவான் கிழக்கு நேக்கி இருப்பார். ஆனால் நெல்லையப்பர் கோயிலில் அவர் வடக்கு நோக்கி காணப்படுகிறார். இது மிக அரிய காட்சியாகும்.

இங்கு மார்கழி மாதத்தில் பூசை நடைபெறாது. அதே நேரத்தில் கார்த்திகை மாதத்திலேயே அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து அனைத்து தெய்வத்துக்கும் பூசை நடைபெறுகிறது.

Booradleyp1

 வேண்டுதலும் நேர்த்திக்கடனும்

வேண்டுதலும் நேர்த்திக்கடனும்

கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு நோக்கி இருக்கிறார். இதனால் இங்கு வந்து புதனை வணங்கி சென்றால், படித்தவர்களுக்கு செல்வாக்கு மிக்க வேலை கிடைக்கும். நல்ல தொழில் தொடங்கி, முன்னேற்றம் காணலாம்.

புதன் தோஷம் இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால், பாதிப்பு குறையும்.

கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்க இங்கு தம்பதிகள் அதிக அளவில் வருகை தருகிறார்கள்.

பொல்லாப்பிள்ளையார் சன்னதியில் 12 துளைகள் கொண்ட கல் சன்னல் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டு குழந்தை பெற்றவர்கள், குழந்தையை இந்த சன்னல் துளைகள் வழியாக குடுத்து வாங்கி வித்தியாசமான நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Sivanandands

அருகில் காணவேண்டிய இடங்கள்

அருகில் காணவேண்டிய இடங்கள்

அ. மேல திருவேங்கடநாதர் கோயில்

நேரம் 41 நிமிடங்கள்

தொலைவு 16 கிமீ

மேலதிருவேங்கடநாதபுரம் திருக்கோவிலானது, மேலதிருவேங்கடநாதபுரம் என்னும் பெயருடைய அழகியதொரு சிற்றூரில் அமைந்துள்ளது. சிறிய மலையுச்சியில் கட்டப்பட்ட இக்கோவில் , திருநன்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா, கருட சேவை ஆகும். இத்திருவிழாவானது, ஆங்கில மாதங்களான செப்டம்பருக்கும், அக்டோபருக்கும், இடையில் வரும் புரட்டாசி மாதத்தில், திருவோணம் நட்சத்திரத்தில், ஒவ்வொரு சனிக்கிழமையும் கொண்டாடப்படும். இத்திருவிழா சமயத்தில் இங்கு செல்வது சிறப்பாக இருக்கும்.


ஆ. அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவில், திருநெல்வேலி

நேரம் 10 நிமிடங்கள்

தொலைவு 3 கிமீ

அருள்மிகு அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலானது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். தமிழகத்திலுள்ள மிகப் பழமையான கோவில்களுள் இதுவும் ஒன்றாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து மன்னர் ராஜகோபாலசுவாமியைத் தரிசிக்கிறார்கள். இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தால், உடலிலுள்ள தீவிரமான பிணிகள் அனைத்தும் முழுமையாக நீங்கி நலம் பெறுவார்கள் என்றதொரு நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது.


இ. அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில்

நேரம் 20 நிமிடங்கள்

தொலைவு 7 கிமீ

அருள்மிகு வரதராஜ பெருமாளின் தீவிர பக்தரான கிருஷ்ணவர்மா என்னும் மன்னரால் பல நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில் கட்டப்பட்டது. முன்னொரு காலத்தில், மன்னர் கிருஷ்ணவர்மா அண்டைநாட்டு மன்னரால் தாக்கப்பட்டபோது, வீரராகவன் என்னும் பெயருடைய வீரராக ஸ்ரீ வரதராஜபெருமாள், மன்னருக்கு உதவியதாகவும், அவ்வீரரின் நினைவாக மன்னர் கிருஷ்ணவர்மா இக்கோவிலை கட்டியதாகவும் செவிவழிக்கதைகள் கூறுகின்றன. வீரராகவபுரம் என்னும் ஒரு ஊரையும், மன்னர் கிருஷ்ணவர்மா உருவாக்கினார். இக்கோவில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் வீரராகவசுவாமி எனவும், உற்சவமூர்த்தி ஸ்ரீ வரதராஜபெருமாள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.


மேலும் குற்றாலம், கன்னியாகுமரி, செங்கோட்டை, தென்காசி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் திருநெல்வேலியிலிருந்து குறைந்த நேரத்தில் செல்லும் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vashikaran Rajendrasingh

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்