பல்வேறு பழங்கால கோவில்களுக்கும், கோட்டைகளுக்கும், கட்டமைப்புகளுக்கும், கடற்கரைகளுக்கும், நவீன நகரங்களுக்கும், பார்ட்டிகளுக்கும், வித விதமான உணவுகளுக்கும், மால்களுக்கும், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் பெயர் போன பரபரப்பான நகரமாக இருக்கிறது - சென்னை! ஆனால் எப்பொழுதும் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் சென்னையில் பல்வேறு அமைதியான இடங்களும் உண்டு என்று உங்களுக்கு தெரியுமா? சென்னைக்கு அருகே ரூ.25 கோடி ரூபாய் செலவில் புலம்பெயரும் பறவைகளுக்கான (Migratory birds) சர்வதேச மையத்தை அமைக்கவிருக்கிறது. இனி கூடிய சீக்கிரத்தில் சென்னை வாசிகள் அழகான பல அரியவகை பறவைகளைக் கண்டு களிக்கலாம்!

பல சுற்றுலா அம்சங்கள் கொண்ட தமிழகம்
இந்தியாவின் பழமையான கலாச்சாரத்தைக் கொண்டுள்ள மாநிலமாக திகழும் தமிழ்நாடு பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களுக்கும், மலைவாசஸ்தலங்களுக்கும், கடற்கரைகளுக்கும், சாகச சுற்றுலாத் தலங்களுக்கும் தாயகமாக உள்ளது. பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்ட தமிழத்தில் இன்னொரு அங்கமாக சர்வதேச இடம்பெயர்ந்த பறவைகளுக்காக பறவைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படவிருக்கிறது.

சென்ட்ரல் ஆசியன் ஃப்ளைவேயில் சென்னை
இதற்கு காரணம் என்னவென்றால் சென்னையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல்லாயிரக்கணக்கான புலம் பெயர்ந்த பறவைகளுக்கு பிடித்த இடமாக இருப்பதால், ஆண்டுதோறும் தொலைதூர நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன. மேலும் இந்த ஆண்டு பட்ஜெட்டில், இந்த இடம்பெயர்ந்த பறவைகளுக்காக பறவைகள் பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.25 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முடிவு
2023 - 24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்தது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டாலும், சென்னைக்கு அருகே சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எடுத்ததன் நோக்கத்தை கூறிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ட்ரல் ஆசியன் ஃப்ளைவே (Central asian flyway) பாதையில் தமிழ்நாடு அமைந்திருப்பதையும், பல புலம்பெயர் பறவைகளை வசிப்பதையும் சுட்டிக்காட்டினார்.

பறவைகள் அழிந்து வருவதற்கான காரணம்
சதவீத காலநிலை மாற்றங்கள் சில வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அவை அவற்றின் அழிவுக்கு வழிவகுக்கும். அதைத் தவிர்க்கவும், பறவைகள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களின் சிறந்த இடமாக உலகை மாற்றவும், இந்த பறவை பாதுகாப்பு மையம் முக்கியமானது. சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையம் பறவைகளின் பாதுகாப்பு மற்றும் பறவையியல் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ட்ரல் ஆசியன் ஃப்ளைவே என்றால் என்ன?
புலம் பெயர்ந்த பறவைகள் என்றால் என்ன? அவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன என்று நீங்கள் யோசித்தது உண்டா? எங்கோயோ கடல் கடந்து கண்டங்கள் கடந்து பறவைகள் புலம் பெயர்ந்து வருகின்றன. சென்ட்ரல் ஆசியன் ஃப்ளைவே என்பது நீர்வாழ் பறவைகளின் முக்கியமான இடம்பெயர்ந்த பாதைகளின் தொகுப்பாகும் - அவற்றில் பெரும்பாலானவை சைபீரியாவில் உள்ள இனப்பெருக்கம் செய்யும் இடங்களிலிருந்து இந்தியா, மேற்கு ஆசியா, இந்தியப் பெருங்கடல் பிரதேசம் மற்றும் மாலத்தீவுகள் வரை நீண்டுள்ளன. இதன் கீழ் நம் தமிழகமும் வருவது சிறப்புக்குரியது.

பறவைகளை பாதுகாக்க முயற்சி
நீர்ப்பறவைகள் மற்றும் சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச திட்டங்களை நிர்வகிக்க சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் நடவடிக்கை எடுத்து உத்திகளை உருவாக்கி வருகிறது. தவிர, மாநில சுற்றுச்சூழல் மற்றும் வன முகமைகள், பல கல்வி நிறுவனங்கள், தொழில்முறை நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்-பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் செயல் திட்டங்களை செயல்படுத்துகின்றன. அதனுடன் சேர்ந்து தமிழக அரசு இந்த சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையத்தை அமைக்கவிருக்கிறது.

சென்னைவாசிகள் மகிழ்ச்சி
182 இனங்களைச் சேர்ந்த 279 வகையான பல லட்சக்கணக்கான பறவைகளை ஆதரிக்கும் முக்கிய பாதையில் தமிழ்நாடு அமைந்திருப்பதால், அவற்றை பாதுகப்பாது நம் கடமை. சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையத்தை நிறுவுவதன் மூலம், அழிந்து வரும் இந்த உயிரினங்களை நாம் பாதுகாக்கலாம். அதோடு இது சென்னைக்கு அருகில் அமையவிருப்பது நம் அதிர்ஷ்டம் தான். எப்பொழுதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சென்னை வாசிகளுக்கு பறவைகளை பார்த்து மகிழ்வது என்பது ரிலாக்ஸ் ஆக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்!



Click it and Unblock the Notifications





