Search
  • Follow NativePlanet
Share
» »ஆலப்புழா தெரியும் அது என்ன மலம்புழா? தெரிஞ்சிக்கணுமா?

ஆலப்புழா தெரியும் அது என்ன மலம்புழா? தெரிஞ்சிக்கணுமா?

By Vicky

மேற்குத் தொடர்ச்சி மலையின் பிண்ணனியில் ஆழகாக தோற்றமளிக்கும் கேரளாவிலேயே மிகப் பெரிய இந்த நீர்தேக்கம் 355 அடி உயரமானது. கேரளாவின் இரண்டாம் மிக நீளமான நதியான பாரதபுழாவின் கிளையான மலம்புழா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் நீர், குடிநீராக வழங்கப்படுவதுடன் வேளாண்மைக்கும் பயனபடுத்தப்படுகிறது.

இந்த அணை மின்சாரம் தயாரிப்பதற்கும் மீன் வளர்ப்பதற்கும் உபயோகமாக உள்ளது. இந்த அணையிலிருந்து வசதியான கால்வாய் அமைப்புகள் வழியாக நீர்ப்பாசனத்திற்கு பெருமளவில் தண்ணீர் கிடைக்கிறது. பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இயற்கை அழகும் நிறைந்த மலம்புழா அணை ஒரு சிறந்த சுற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.

ஆலப்புழா தெரியும் அது என்ன மலம்புழா?

PC : Ranjithsiji

இந்த அணை பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவிலும் பாலக்காடு KRTC பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து கோயம்புத்துர் விமான நிலையம் 55 கி.மீ தொலைவிலும் கோழிக்கோடு விமான நிலையம் 67 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இந்த அணைக்கு அருகில் பசும் புல்வெளிகள் நிறைந்த எழில்மிகு தோட்டத்தையும் இழுவை வண்டியையும் (Rope Way) குழந்தைகள் விளையாட்டுப் பூங்காவையும் நீங்கள் காணலாம். இங்குள்ள ஏரியில் படகோட்டுவதற்கான வசதிகளும் உண்டு.

காண்போரை வியப்பில் ஆழ்த்தும் அடர்ந்த பசுமையான மரங்களும் செடிகொடிகளும் நிரம்பிய இடம் தான் மலம்புழா. இங்கு அமைந்திருக்கும் இயற்கையுடன் ஒன்றிய மலம்புழாத் தோட்டம் கேரளாவின் பிருந்தாவனம் என்று கருதப்படுகிறது.
இத்தோட்டத்திற்குள் அமைந்திருக்கும் பாறைத் தோட்டம் (Rock garden) சுற்றுலாப் பயணிகள் ரசிக்க வேண்டிய மிக முக்கியமான இடமகும்.

ஆலப்புழா தெரியும் அது என்ன மலம்புழா?

PC : Shanmugamp7

நேர்த்தியாகத் தோற்றமளிக்கும் இந்தத் கலைத் தோட்டத்தை உடைந்து போன வளையல் துண்டுகள், தரை ஓட்டுத் துண்டுகள், உபயோகமற்ற பிளாஸ்டிக் குவளைகள் மற்றும் தூக்கி வீசப்பட்ட உபயோகமற்ற பல்வேறு பழையப் பொருட்களைக் கொண்டு பத்மஸ்ரீ நேக் சன்த் சய்னி என்பவர் மிக நேர்த்தியாக கலைநயத்துடன் வடிவமைத்து உருவாக்கியிருக்கிறார். இவரால் சண்டிகரில் உருவாக்கப்பட்ட உலகப் புகழ் பெற்ற மற்றொருப் பாறைத் தோட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மலம்புழாத் தோட்டத்தில் கேரளாவைக் சேர்ந்த கானாயி குஞ்ஞிராமன் என்ற பிரசித்தி பெற்ற சிற்பக் கலைஞரால் உருவாக்கப்பட்ட யக்ஷி என்ற பெண் சிற்பம் காணப்படுகிறது. கேரள மாநிலத்தின் சிறப்பு வாய்ந்த சிற்பமாகக் கருதப்படும் இச்சிற்பம் ஒரே கல்லினால் செதுக்கப்பட்டது. இந்தத் தோட்டத்தின் நடுவே ஒடும் வாய்க்காலும் அதன் மேல் அமைக்கப்பட்டிருக்கும் தொங்கு பாலமும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன.

இந்தஅணைக்கு மிக அருகில் மீன் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் வளர்ப்புத் தொட்டி (Aquarium) சுற்றுலாப் பயணிகளின் கண்களைக் கவர்கின்றது. இதன் உள்ளே பல வகையான மீன்களும் கடல்வாழ் உயிரினைங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மலம்புழாத் தோட்டத்திற்கு வெளியேக் காணப்படும் பாம்புப் பூங்காவில் மலைப்பாம்பு, நாகப்பாம்பு, விரியன் பாம்பு உட்பட்டப் பலவகை விஷமுள்ள மற்றும் விஷமற்ற பாம்புகள் தனித்தனியே கண்ணாடிக் கூண்டிற்குள்ளே வைக்கப்பட்டுள்ளன. மலைப் பாம்புகள், முதலை மற்றும் ஆமைகளும் இங்கு வளர்க்கப்படுகி்ன்றன. மேலும் ஜப்பானியப் பூங்கா ஒன்றும் அருகில் உள்ளது.

ஆலப்புழா தெரியும் அது என்ன மலம்புழா?

PC : Akhilan

இங்குள்ள நீர் தேக்கத்தில் படகுப் பயணம் மிகவும் பிரசித்தி பெற்றது. பல திரைபடக் காட்சிகளை இங்கு ஷூட் செய்திருக்கிறார்கள். இந்தத் தோட்டத்தில் காணப்படும் நீச்சல் குளத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் குளிக்கும் வசதி உண்டு. ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனிதனி நேரங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். நீங்கள் குளுகுளுவென புத்துணர்ச்சியூட்டும் குளியலை அனுபவிக்க தமிழ்நாட்டிலுள்ள குற்றாலத்தைப் போன்ற ஒர் அருவியும் இந்தத் தோட்டத்தில் உண்டு.

"உடான் கடோலா" என்றழைக்கப்படும் இழுவை வண்டியில் (Rope Way) நீங்கள் பயணம் செய்தால் மலம்புழா அணை மற்றும் தோட்டத்தை மிக அற்புதமான நினைவை விட்டு நீங்காத கோணத்தில் (Aerial view)கண்டு ரசிக்கலாம். இந்தக் கார் பயணத்தின் போது அழகிய மேற்குத் தொடர்ச்சி மலையின் கண்கொள்ளாக் காட்சி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.
தென் இந்தியாவில் இயங்கும் ஒரே இழுப்பு வண்டிப்பயணம் இங்கு தான் காணப்படுகிறது. கிட்டத்தட்ட 60 அடி உயரத்தில் 64 கார்கள் 2000 அடி தூரம் விரைந்து செல்கின்றன. இரண்டு பேர்கள் மட்டும் பயணம் செய்யும் வசதியுடன் கூடிய கார்கள் 20 நிமிடங்களில் புறப்பட்ட இடத்திற்கே பயணிகளைக் கொண்டுவந்து இறக்கி விடும். நீங்கள் செய்யும் மெய் சிலிர்க்க வைக்கும் இந்த மறக்க முடியாத கேபிள்கார் பயணம் உண்மையில் உங்கள் மனதிற்கு ரம்மியமாக இருக்கும்.

மலம்புழாவில் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் திரெட் கார்டன் ஆகும். இது மற்ற தோட்டங்களை போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் அந்தோணி ஜோசப் என்பவரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான செயற்கைத் தோட்டமாகும். இங்குள்ள கண்ணாடி அறையில் காட்சியளிக்கும் வண்ண வண்ண செடிகளும் பூக்களும் முழுக்க முழுக்கக் கயிற்றை கொண்டு நேர்த்தியாக உருவாக்கப்பட்டவை. இந்த செடிகளையும் மலர்களையும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் எந்த விதமான இயந்திரத்தையும் பயனபடுத்தாமல் வெறும் கைகளினால் உருவாக்கினார்கள் என்பது ஒர் வியப்பிற்குரிய விஷயமாகும். உண்மையான மலர்களைப் போலவும் செடிகளைப் போலவும் தோற்றமளிக்கும் இந்த அற்புதப் படைப்புகள் காண்போரை பிரமிக்க வைக்கின்றன.

ஆலப்புழா தெரியும் அது என்ன மலம்புழா?

PC : Ranjithsij

இந்த அணையிலிருந்து ஏறத்தாழ 2 கிலோமீட்டர் தொலைவில் ஃபேண்டஸி பார்க் (Fantasy Park) என்ற அற்புதமான கேளிக்கை பூங்கா அமைந்திருக்கிறது. கேரளாவில் அமைக்கப்பட்டமுதல் ஃபேண்டஸி பார்க் இது தான். எல்லா வயதினருக்கும் ஏற்ற பல்வேறு விளையாட்டுக்கள் இதில் காணப்படுகின்றன. இந்த பூங்கா உலர்ந்த பூங்கா (Dry Park), ஈரப் பூங்கா (Wet Park) மற்றும் விண்வெளிக் கோள்கள் காட்சியகம் (Planetariam) என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. இங்கு விளக்கப்படும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி தொழில்நுட்ப தகவல்கள் பார்வையாளர்களின் அறிவுக்கு விருந்தாக இருக்கின்றன. விண்கோள்கள் காட்சியகம் மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒர் இடமாகும்.

பசுமை நிறைந்த மலம்புழாவில் உயர்ந்த நிலப் பகுதிகளும் தாழ்ந்த நிலப் பகுதிகளும் காணப்படுகின்றன. தாழ்ந்த நிலப் பகுதிகளில் தேங்காய், பாக்கு, முந்திரி, மிளகு மற்றும் ரப்பர் போன்றவை பயிரிடப்படுகின்றன. பாலக்காட்டில், ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களில் அதிக உஷ்ணமாக இருப்பதால் அச்சமயங்களில் இங்கு செல்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை மலம்புழாவிற்குச் சுற்றுலாப் பயணம் செல்ல மிகப் பொருத்தமான காலமாக இருக்கிறது.

ஜூன் இரண்டாவது வாரம் முதல் ஜூலை இறுதி வரை இங்கு மழைக் காலம். மழைக் காலம் முடிந்தவுடன் இங்கு சென்றால் பசுமை நிறைந்த மலைபகுதியையும் நீர் நிரம்பிய அணையையும் கண்டு ரசிக்கலாம். கேரள மாநிலத்தின் மிகச் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகத் திகழும் மலம்புழா அணைக்கு ஒரு முறை நீங்கள் செல்வது உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும் என்பது உறுதி.

மலம்புழா சுற்றுலா பயணத்தின் போது பரம்பிக்குளம் சரணாலயம், சைலன்ட் வேல்லி தேசிய பூங்கா, நெல்லியம்பதி, திப்பு சுல்தான் கோட்டை, மயிலாடும்புரா மயில்கள் சரனாலயம், மான் பூங்கா, போத்துண்டி நீர்த்தேக்கம் மற்றும் தோணி பாதுகாக்கப்பட்ட காடுகள் போன்ற இடங்களுக்கும் நீங்கள் சென்று வரலாம்.

Read more about: travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more