அந்த கயிலாயத்தில் எம்பெருமானான சிவன் குடிக்கொண்டிருக்கிறார் என நாம் அறிவோம்! குறிப்பாக இமயமலை அருகே அமைந்துள்ள சிவன் கோவில்கள் புராணக் கதைகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு அற்புத சிவன் கோவிலான, பனிரெண்டு ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றான கேதார்நாத் இந்துக்களுக்கு மிகவும் புண்ணியஸ்தலமாகும். சார் தாம் யாத்திரையுடன் தொடர்புக் கொண்ட இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். 2023 ஆம் ஆண்டிற்கான யாத்திரைக்காக கேதார்நாத் கோவில் ஏப்ரல் 25 ஆம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இந்த யாத்திரையில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் நீங்கள் IRCTC ஏற்பாடு செய்துள்ள ஹெலிகாப்டர் சவாரி வழியாக கோவிலை அடையலாம்!

சிவபெருமானுக்கான புனிதத் தலங்களில் ஒன்று
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கேதார்நாத் தாம் சிவனை வழிபடுபவர்களுக்கு மிகவும் முக்கியமான தலங்களில் ஒன்றாகும். இமயமலையின் கீழ் மலைத் தொடரின் வலிமையான பனி மூடிய சிகரங்கள், வசீகரிக்கும் புல்வெளிகள் மற்றும் காடுகளுக்கு மத்தியில் சிவபெருமானின் பெயருடன் காற்று எதிரொலிப்பது போல் தோன்றுகிறது. 3,584 மீட்டர் உயரத்தில், மந்தாகினி நதியின் மூலத்திற்கு அருகில், கண்கவர் இடத்தில் அமைந்துள்ள கேதார்நாத் தாம் சிவபெருமானின் பெருமையைக் கொண்டாடுகிறது.
இயற்கை பேரழிவிலும் அழிந்திராத கோவில்
2013 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. மாநிலத்தின் மலைப்பிரதேசம் பேரழிவு தரும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, ஒரு பெரிய பாறை மலையிலிருந்து இறங்கி வந்து சரியாக கோயில் முன்னே நின்றது. பெரிய தளர்வான, உருளும் பாறாங்கல் கோவிலில் இருந்து சில மீட்டர் தொலைவில் நின்று, உண்மையில் அந்த பேரழிவில் கோயிலை காப்பாற்றியது.

கடினமான பயணத்தை எளிதாக்கிய IRCTC
சக்திவாய்ந்த கர்வால் இமயமலையால் சூழப்பட்டுள்ள கேதர்நாத் யாத்திரை மிகவும் புனிதமான யாத்திரை என்றாலும் மிகவும் கடுமையானதும் கூட. கௌரிகுண்டில் இருந்து நடைபாதை வழியாக 18 கிமீ மலையேற்றம் செய்ய வேண்டும். மேலும், பாதை குறுகலாக உள்ளதால் எந்த வாகனமும் செல்ல முடியாது. நடந்து தான் செல்ல வேண்டும். பலருக்கு இங்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் உடல் நலம் ஒத்துழைப்பது இல்லை. இருப்பினும், ஹெலிகாப்டர் சவாரி மூலம் இந்த இடத்தை அணுகலாம், நீங்கள் IRCTC இலிருந்து முன்பதிவு செய்யலாம்.

IRCTCயின் ஹெலிகாப்டர் சவாரி புக் செய்வது எப்படி
1. ஹெலிகாப்டர் பயணத்தை முன்பதிவு செய்வதற்கான முதல் படி, https://registrationandtouristcare.uk.gov.in/ ஐப் பார்வையிட்டு, உங்கள் சார் தாம் யாத்ரா பதிவை முடிப்பதாகும்.
2. அடுத்ததாக பதிவு எண் அல்லது குழு ஐடியைப் பயன்படுத்தி 'ஹெலியாத்ரா கணக்கை' உருவாக்குங்கள்.
3. கணக்கை உருவாக்கிய பிறகு, நீங்கள் விரும்பும் புறப்படும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
4. நான்காவது படி ஆன்லைன் கட்டணத்தை முடிக்க வேண்டும்.
5. பின்னர் IRCTC Heliyatra டிக்கெட்டை ஒதுக்கப்பட்ட ஹெலிபேட் இடத்திற்கு எடுத்துச் சென்று உங்கள் பயணத்தைத் தொடங்கவும்.

நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய மற்ற விஷயங்கள்
1. ஹெலிகாப்டர் பயணத்தை அணுக சார்தாம் யாத்ரா பதிவு கட்டாயம்.
2. குழு ஐடி பல யாத்ரீகர்களுக்கானது, அதேசமயம் தனித்த பதிவு எண் தனி நபருக்கானது.
3. ஒவ்வொரு டிக்கெட்டிலும், அதிகபட்ச பயணிகள் ஆறு பேர் வரை பயணிக்கலாம்.
4. ஹெலிகாப்டர் முன்பதிவுகள் சார் தாம் யாத்ரா பதிவின் போது வழங்கப்படும் ஸ்ரீ கேதார்நாத் தாம் சுற்றுப்பயணத் தேதியைப் பொறுத்தது.
5. இரண்டு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை வழங்கப்படும் மற்றும் முழு கட்டணமும் செலுத்த வேண்டும்.
6. திட்டமிடப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஹெலிபேடுக்கு வர வேண்டும்.
7. மேலும், பயணிகள் செக்-இன் செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக நுழைவுப் புள்ளியில் வந்து ஒரு சுமூகமான பாதுகாப்பு சோதனை செயல்முறையை அனுமதிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications





