இந்தியாவின் கேரள கடற்கரையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த அற்புத 'லட்சத்தீவு'களுக்கு பயணம் செய்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும். இந்தியாவுக்கு சொந்தமான இந்த தீவுகளின் அற்புதங்களை ரசிக்க இந்தியக் குடியுரிமை அந்தஸ்தே போதும் எனும்போது இந்த சொர்க்கத்தீவுகளுக்கு செல்லாமல் தவிர்ப்பதில் அர்த்தமே இல்லை. கொஞ்சம் செலவுதான் ஆனாலும் செலவுக்கேற்ற அற்புதங்களையும் நாம் பெறலாம். வாருங்கள் அந்த இரு அதிசயத் தீவுகளைப் பற்றி காண்போம்.

சுஹேலி தீவுக்கூட்டம்
சுஹேலி பார் என்று அறியப்படும் இந்த தீவுக்கூட்டம் சுஹேலி வலியக்கரா மற்றும் சுஹேலி செரியக்கரா என்று இரண்டு சிறிய தீவுகளை உள்ளடக்கியதாகும். இவை அகத்தி தீவிலிருந்து 75 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன.

மரகதப்பச்சை நிறம்
இரண்டு தீவுகளும் பெரிய நீள் வட்ட வடிவத்தில் விளக்கின் வெளிச்ச விளிம்பு போன்று காட்சியளிக்கும் மரகதப்பச்சை நிறத்தில் ஜொலிக்கும் தரைக்கடல் பகுதியை கொண்டுள்ளன. இந்த தரைக்கடல் பகுதியில் ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

மெல்லிய மணல் திட்டு
இரண்டு தீவுகளுக்கும் இடையே காணப்படும் ஒரு நீண்ட மெல்லிய மணல் திட்டுப்பகுதி பலவித பறவைகள் வசித்து இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது.

மீன்கள் பதப்படுத்தப்படும்
சுஹேலி பார் தீவுப்பகுதியானது அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான பருவத்தில் ட்யூனா மீன்கள் பதப்படுத்தப்படும் தற்காலிக கேந்திரமாகவும் திகழ்கிறது. அச்சமயம் அருகிலுள்ள தீவுகள் மற்றும் அகத்தி தீவுகளிலிருந்து மீனவர்கள் இங்கு வருகை தந்து தற்காலிக குடியிருப்புகளையும் ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

தீவுச்சொர்க்கம்
தனிமையில் ஓய்வெடுத்து தீவுச்சொர்க்கத்தின் சூழலை நன்கு ரசித்து மகிழ இந்த சுஹேலி பார் தீவுகள் மிகவும் ஏற்றவையாகும். இருப்பினும் நன்கு திட்டமிட்டுக்கொண்டு தேவையான பொருட்களுடன் பயணம் மேற்கொள்வது சிறந்தது.

அழகிய சுற்றுலா
வியாபாரமயமாகிவிட்ட எத்தனையோ சுற்றுலாத்தலங்களை விடவும் இந்த சுஹேலி பார் தீவுகள் ஒரு வித்தியாசமான விடுமுறையை அளிக்க அரபிக்கடலில் வீற்றிருக்கின்றன.

அகத்தி தீவு
தீவில் கால் வைத்தவுடனேயே உங்களை தனது மாசு மருவற்ற இயற்கை வனப்பின்மூலம் இந்த தீவு மயக்கி விடுகிறது. அதற்கப்புறம் ஏதோ ஒரு உல்லாச பரவசம் உங்களை ஆட்கொள்வதை உணர்வீர்கள்.

கோடையில் குதூகலம்
அகத்தி மற்றும் லக்ஷ்வதீப் சமீப காலமாக கோடை சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கபுரியாக பிரசித்தமடையத் துவங்கியுள்ளன. எந்த வித வணிக சந்தடிகளும் இல்லாமல் முழுக்க முழுக்க இயற்கையின் தூய்மை மட்டுமே மிளிரும் இந்த தீவுக்கூட்டம் தற்கால நாகரிக தலைமுறையினரை பெரிதும் கவர்ந்திருப்பதில் வியப்பில்லை.

பிரம்மிக்க வைக்கும் அழகு
வெண்ணிறப்பரப்போடு காட்சியளிக்கும் கடற்கரைகளும், ஸ்படிகம் போன்று தூய்மையுடன் தீவுகளைச்சுற்றிலும் இள நீல நிறத்தில் மின்னும் தரைக்கடல் பகுதிகளும் நம்மை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன.

படகு பயணம்
கொச்சியிலிருந்து 200 கி.மீ தூர படகுப்பயணத்தின் முடிவில் இந்த சொர்க்கத்தீவை தரிசிக்கும்போது உங்கள் கண்கள் காணும் காட்சியை ஓப்புக்கொள்ளவே கொஞ்ச நேரம் பிடிக்கலாம் உங்களுக்கு!
All photos taken from
PC:WikiCommons



Click it and Unblock the Notifications




