Search
  • Follow NativePlanet
Share
» »ஜல்லிக்கட்டுக்கு பின் இத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றனவா?

ஜல்லிக்கட்டுக்கு பின் இத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றனவா?

அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழர்களின் இன்றியமையாத பண்டிகையாக அவர்களின் வாழ்வில் கலந்துள்ளது. புத்தாடை அணிந்து புது பானை வைத்து பொங்கல் பொங்கி சொந்த பந்தங்களுடன் கொண்டாடி மகிழ்வதே ஒரு தனி சுகம் தான் அல்லவா?

இந்த பண்டிகையின் மணி மகுடம் போல இருப்பது ஜல்லிக்கட்டு ஆகும். பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக விளையாடப்படும் மிகவும் பாரம்பரியமான மற்றும் ஆரவாரமான விளையாட்டுகளில் முக்கியமான ஒன்று ஜல்லிக்கட்டு ஆகும். தமிழகத்தின் அடையாளமாக கருதப்படும் ஜல்லிக்கட்டுவின் பாரம்பரிய வரலாற்றைப் பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம் அல்லவா. இப்போது தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்!

Jallikattu 2023

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த விளையாட்டு

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பல மாதங்களாக சொந்த ஊர்களுக்கு செல்லாத மக்கள் கூட ஜல்லிக்கட்டை காண அவர்களின் ஊர்களுக்கு திரும்புகிறார்கள். அந்த அளவுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு தமிழக மக்களின் வாழ்வில் கலந்துள்ளது. ஜல்லிக்கட்டு இன்று நேற்று தோன்றியது அல்ல. நீலகிரி மாவட்டம் கரிக்கியூர் கிராமத்தில் மக்கள் காளைகளை துரத்தும் காட்சிகள் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான கல் பலகைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள கல்லுட்டு மேட்டுப்பட்டியில் 1500 ஆண்டுகள் பழமையான கல் பலகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாருங்கள் எத்தனை பழமையான வரலாற்று ஜல்லிக்கட்டுவிற்கு உள்ளது என்று!

இதில் கலந்துக் கொள்வதே பெருமை தான்

விளையாட்டின் ஒரு பகுதியாக, காளையின் கொம்பில் தங்கம் பதிக்கப்பட்டு, ஓடும் காளையை பிடித்து, பட்டா எடுத்தவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும். பல இடங்களில் காளைகளின் கொம்புகளில் 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் கைவிடப்பட்டு, அதற்கு பதிலாக வெற்றிப் பெரும் வீரர்களுக்கு பைக், தங்க நாணயம், மொபைல் போன், பணம் ஆகியவை பரிசாக அளிக்கப்படுகின்றன. இந்த பரிசுகள் ஒரு பக்கம் இருந்தாலும், இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை இளைஞர்கள் பெருமையாக கருதுகிறார்கள்.

வீரமும் பாசமும் நிறைந்த ஜல்லிக்கட்டு

வீரமும் பாசமும் நிறைந்த ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு போட்டியாக மட்டுமல்லாமல் வீரம் மற்றும் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. காங்கேயம் காளை, புள்ளிகுளம் காளை ஆகிய மாடு இனங்கள் இதில் கலந்துக் கொள்கின்றன. இந்த காளைகள் சிறப்பான உணவு, உடற்பயிற்சியுடன் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன. இந்த காளைகளை அதன் உரிமையாளர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளைப் போல பெருமையுடனும் சீருடனும் சிறப்புடனும் வளர்க்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அன்றும் இன்றும் என்றுமே இருக்கின்ற மவுசே தனி! இந்த காளைகளை உரிமையாளர்கள் விற்கும் சமயத்தில் நான், நீ என போட்டிப் போட்டுக் கொண்டு மக்கள் வாங்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்

ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் அதிகமாக நடைபெறுகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவணியாபுரம், பீளமேடு ஆகிய பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல், காண்டுபட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவாப்பூர், வேடன்பட்டி, சேலம் மாவட்டம் திம்மம்பட்டி, தேனி மாவட்டம் பலவரயான்பட்டி ஆகிய இடங்களில் பிரபலமாக நடத்தப்படுகிறது. இதுபோல தமிழகத்தின் வேறு பல இடங்களிலும் நடத்தப்படுகிறது.

மூன்று வகையான ஜல்லிக்கட்டுகள்

மூன்று வகையான ஜல்லிக்கட்டுகள்

பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பின்பற்றும் நோக்கில் நடத்தப்படும் இந்த நிகழ்வு ஏறு தழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு பல வகைகளில் விளையாடப்படுகிறது. வாடிவாசல் ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு, வடம் ஜல்லிகட்டு ஆகியவை அதை வகைகளாகும். வாடிவாசல் ஜல்லிக்கட்டு என்பது ஒரு சிறிய இடத்திற்குள் மாட்டை அடக்குவது ஆகும். திறந்தவெளி மைதானத்திற்குள் மாட்டை அடக்குவதும் விரட்டி பிடிப்பதும் மஞ்சுவிரட்டு ஆகும். ஒரு சிறிய வட்டத்திற்குள் கட்டி வைத்திருக்கும் மாட்டை அடக்குவதோடு போட்டி முடியும் வரை வட்டத்திற்குள் இருக்க வேண்டும், இதுவே வடம் ஜல்லிக்கட்டு ஆகும்.

ஜல்லிக்கட்டு புரட்சி

ஜல்லிக்கட்டு புரட்சி

ஜல்லிக்கட்டு போட்டி விலங்குகளைத் துன்புறுத்துகிறது என்றும் இதனால் மாடுகளுக்கு காயங்களும் தேவையற்ற உயிரிழப்பும் ஏற்படுவதாகக் கருதி இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள் 2008 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தனர். 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன. 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பல நாட்களாக போராட்டங்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியா முழுவதுமின்றி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஜல்லிகட்டு 2023

ஜல்லிகட்டு 2023

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு விழா தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோலாகலமாக துவங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் உள்ள பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மாவட்ட நிர்வாகத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக நிறைவடைந்த நிலையில், ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் ஜனவரி 8 அன்று தொடங்கியது. நடந்த முடிந்த இந்த போட்டியில் 22 பேர் காயமடைந்தனர். ஆனால் இவை எல்லாம் வீர வடு ஆயிற்றே!

இனி வரும் நாட்களில் ஜல்லிக்கட்டு பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைக் காணலாம் மக்களே!

இந்த கட்டுரை "நேட்டிவ் பிளானெட் - ஒரிஜின்" (Native Planet) வகையைச் சார்ந்தது. உங்கள் ஊர் மற்றும் நீங்கள் படிக்க விரும்பும் சுவாரஸ்யமான தலைப்பை மறக்காமல் கமண்ட் பாக்ஸில் உள்ளிடவும். அடுத்தாக எழுதுகிறோம்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X