» »மூன்று மலைகளின் நடுவே உருகிவரும் பனி மலைகளின் இடையே ஒரு அற்புத மலையேற்றம்!

மூன்று மலைகளின் நடுவே உருகிவரும் பனி மலைகளின் இடையே ஒரு அற்புத மலையேற்றம்!

Written By:

உத்தரகண்ட் மாநிலம் மூன்று முக்கிய பருவகாலங்களை கொண்டுள்ளது. வழக்கமான இந்திய பருவங்களான கோடைக்காலம், குளிர்காலம் மற்றும் மழைக்காலம் என்பவையே அவை. மேலும் இப்பகுதியின் பருவநிலை அந்தந்த இடங்களின் புவியியல் அமைப்புகளை பொறுத்து மாறுபட்ட காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலைப்பாங்கான பகுதிகளே இங்கு அதிகம் என்றாலும் சமவெளிப்பகுதிகளும் குறைந்த அளவில் இம்மாநிலத்தில் இடம் பெற்றிருக்கின்றன. எனவே பருவநிலை என்பது அந்தந்த இடங்களின் புவி அமைப்புக்கேற்ப மாறுபட்டு காணப்படும். பொதுவாக கோடைக்காலமே இம்மாநிலத்தில் சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக இருக்கும். இக்காலத்தில் நிலவும் இதமான சூழல் பயணத்தை இனிமையானதாக மாற்றும். வாருங்கள் இந்த இடத்துக்கு ஓர் இன்பமான மலையேற்றப் பயணம் செல்வோம்

 நேரு மலையேற்ற நிலையம்

நேரு மலையேற்ற நிலையம்

கடந்த 1965 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி நிறுவப்பட்ட நேரு மலையேற்ற நிலையம், மலைகளின் மேல் அலாதி பிரியம் கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பெயரால் வழங்கப்படுகிறது. இந்தியாவின் தலை சிறந்த மலையேற்ற நிலையங்களுள் ஒன்றான இது, ஆசியா முழுவதிலும் நன்கு அறியப்பட்டதாகத் திகழ்கிறது. அதன் பெயர் உணர்த்துவது போலவே, இந்நிலையம் மலையேற்றம் மற்றும் இதர சாகசங்களில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றது. இங்கு பயிற்சியின் போது சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தும் ஒழுங்காகக் கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்குகிறது. 1860 ஆம் ஆண்டின் ஆக்ட் எண் XXI இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலையம் உத்தர்காண்ட் முதலமைச்சரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது

மானேரி

மானேரி, உத்தர்காஷியிலிருந்து சுமார் 2 கி,மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது மிக சமீபத்தில் தான் சுற்றுலாத் தலமாக உருவாகி உள்ளது. பாகீரதி நதிக்குக் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு அணைக்கட்டும், இக்கிராமத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக விளங்குகிறது.

தெரிந்து கொள்ளுங்கள் : உத்தரகண்ட் மாநிலம் இந்தியாவின் 27வது மாநிலமாகும். 9-11-2000 அன்றுதான் இந்த மாநிலம் உருவாகியது.

nimindia.net

கேதார் மாசிப்

கேதார் மாசிப்

கேதார் மாசிப் எனும் இந்த இடம் கேதார்நாத், கேதார்நாத் கலசம் மற்றும் பரதேகுந்தா எனும் மூன்று மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 6000 மீ உயரத்தில் வீற்றிருக்கும் இந்த இடத்தின் வழியாகத்தான் பனிமலைகள் உருகி ஓடிவருகின்றன. மந்தாகினி ஆறும் இவ்வழியாகத்தான் ஓடி வருகிறது. கேதார்நாத் மலையும் கேதார்நாத் கலசமலையும் ஒன்றோடொன்று ஒரு ஆழமான ஆற்றுப்பிளவால் இணைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடல் மட்டத்திலிருந்து 6831 மீ உயரத்தில் வீற்றிருக்கும் கேதார்நாத் மலைச்சிகரத்திற்கு மலையேற்றம் செய்வது ஒரு கடினமான சாகச சாதனையாகும். அதிக உயரம் காரணமாக இந்த மலையுச்சியில் ஆக்சிஜன் அளவும் குறைவாகவே இருக்கும். கேதார்நாத் கோயிலுக்கு பின்னால் பரதேகுண்டாவை நோக்கி செல்லும் மலையேற்றப்பாதை வழியாக பயணிகள் மலையேற்றம் செய்யலாம். கேதார் மாசிப் பகுதியில் காணப்படும் பள்ளத்தாக்குப்பகுதியில் சோரபாரி தால் எனும் ஏரியும் அமைந்திருக்கிறது.

சோரபாரி தால்

சோரபாரி தால் எனும் இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 3900 மீ உயரத்தில் சோரபாரி பாமக் பனிமலையின் முகப்பில் அமைந்திருக்கிறது. கேதார்நாத் மற்றும் கீர்த்தி ஸ்தம்ப சிகரங்களின் அடிவாரத்தில் உள்ள இந்த இடத்திலிருந்து பிரமிக்க வைக்கும் இமலைமலைகளின் எழிற்காட்சிகளை தரிசிக்கலாம்.

இந்த ஏரியில் மஹாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டதால் காந்தி சரோவர் என்றும் இது அழைக்கப்படுகிறது. புராணிகங்களின்படி இந்த ஏரியில் மூழ்கி பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர் சொர்க்கத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்த ஏரிப்பகுதியை 3 கி.மீ தூரத்திற்கு மலையேற்றம் செய்து அடையலாம். கேதார்நாத் பகுதியிலுள்ள இரும்புப்பாலம் இந்த ஏரிப்பகுதிக்கான பாதையாக பயன்படுகிறது. காந்தி சரோவருக்கு செல்லும் பாதை பாதி தூரத்திற்கு நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஏரிக்கு செல்லும் வழியில் ஒரு நீர்வீழ்ச்சியையும் பயணிகள் காணலாம். இந்த இடத்தின் பருவநிலை அடிக்கடி மாறும் இயல்புடையது என்பதால் காலை நேரத்திலேயே இந்த ஸ்தலத்திற்கு விஜயம் செய்து விட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெரிந்துகொள்ளுங்கள் : ஆரம்பத்தில் இந்த மாநிலம் உருவாக்கப்படும்போது இதன் பெயர் உத்தராஞ்சல். அதன் பிறகு 2007ம் ஆண்டு தான் உத்தரகண்ட் எனும் பெயரைப் பெற்றது.

நைனித்தால்

நைனித்தால்


நைனித்தால் பகுதியின் மிக உயரமான சிகரமாக வீற்றிருக்கும் இந்த நைனா பீக் நைனித்தால் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. சைனா பீக் என்றும் அழைக்கப்படும் இது கடல் மட்டத்திலிருந்து 2611மீ உயரத்திற்கு எழும்பியுள்ளது. ஸ்னோ வியூ அல்லது மல்லித்தால் ஆகிய இடங்களிலிருந்து மட்டக்குதிரை மூலம் பயணிகள் இந்த சிகரத்திற்கு சென்றடையலாம்.

ஸ்னோ வியூ

ஸ்னோ வியூ என்பது கடல் மட்டத்திலிருந்து 1951 மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சமாகும். இது நைனித்தால் நகரிலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் உள்ளது. ரோப்வே எனப்படும் கயிற்றுக்கார்கள் அல்லது வாடகை வாகனங்கள் மூலம் பயணிகள் இந்த இடத்துக்கு வரலாம்.

ஷெர்கா தண்டா எனும் மலையுச்சியில் வீற்றிருக்கும் இந்த காட்சித்தளத்திலிருந்து இமயமலைத்தொடர்களின் பிரமிக்க வைக்கும் எழிற்காட்சிகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம். அக்டோபர், நவம்பர் மாதங்களில் இங்கு இயற்கைக்காட்சிகள் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் வெண்பளிங்குகல்லால் ஆன ஒரு சிறிய கோயில் ஒன்றும் உள்ளது. இது முண்டி எனும் தெய்வத்திற்காக கட்டப்பட்டிருக்கிறது. தவிர இக்கோயிலில் துர்க்கை, சிவன், சீதா, ராமர், லக்ஷ்மண் மற்றும் ஹனுமான் போன்ற இதர தெய்வங்களின் உருவங்களும் காணப்படுகின்றன. அருகிலுள்ள லிங் கோம்பா மற்றும் கதான் குன்குயோப் ஆகிய இடங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.

தெரிந்துகொள்ளுங்கள் : இந்தியாவின் புனித நதிகள் என்று கொண்டாடப்படும் கங்கையும், யமுனையும் இந்த மாநிலத்தில்தான் தோன்றுகிறது.

PC: Paul Hamilton

 லால் டிப்பா

லால் டிப்பா

டிப்போட் ஹில் எனப்படும் லால் டிப்பா முசூரியில் இருப்பதிலேயே உயரமான சிகரமாகும். முசூரியில் அதிகமான ஜனத்தொகை கொண்ட லாண்டார் பகுதியில் இவ்விடம் அமைந்துள்ளது.

லால் டிப்பா பகுதியில் 'டிப்போ' எனப்படும் சேகரிப்பு மையம் அமைந்துள்ளதால் டிபோட் ஹில் என்றும் கருதப்படுகிறது. அனைந்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் டவர்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவ முகாமும் இந்தக் குன்றில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 1967ல் அமைக்கப்பட்ட தொலைநோக்கியின் (தொலைநோக்கி) வழியாக பந்தர்பஞ்ச், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களை கண்டு ரசிக்கலாம்.

பாம்பின் முனை என அழைக்கப்படும் நாக் டிப்பா குன்றும் முசூரியில் அமைந்துள்ளது .சுற்றுலாப் பயணிகள் சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழலாம். சூரிய உதயத்தையும், மறைவையும் இங்கிருந்து கண்டுகளிக்கலாம். அதுமட்டுமல்லாது ஆங்கிலேயர் காலத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களையும் இங்கிருந்து கண்டுகளிக்கலாம்

முசூரி ஏரி

நகர கூட்டமைப்பும், முசூரி டெஹ்ராடூன் வளர்ச்சிக் கழகமும் இணைந்து முசூரி ஏரியை அழகிய சுற்றுலா மையமாக சமீபத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்.

முசூரி டெஹ்ராடூன் சாலையில் அமைந்திருக்கும் ஏரியில் பயணிகள் படகு சவாரி செய்து மகிழலாம். டூன் பள்ளத்தாக்கு மற்றும் அருகில் உள்ள அழகிய கிராமங்களையும் இங்கிருந்து காண முடிகிறது.

தெரிந்துகொள்ளுங்கள் : ஆயிரக்கணக்கான வகை பூக்களும், மருந்துகளும் காணப்படும் யுனெஸ்கோவின் பாரம்பரிய தலம் என்ற பெயரைப் பெற்ற பூக்களின் பள்ளத்தாக்கு இந்த மாநிலத்தில்தான் உள்ளது.

Samuel Bourne

கேதார்நாத் மலைகள்

கேதார்நாத் மலைகள்

கேதார்நாத் மலைகள் இமயமலையின் மேற்கு கார்வால் மலைப்பிரதேசத்தில் அமைந்திருக்கின்றன. கேதார்நாத் மற்றும் கேதார்நாத் கலசம் எனப்படும் இரண்டு சிகரங்கள் இந்த மலைகளில் எழும்பியுள்ளன. கேதார்நாத் கலசம் என்பது பிரதான சிகரத்திற்கு 2கி.மீ வட மேற்கே அமைந்துள்ள துணைச்சிகரமாகும். இந்த இரண்டு சிகரங்களும் கங்கோத்ரி பனிமலையின் தெற்கு பகுதியில் உள்ள முக்கியமான மூன்று சிகரங்களில் அடங்குகின்றன. கேதார்நாத் கலச சிகரத்தின் வடமேற்குபகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டிற்கான பாதைகளும் அமைந்துள்ளன. சாகசப்பிரியர்களிடையே இந்த இடம் பிரசித்தமாக அறியப்படுகிறது.

கேதார்நாத் கோயில்

இமயமலைத்தொடர்களின் அங்கமான கேதார்நாத் மலைகளில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் இந்தியாவில் ஹிந்துக்களின் முக்கியமான புனித யாத்திரைஸ்தலமாக புகழ் பெற்றிருக்கிறது.

இங்கு சிவபெருமானுக்கான முதன்மையான ஜோதிர்லிங்கம் அமைந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் கேதார்நாத்தில் 3584மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த ஜோதிர்லிங்கம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆதி சங்கராச்சாரியாரால் 8ம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு அருகில் மந்தாகினி ஆறு பிரம்மாண்டமாக ஓடுகிறது. இந்த கோயிலின் உள் மண்டப சுவர்களில் பல்வேறு ஹிந்து தெய்வங்களின் உருவங்களைக்காணலாம். கேதார்நாத் கோயிலுக்கு அருகிலேயே பாண்டதவர்களால் கட்டப்பட்டதாக கருதப்படும் மற்றொரு புராதனமான கோயிலும் அமைந்துள்ளது.

கேதார்நாத் கோயிலில் சிவனின் வாகனமான நந்தியின் சிலை கோயில் வாசலில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலானது செவ்வக வடிவிலான ஒரு மேடைத்தளத்தின் மீது துல்லியமாக வெட்டப்பட்ட பெரிய பாறைப்பலகைகளை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது.

இங்குள்ள கர்ப்பகிருகத்தில் பக்தர்கள் மூலவரை தரிசிக்கலாம். கோயில் வளாகத்தில் பூஜைகள் மற்றும் சடங்குகளுக்கென தனி மண்டபம் ஒன்றும் உள்ளது. புராணிகக்கதைகளின்படி குருஷேத்திரப்போர் முடிந்தபின் பாண்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபட இந்த ஸ்தலத்திலிருந்த கோயிலுக்கு வந்து வணங்கியதாக சொல்லப்படுகிறது.

தெரிந்துகொள்ளுங்கள் : இந்துக்களின் புனித தலங்களாக கருதப்படும் ஹரித்வார், கேதார்நாத், ரிஷிகேஷ், கங்கோத்ரி,யமுனோத்ரி ஆகிய இடங்கள் இந்த மாநிலத்தில்தான் இருக்கின்றன.

Paul Hamilton

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்