Search
  • Follow NativePlanet
Share
» »அச்சு அசல் சபரி மலை போல இருக்கும் சென்னை ஐயப்பன் கோவில் – “வட சபரி”

அச்சு அசல் சபரி மலை போல இருக்கும் சென்னை ஐயப்பன் கோவில் – “வட சபரி”

கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணியஸ்தலமான சபரிமலையில் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கார்த்திகை மாதம் பிறந்தாலே, சுவாமி ஐயப்பனின் அதிர்வுகள் நம்மை ஆட்கொள்ளும். எங்கு பார்த்தாலும் மாலையணிந்த பக்தர்கள் இருமுடிக் கட்டிக்கொண்டு சபரிமலைக்கு செல்வார்கள். ஆனால் சபரிமலைக்கு எல்லோராலும் செல்ல முடிவது இல்லை, சில காரணங்களால் பிரயாணம் தள்ளிக்கொண்டே செல்லும். ஆனால், அப்படி செல்ல முடியாதவர்கள் சென்னையில் உள்ள இந்த கோயிலுக்கு மாலையணிந்து இருமுடியுடன் சுவாமி ஐயப்பனை வழிப்பட்டு செல்கின்றனர். அந்த கோயில் எங்கே இருக்கிறது? எப்படி செல்வது? சென்னையில் உள்ள மற்ற ஐயப்பன் கோவில்களையும் பற்றி இங்கே காண்போம்!

சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த அதிசயக் குழந்தை

சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த அதிசயக் குழந்தை

மகிஷாசுரனை வதம் செய்த அன்னை ஆதிபராசக்தியின் மீது கோபம் கொண்டு, அவனது தங்கையான மகிஷி பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து வரங்களைப் பெற்றாள். வரம் பெற்ற மகிஷி தேவர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தி வந்தாள். மிகவும் சக்தி வாய்ந்த மகிஷியை அழிக்க மிகவும் சக்தி வாய்ந்த ஒரு சக்தி உருவாக வேண்டும் என்பதற்காக, விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். சிவபெருமானுக்கும், விஷ்ணுவான மோகினிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனைத்து தெய்வாம்சங்களும் அமைந்திருந்தது. சிவனும், விஷ்ணுவும் காட்டில் ஒரு மரத்தடியில் குழந்தையை அதன் கழுத்தில் ஒரு மணி மாலையை அணிவித்து போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

மகிஷியை வதம் செய்த ஐயப்பன்

மகிஷியை வதம் செய்த ஐயப்பன்

குழந்தையின்றி தவித்துக் கொண்டிருந்த பந்தள மகாராஜா ராஜசேகரன் ஒரு நாள் வேட்டைக்கு செல்லும் போது, மரத்தடியில் ஜொலித்துக் கொண்டிருந்த குழந்தை ஐயப்பனை அரண்மனைக்கு எடுத்துச் சென்றார். பெரும் மகிழ்ச்சி அடைந்த ராஜாவும் ராணியும் ஐயப்பனை சீராட்டி பாராட்டி வளர்த்தார். மணிகண்டன் வந்த நேரம், அவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர வளர, மந்திரியின் சூழ்ச்சியும் வளர்ந்தது. மந்திரியின் சூழ்ச்சியால் ராணி தனக்கு தீராத வயிற்று வலி வாட்டுகிறது என்றும், அரண்மனை வைத்தியரைக் கொண்டு இதற்கு புலிப்பால் கொண்டு வந்தால் குணமாக்க முடியும் என்று சொல்ல வைத்தாள். சூழ்ச்சியை அறிந்து கொண்ட 12 வயது பாலகனான ஐயப்பன் காட்டிற்கு சென்றார். காட்டிற்குள் வந்து கொண்டிருந்த ஐயப்பனை தடுத்து நிறுத்தினாள் மகிஷி. வில்லாளி வீரன் ஐயப்பன் மகிஷியுடன் சண்டையிட்டு இறுதியில் மகிஷியை அழித்தார்.

அம்பினால் உருவான சபரிமலை

அம்பினால் உருவான சபரிமலை

மகிஷியின் அழிவால் தேவர்களும் ரிஷிகளும் முனிகளும் ஆனந்தமடைந்தனர். புலிப்படையுடன் புலி மீது அமர்ந்து அரண்மனைக்கு சென்றார் பால மணிகண்டன். தன் தவறை உணர்ந்த ராணியும் மந்திரியும் மனமுருகி நின்றனர். தான் பிறந்த நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும், தான் தேவலோகம் போவதாகவும் ஐயப்பன் கூறினார். இதனால் மனமுடைந்த பந்தள ராஜா, தன் ஆசை மகனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டுமென்று விரும்பினார். சரி, நானே ஒரு அம்பை எய்கிறேன், அது எங்கெ விழுகிறதோ அங்கே கோயில் காட்டுங்கள். நான் அதனுள் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறேன் என்றார். அதன்படி அம்பு விழுந்த இடம் தான் இன்று ஐயப்பன் குடிக் கொண்டிருக்கும் சபரி மலை ஆகும்.

சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதம்

சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதம் மட்டுமே அனைத்து நாட்களிலும் நடை திறந்து இருக்கும். மீதி எல்லா மாதங்களிலும் மாதாந்திர பூஜைக்காக ஒரு சில நாட்களே நடை திறக்கப்பட்டு பூஜை முடிந்த பின்னர் சாற்றப்படும். மண்டல பூஜை மற்றும் மகர ஜோதிக்காக திறக்கப்பட்டிருக்கும் கோவிலில் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை வருவதற்கு முன்னரே பல பக்தர்கள் மாலை போட்டு கொள்வார்கள்,சரியாக கார்த்திகை 1 அன்று அய்யனை காண வேண்டுமென்று, பெரும்பாலான பக்தர்கள் கார்த்திகை 1 அன்று மாலை போட்டு மகரஜோதியன்று அய்யனை தரிசனம் செய்வார்கள். கார்த்திகை 1ம் தேதியான நவம்பர் 17 அன்று சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கியது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்னும் கோஷம் விண்ணையும் மண்ணையும் அதிர வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

சென்னையில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில்

சென்னையில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில்

பல்வேறு காரணங்களால் சபரி மலைக்கு எல்லோராலும் செல்ல முடிவது இல்லை. ஆனால் சபரி மலைக்கு செல்ல முடியாதவர்கள் சென்னையில் உள்ள இந்த கோயிலுக்கு வந்து விட்டு சுவாமி வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் சபரி மலையில் இருப்பது போன்றே பதினெட்டு படிகள், ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் கருவறை, மாளிகைபுரத்தம்மன் சன்னதி, கன்னி மூலக் கணபதி, மஞ்சள் மாதா சன்னதி, நாகாராஜன் சன்னதி என அனைத்து அம்சங்களும் உண்டு. நீங்கள் இந்த கோவிலுக்கு வந்தாலே உங்களுக்கே தெரியும், நீங்கள் ஒரு நிமிடம் நிச்சயம் யோசிப்பீர்கள், "நாம் உண்மையிலேயே சென்னையில் தான் இருக்கிறோமா அல்லது சபரிமலையில் இருக்கிறோமா என்று". இந்த கோவில் அப்படியே சபரிமலை ஐயப்ப கோவிலின் நகல் போன்றே இருக்கிறது.

ராஜா அண்ணாமலைபுரம் கோயில்

ராஜா அண்ணாமலைபுரம் கோயில்

ராஜா முத்தையா செட்டியாரின் மகனான ராமசாமி செட்டியார் 1973 ஆம் ஆண்டு முதன் முதலில் சபரிமலைக்கு சென்று வருகிறார். அந்த தெய்வீக அனுபவத்தை உணர்ந்த அவர் இதே போல எல்லோரும் உணர வேண்டும் என்பதற்காக இந்தக் கோவிலை கட்டினார். சபரிமலைக்கு வர முடியாத அனைத்து தரப்பினரும் இங்கு வந்து அய்யனை வழிபட வேண்டும் என்பதற்காக இந்த கோயிலைக் கட்டியுள்ளார். 1982 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இக்கோயிலில் ஐயப்பனின் பஞ்ச லோக சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாகர்கோயிலைச் சேர்ந்த ஒரு ஸ்தபதியே இந்த சிலையை செய்துள்ளார். ராஜா அண்ணாமலைபுரம் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் டிரஸ்ட் இப்போது இந்த கோவிலை நிர்வகித்து வருகிறது.

வட சபரி ஸ்ரீ சுவாமி ஐயப்பன் கோயில்

வட சபரி ஸ்ரீ சுவாமி ஐயப்பன் கோயில்

கடற்கரை கோவில் ஓரத்தில் அழகாக அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு அனைத்து தரப்பினரும் வருகை தரலாம். சபரி மலைக்கு செல்ல முடியாத பெரியவர்கள், இளம் பெண்கள் என அனைவரும் வரலாம். சபரி மலை ஐயப்பன் கோவில் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இந்த கோவில். சபரி மலை ஐயப்பனுக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் இங்கும் செய்யப்படுகிறது. இத்தனை சிறப்புகள் இருப்பதால் தான் இக்கோயில்'வட சபரி' அதாவது வடக்கு திசையில் உள்ள ஐயப்பன் கோவில் என்றழைக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு செல்வாக்கு இருப்பவராக இருந்தாலும் கூட சபரிமலை ஐயப்பன் கோவிலின் பதினெட்டு படிகளை இருமுடி இல்லாமல் மிதிக்க முடியாது. அது போல தான் இங்கும் இருமுடி இல்லாமல் நீங்கள் பதினெட்டு படிகள் மீது கால்வைக்க முடியாது. இருமுடி அல்லாதவர்கள், பெண்கள் வந்து செல்ல வேறொரு வழி உள்ளது.

சபரிமலைக்கு செல்ல முடியவில்லையா? வருத்தம் வேண்டாம் அய்யன் அழைக்கும் போது செல்லலாம். இப்போது இங்கே சென்று வாருங்கள்! அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.

Read more about: chennai tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X