கேதார்நாத் – ஹிந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலம்

இந்தியாவில் ஹிந்துக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் இந்த கேதார்நாத்  எனும் ஆன்மீக யாத்திரை ஸ்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இமயமலையின் கர்வால் மலைத்தொடர்களில் கடல்மட்டத்திலிருந்து  3584மீ உயரத்தில் இந்த கேதார்நாத் கோயில் ஸ்தலம் அமைந்துள்ளது.

கேதார்நாத் கோயில் ஹிந்து மரபின் முக்கிய ஆன்மீக கேந்திரமாக வணங்கப்படுகிறது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான ஜோதிர்லிங்கம் இக்கோயிலில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.

பிரம்மாண்டமான மந்தாகினி ஆறு இக்கோயிலுக்கு அருகிலேயே ஓடுகிறது. கோடைக்காலத்தில் இந்த ஸ்தலத்துக்கு ஏராளமான யாத்ரீகர்கள் சிவபெருமானை வழிபட வருகை தருகின்றனர்.

1000 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் கேதார்நாத் கோயிலானது ஒரு செவ்வக வடிவிலான மேடைத்தளத்தின்மீது அழகாக வெட்டப்பட்ட பெரிய பாறைப்பலகைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது.

கருவறைக்கு செல்லும் பாதையில் பாலி மொழியில் எழுதப்பட்ட பல கல்வெட்டுக்குறிப்புகளையும் காண முடிகிறது. 3584மீ உயரத்தில் அமைந்துள்ளதால், சார் தாம் கோயில்களில் யாத்திரை மேற்கொள்வதற்கு மிகச்சிரமமான கோயில் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோடைக்காலத்தின் 6 மாதங்களில் மட்டுமே இக்கோயிலுக்கு பக்தர்களும் யாத்ரீகர்களும் விஜயம் செய்ய முடியும்.  குளிர்காலத்தில் கடும்பனிப்பொழிவால் இப்பகுதி சூழப்பட்டிருக்கும் என்பதால் அக்காலத்தில் இக்கோயில் மூடப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் யாவுமே குளிர்காலத்தில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டிருக்கும். கேதார்நாத் பகுதியிலேயே வாழும் உள்ளூர் மக்கள் குளிர்காலத்தில் குறைந்த உயரத்திற்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்கின்றனர். கேதார்நாத் தெய்வத்தின் பூஜை ஸ்தலமும் உக்கிநாத் எனும் இடத்துக்கு குளிர்காலத்தில் மாற்றப்படுகிறது.

கேதார்நாத்துக்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் ஆதி குரு சங்கராச்சாரியாரின் சமாதி ஸ்தலத்தையும் பார்க்கலாம். இது கேதார்நாத் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

சங்கராச்சாரியார் அத்வைத வேதாந்த கருத்துக்களை பரப்பிய முக்கிய ஹிந்து குரு என்பது யாவரும் அறிந்ததே. சர் தாம் எனப்படும் முக்கிய ஹிந்து ஆன்மீக ஸ்தலங்களை கண்டறிந்தபின் இவர் தனது 32வது வயதில் இந்த கேதார்நாத் பகுதியில் முக்தி அடைந்துள்ளார்.

சோன்பிரயாக் எனும் இடம் கேதார்நாத்திலிருந்து 19 கி.மீ தூரத்தில் 1829 மீ உயரத்தில் அமைந்துல்ளது. இது மந்தாகினி ஆறும் பாசுகி ஆறும் சங்கமிக்கும் இடமாகும். இந்த சங்கமத்தின் ஆற்று நீருக்கு விசேஷ சக்திகள் உள்ளதாக நம்பிக்கை உள்ளது.

இந்த நீரை தொட்டவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் உண்டு என்பது ஐதீகம். வாசுகி தல் எனப்படும் பிரசித்தமான ஏரியின் பெயரால் அழைக்கப்படும்  மற்றொரு முக்கியமான இடம் கடல் மட்டத்திலிருந்து 4135 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

இது கேதார்நாத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த பிரம்மாண்டமான ஏரியை சுற்றிலும்  பிரம்மாண்டமாக இமயமலைதொடர்கள் எழும்பி நிற்பது பிரமிக்க காட்சியாகும். சௌகம்பா  சிகரமும் இந்த ஏரிக்கு அருகிலேயே உள்ளது.

சதுரங்கி மற்றும் வாசுகி என்ற பனிமலைகளை கடந்துதான் இந்த வாசுகி தல் ஏரிக்கு செல்ல முடியும் என்பதால் இது மிக மிக கடினமான பயணமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாகச மனமும், உடல் உறுதியும், தயார்நிலையும் கொண்டவர்கள் மட்டுமே இப்பயணத்தை மேற்கொள்ள முடியும்.

1972ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கேதார்நாத் காட்டுயிர் சரணாலயம் அலக்நந்தா ஆற்றுப்படுகையில் அமைந்திருக்கிறது. இது 967 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. இந்த சரணாலய வனப்பகுதி பெரும்பாலும் ஓக்,  பிர்ச்,  புக்யால் மற்றும் அல்பைன் மரங்களை கொண்டுள்ளது.

பலவிதமான உயிரினங்களும், தாவரங்களும் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன. காட்டுப்பூனைகள், கோரல்கள், நரி, கருங்கரடி, பனிச்சிறுத்தை, சாம்பார் மான், தாஹிர் ஆடு மற்றும் அருகி வரும் விலங்கினமான கேதார்நாத் கஸ்தூரி மான் போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.

பறவை ரசிகர்கள் விரும்பும் விதத்தில் இந்த சரணாலயத்தில் பலவகை ஈ பிடிப்பான்கள் மற்றும் குருவிகள் வசிக்கின்றன. விதவிதமான மீன்களையும் இப்பகுதியில் ஓடும் மந்தாகினி ஆற்றில் பார்க்கலாம்.

கேதர்நாத்துக்கு வரும் பயணிகள் நேரம் இருப்பின் குப்த்காஷி எனும் இடத்துக்கும்  விஜயம் செய்வது நல்லது. இங்கு 3 கோயில்கள் அமைந்துள்ளன. பழமையான விஷ்வநாதர் கோயில், மணிகர்னிக் குண்ட் மற்றும் அர்த்தநாரீஸ்வர் கோயில் என்பவையே அவை.

அர்த்தாநாரீஸ்வரர் கோயிலில்  ஆணும் பெண்ணுமான கோலத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கின்றார். விஷ்வநாதர் கோயிலிலும் சிவபெருமான தனது பல அவதாரக்கோலங்களில் வீற்றுள்ளார்.

இவை தவிர கேதார்நாத் பகுதியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் பைரவ நாதர் கோயிலும் உள்ளது. சிவபெருமானின் கணங்களில் ஒருவரான பைரவருக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோயிலிள் வீற்றிருக்கும் தெய்வச்சிலை கேதார்நாத் கோயில் முதல் ரவால் ஆக திகழ்ந்த பிகுந்த் என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 1982 மீ உயரத்தில் கௌரிகுண்ட் எனும் மற்றொரு பிரசித்தமான யாத்ரீக ஸ்தலமும் கேதார்நாத்துக்கு அருகில் உள்ளது. இங்கு பார்வதி தேவிக்கான புராதனமான கோயில் அமைந்துள்ளது.

புராணிகக்கதைகளின்படி இந்த ஸ்தலத்தில் பார்வதி சிவபெருமானை கணவனாக அடைய வேண்டி தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஒரு வெந்நீர் ஊற்றிலிருந்து வெளிப்படும் நீர் மருத்துவ குணங்களை மட்டுமல்லாமல் பாவங்களை தீர்க்கும் தெய்வ வலிமை கொண்டதாகவும் நம்பப்படுகிறது.

கேதார்நாத்துக்கு அருகில் 239 கி.மீ தூரத்திலேயே டேராடூன் நகரின் ஜோலி கிராண்ட்  விமான நிலையம் உள்ளது. ரயில் மூலம் கேதார்நாத் வரவிரும்பும் யாத்ரீகர்கள் ரிஷிகேஷ் ரயில் நிலையம் வரை வந்து அங்கிருந்து கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம். ரிஷிகேஷிலிருந்து கேதார்நாத் 227 கி.மீ தூரத்தில் உள்ளது.

மே மாதம் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு இடையே உள்ள பருவம் கேதார்நாத் புனித ஸ்தலத்திற்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் இப்பகுதியில் சுற்றுச்சூழல் இனிமையானதாக காட்சியளிக்கிறது. கடும் பனிப்பொழிவின் காரணமான கேதார்நாத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள் குளிர்காலத்தில் தற்காலிகமாக இடம் பெயர்ந்து விடுவர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க தகவலாகும்.

Please Wait while comments are loading...