ஒரு சில கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால், உடனே நாம் அந்த கோயில்களுக்கு புறப்பட்டு சென்று விடுகிறோம். ஆனால் இந்த ஒரு கோவிலுக்கு மட்டும் எல்லோராலும் செல்ல முடியாததாம், உங்களுக்கு மறுபிறவியே இல்லை என்று அந்த ஈசன் உங்கள் தலையில் எழுதியிருந்தால் மட்டுமே இந்த கோவிலுக்குள் உங்களால் அடி எடுத்து வைக்க முடியும் என்று கூறுகிறார்கள்!

ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட திருக்கோவில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருநாகேஸ்வரம் வழியாக சென்றால் 7 கி மீ தொலைவில் அமைந்துள்ள தேப்பெருமாநல்லூரை அடைவீர்கள். அந்த ஊரில் அமைந்துள்ள ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோயில், மறுபிறவி இல்லாத மனிதர்களை கோவிலுக்கு வரவேற்கிறது. ஆம், மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு தடைகள் வரும் என்று கூறப்படுகிறது.

அகத்திய முனிவரே செல்ல முடியாத கோவில்
இந்த கோவிலுக்கு சென்று இத்தல ஈசனை வழிபட வேண்டும் என்று யார் நினைத்தாலும் கோவிலுக்குள் செல்வதற்குகுள் பல தடைகள் எழுந்து பயணம் தடைபட்டு போகும் என்று கூறப்படுகிறது. பெருமையும் புகழும் வாய்ந்த மகாமுனியான அகத்திய முனிவரே இந்த கோயிலுக்குள் செல்ல முற்பட்டும் கூட கோயிலுக்குள் செல்ல முடியாமல் திரும்பி போனதாக கூறப்படுகிறது.

இத்தல ஈசனை பூஜை செய்யும் நாகப்பாம்பு
வருடத்தில் ஒருமுறை நாகப்பாம்பு வில்வ இலைகளை கொண்டு வந்த இத்தல ஈசனின் மீது தூவி, தன்னுடைய தோலை உரித்து மலையாக அணிவித்து ஈசனை வழிபட்டு செல்கிறதாம். அவ்வபோது பாம்பு சட்டைகளை லிங்கத்தின் மீது காண்பதாக பக்தர்களும் பூசாரிகளும் தெரிவிக்கின்றனர். இந்த கலியுகத்திலும் இப்படியொரு விஷயம் அரங்கேறுவது நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது அல்லவா.

மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்ல முடியும்
பூமியில் மானிடராய் பிறந்து அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களை எல்லாம் அனுபவித்து முடித்து, பாவ கணக்கும் புண்ணிய கணக்கும் சரி சமமாகி, கர்ம வினைகள் எதுவும் இல்லாத மானுடர்களுக்கே மறு பிறவி கொடுக்காமல் மோட்சத்தை அளித்து இறைவன் ஆட்கொள்கிறார். இந்த கோவிலுக்கு வருகை தரும் எவரும் மறுபிறவி இல்லாதவர்கள் என்பதே அர்த்தம்.

முற்றிலும் மாறுபட்ட கோலத்தில் இருக்கும் தெய்வங்கள்
பிரதோஷ தினத்தன்று இக்கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மற்ற கோவில்களின் விதிமுறைகளுக்கும், இந்த கோவிலின் விதி முறைக்கும் இடையே பல மாறுதல்கள் இருக்கின்றன. இந்த கோவிலில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் வேறு எங்கும் காணமுடியாத மாறுபட்ட கோலத்தில் காட்சி அளிக்கின்றன.

ருத்திராட்சமே பிரசாதம்
கோயிலின் பிரதான தெய்வம் ஸ்ரீ ருத்ராக்ஷேஸ்வரர், நாகவிஸ்வநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். வருடத்தின் 365 நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் அதிசயம் நிறைந்த ஆலயம் இது. அம்பாள் ஸ்ரீ வேதாந்தநாயகி பிரதான தெற்கு நோக்கியவாறு வீற்றிருக்கிறாள். பிரதான கோவிலின் உள்ளே சிவலிங்கம் 22,000 ருத்திராட்சங்கள் கொண்ட கவசத்துடன், முழு ருத்திராட்சம் அலங்காரத்தில் காட்சி தருகிறார். சிவபெருமானின் ஆபரணத்திலிருந்து எடுக்கப்படும் ருத்ராக்ஷம் இங்கு பிரசாதமாக விற்கப்படுகிறது.
எப்படி செல்வது
இந்த கோயில் வருடத்தின் எல்லா நாட்களிலும் காலை 8 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கிறது. இந்த கோயிலை அடைய திருநாகேஸ்வரம் சென்று அங்கிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் கோயிலை அடையலாம்.



Click it and Unblock the Notifications





