உத்தரகண்ட் – இமாலயத்தின் அடிவாரத்தில் ஒரு இயற்கை பொக்கிஷம்!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. ‘தேவர்களின் பூமி’ என்றும் ‘பூலோக சொர்க்கம்’ என்றும் அழைக்கப்படும் இந்த எழிற்பிரதேசத்தின் அழகு வாழ்நாளில் ஒருமுறை இந்தியர் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.  

உத்தரகண்ட் மாநிலம் வடக்கில் திபெத் நாட்டையும் கிழக்கில் நேபாள நாட்டையும் எல்லைகளாக கொண்டு அமைந்திருப்பதால் இந்திய புவியியல் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாநிலமாகவும் விளங்குகிறது.

இதன் வடமேற்கில் ஹிமாசலப்பிரதேச மாநிலம் மற்றும் தெற்கே உத்தரப்பிரதேச மாநிலம் ஆகியவை அண்டை மாநிலங்களாக சூழ்ந்துள்ளன. உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்ட இந்த மாநிலம் 2007ம் ஆண்டு ஜனவரியில் இருந்து உத்தரகண்ட் என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

13 மாவட்டங்களை கொண்டுள்ள இந்த மாநிலமானது வரலாற்று பின்னணியின் அடிப்படையில் இரண்டு பெரிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குமோன் மற்றும் கார்வால் என்ற பெயரில் இந்த  2 மண்டலங்களும் அழைக்கப்படுகின்றன.

வரலாற்றுக்காலத்தில் ஆண்ட குமோன் மற்றும் கார்வால் என்ற இரண்டு முக்கியமான ராஜவம்சங்களின் அடிப்படையில் இந்த பெயர்கள் இடப்பட்டுள்ளன.

பருவநிலை

உத்தரகண்ட் மாநிலம் மூன்று முக்கிய பருவகாலங்களை கொண்டுள்ளது. வழக்கமான இந்திய பருவங்களான கோடைக்காலம், குளிர்காலம் மற்றும் மழைக்காலம் என்பவையே அவை. மேலும் இப்பகுதியின் பருவநிலை அந்தந்த இடங்களின் புவியியல் அமைப்புகளை பொறுத்து மாறுபட்ட காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலைப்பாங்கான பகுதிகளே இங்கு அதிகம் என்றாலும் சமவெளிப்பகுதிகளும் குறைந்த அளவில் இம்மாநிலத்தில் இடம் பெற்றிருக்கின்றன. எனவே பருவநிலை என்பது அந்தந்த இடங்களின் புவி அமைப்புக்கேற்ப மாறுபட்டு காணப்படும்.

பொதுவாக கோடைக்காலமே இம்மாநிலத்தில் சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக இருக்கும். இக்காலத்தில் நிலவும் இதமான சூழல் பயணத்தை இனிமையானதாக மாற்றும்.

குளிர்காலத்திலும் இப்பிரதேசத்தில் சுற்றுலா மேற்கொள்ளலாம் என்றாலும் சில இடங்களுக்கான பனிப்பொழிவால் மூடப்பட்டிருக்கக்கூடும். மேலும், கடுமையான குளிரை எதிர்கொள்ளும் வலிமை கொண்டோருக்கு மட்டுமே இக்காலம் பொருந்தும்.

மொழிகள்

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹிந்தி மொழியே அதிகாரபூர்வ ஆட்சி மொழியாக விளங்குகிறது. இருப்பினும் பல்வேறு உள்ளூர் மொழிகளும் இங்கு பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் குமோனி மற்றும் கார்வாலி ஆகியவை முக்கியமான மொழிகளாக மக்களால் பேசப்படுகின்றன. 

இவை தவிர பஹாரி மொழியும் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. குமானி மொழியில் மட்டுமே பல்வேறு துணை மொழிகள் புழங்குவதும் குறிப்பிடத்தக்கது.

ஜோஹரி, தண்புரியா, அஸ்கொதி, சிரளி, கங்கோலா, கஸ்பர்ஜியா, பல்டாகோதி, பச்ஹை, ரௌச்சவ்பைசி, மஜ் கும்மையா, சொர்யாலி, சௌகர்கியாலி மற்றும் கும்மையா என்ற பெயர்களில் இந்த துணை மொழிகள் அழைக்கப்படுகின்றன.

கட்வாலி மொழியிலும் ஜௌன்சாரி, சைலானி மற்றும் மர்ச்சி ஆகிய துணை மொழிகள் உள்ளன. தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்தும் இந்த மொழிகள் யாவுமே சம்ஸ்கிருதம், மத்திய பஹாரி மற்றும் சௌராசேனி பிரகிரித் ஆகிய மொழிகளை அடிப்படையாக கொண்டு பிறந்துள்ளன.

உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலா சிறப்புகள்

இயற்கை எழில் மிளிரும் 13 மாவட்டங்களை கொண்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் சுற்றுலா அம்சங்களுக்கு குறைவேயில்லை. புதிய புதிய இடங்களும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வளர்ச்சியடைவதால் இங்குள்ள சுற்றுலாத்தலங்களின் பட்டியலானது நீண்டு கொண்டே தான் செல்கிறது.

ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் முதல் இயற்கைக்காட்சிகள் மற்றும் சாகச மலையேற்ற பயணங்கள் வரை எல்லா அம்சங்களையும் இங்குள்ள சுற்றுலாத்தலங்கள் பயணிகளுக்கு வழங்குகின்றன.

உத்தரகண்ட் மாநிலத்தின் ஏரி மாவட்டம் என்ற சிறப்பை கொண்டுள்ள நைனிடால் பகுதி கடல் மட்டத்திலிருந்து1938 கி.மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் 1841ம் ஆண்டில் ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக ஒரு விடுமுறை ஸ்தலமாக மாற்றப்பட்டிருக்கிறது.

இங்குள்ள ஏரியின் கரையில் வீற்றிருக்கும் நைனி என்ற தெய்வத்தின் பெயரே இந்த நகரத்துக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. படகுச்சவாரி, சொகுசுப்படகுப்பயணம் மற்றும் மீன்பிடித்தல் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்கள் நைனிடால் ஏரியில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

தவிர நைனிடால் நகரை சுற்றிலும் ஏராளமான இதர சுற்றுலா அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. இவற்றில் ஹனுமான்கர்ஹி, குர்பதால், கில்பரி, லரியாகண்டா மற்றும் லேண்ட்’ஸ் என்ட் போன்ற இடங்கள் குறிப்பிடத்தக்கவை.

குயீன் ஆஃப் தி ஹில்ஸ் என்று பிரசித்தமாக அழைக்கப்படும் முசூரி எனும் இடம் உத்தரகண்ட் பகுதியில் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.

இங்குள்ள பசுமையான மலைப்பகுதிகள் மற்றும் பனி படர்ந்த சிகரங்களிலிருந்து தெற்குப்புறமாக பரந்து கிடக்கும் டூன் பள்ளத்தாக்கின் பிரமிக்க வைக்கும் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம். யமுனா பிரிட்ஜ், நாக் திப்பா, தனோல்டி மற்றும் சுர்கண்டா தேவி போன்ற விசேஷமான சுற்றுலா அம்சங்கள் முசூரியைச்சுற்றிலும் அமைந்துள்ளன.

காட்டுயிர் ரசிகர்களும் இயற்கைப்பிரியர்களும் மிகவும் விரும்பக்கூடிய காட்டுயிர் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களும்  உத்தரகண்ட் மாநிலத்தில் ஏராளம் உள்ளன. 

ஜிம் கார்பெட் நேஷனல் பார்க், ராஜாஜி நேஷனல் பார்க், கேதார்நாத் சரணாலயம், கோவிந்த் காட்டுயிர் சரணாலயம், பின்சார் காட்டுயிர் சரணாலயம், அஸான் பேரேஜ் பறவைகள் சரணாலயம், நந்தா தேவி நேஷனல் பார்க் மற்றும் அஸ்கோட் காட்டுயிர் சரணாலயம் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

வருடந்தோறும் ஆன்மீக யாத்ரிகர்கள் ஏராளமான எண்ணிக்கையில் விஜயம் செய்யும் முக்கியமான கோயில்களும் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கின்றன.

ஆதி கைலாஷ், அல்மோரா, ஆகஸ்ட்முனி, பத்ரிநாத், தேவ்பிரயாக், துவாரகாட், கங்க்ணனி, கங்கோலிஹாட், கங்கோத்ரி மற்றும் கௌரிகுண்ட் போன்றவை இவற்றில் மிக பிரசித்தமான ஆன்மீக தலங்கள் ஆகும்.

இவை தவிர ஹரித்வார், கேதார்நாத், ருத்ரநாத், கல்பேஷ்வர் போன்ற இதர முக்கிய ஆன்மீக ஸ்தலங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.

உத்தரகண்ட் மாநிலத்தில் நெடிதுயர்ந்து மடிப்புகளாக படர்ந்து கிடக்கும் இமயமலை மற்றும் காரகோரம் மலைத்தொடர்கள் மலையேற்றம், சிகரமேற்றம், பனிச்சறுக்கு, மிதவைப்படகுச்சவாரி போன்ற பலவகையான சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களை சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்குகின்றன.

பாராசூட் பறப்பு மற்றும் கூடாரத்தங்கல் போன்ற இதர வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சங்களையும் இந்த மாநிலத்தில் பயணிகள் அனுபவிக்கலாம்.  

Please Wait while comments are loading...