Search
  • Follow NativePlanet
Share
» »வைகுண்ட ஏகாதேசியென்றால் ஸ்ரீரங்கம் மட்டுமல்ல – இந்த கோவில்களும் சிறப்பு தான்!

வைகுண்ட ஏகாதேசியென்றால் ஸ்ரீரங்கம் மட்டுமல்ல – இந்த கோவில்களும் சிறப்பு தான்!

"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என கிருஷ்ண பரமாத்மாவே கூறியுள்ளார், அந்த அளவுக்கு புனிதம் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. உற்சவத்திற்கு எல்லாம் உற்சவம் வைகுண்ட ஏகாதேசியாகும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி (திங்கள் கிழமை) அன்று வருகிறது.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியன்று அதிகாலை பரமபத வாசல் திறக்கப்படும். இந்த உற்சவத்தை நேரில் காணுவது மிகவும் விசேஷமாகும். ஆனால் எல்லோராலும் ஸ்ரீரங்கத்திற்கு செல்ல முடிவது இல்லை. சொர்க்கவாசல் திறப்பு ஸ்ரீரங்கத்தில் மட்டுமல்ல ஏனைய பல கோவில்களிலும் நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் செல்ல இயலாதோர் இந்த இடங்களுக்கு சென்று பகவானின் பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற்றிடுங்கள்!

 ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இங்கு நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார். இந்த ஆண்டும் இங்கு வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த உற்சவத்தில் நீங்களும் கலந்துக் கொண்டு ஸ்ரீ பார்த்தசாரதியின் அருளைப் பெற்றிடுங்கள்.

ஸ்ரீ நீர்வண்ண பெருமாள் கோவில், திருநீர்மலை

ஸ்ரீ நீர்வண்ண பெருமாள் கோவில், திருநீர்மலை

நின்ற கோலத்தில் நீர்வண்ணப் பெருமாளாக, இருந்த கோலத்தில் நரசிம்மராக, சயனக் கோலத்தில் ரங்கநாதராக, நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாளாகக் காட்சி தருவது காணக் கிடைக்காத பெரும் பேறு ஆகும். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான சென்னை திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ண பெருமாள் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சொர்க்க வாசல் திறப்பு வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி வருகிற 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சொர்க்கவாசல் திறப்பு அன்று கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொது தரிசனம் மற்றும் 50 ரூபாய் சிறப்பு தரிசன கவுன்டர்கள் திறக்கப்பட உள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதுரை

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதுரை

இக்கோயில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் என்றும் நவநீத கிருஷ்ணன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மா தன் பக்தருக்காக காட்சி கொடுக்க சிலையாக மாறிய திருத்தலம் இது. இந்த கோவிலின் மூர்த்தி அச்சு அசல் அப்படியே திருப்பதி பெருமாளை ஒத்து இருப்பதால் இது நாளடைவில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் என்று ஆனது. இக்கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. நீங்கள் மதுரைக்கு அருகில் இருந்தால் இக்கோவிலின் சொர்க்க வாசல் நிகழ்வில் கலந்துக் கொண்டு ஆசிப் பெற்றிடுங்கள்.

சிங்கவரம் ரங்கநாதர் கோயில், செஞ்சி

சிங்கவரம் ரங்கநாதர் கோயில், செஞ்சி

செஞ்சி சிங்கவரம் ரங்கநாதர் கோயில் 7 ஆம் நூற்றாண்டு பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட குடைவரை கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் திருப்பாற்கடல் திருமால் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதரை விட பெரிய உருவம் கொண்ட ரங்கநாதர் என்று கூறப்படுகிறது. கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வராகர் கோயிலாக இருந்த இந்த தலம் பின்னர் ரங்கநாதருக்காக குடைவரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பல சிறப்பம்சங்கள் வாய்ந்த இத்திருத்தலத்தின் வைகுண்ட ஏகாதேசி நிகழ்வில் பங்குக் கொண்டு பகவான் மகாவிஷ்ணுவின் ஆசியைப் பெற்றிடுங்கள்.

அருள்மிகு நாச்சியார் சமேத ரங்கநாதர் ஆலயம், ஸ்ரீவில்லிபுத்தூர்

அருள்மிகு நாச்சியார் சமேத ரங்கநாதர் ஆலயம், ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமையானது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் உற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் வழியாக ஆழ்வார்கள் எதிர்கொண்டு வரவேற்க ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெறும். இதனைக் காண கண் கோடி வேண்டும்.

ஸ்ரீ ஆண்டாள், இக்கோவிலில் சயன திருக்கோலத்தில் உள்ள வடபத்ரசாயி பெருமாளை நினைத்து தான் திருப்பாவையை இயற்றியுள்ளார். தமிழக அரசின் முத்திரை சின்னத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட கோபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் தான்.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், நாச்சியார்கோவில்

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், நாச்சியார்கோவில்

நாச்சியார் கோவிலில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். பெருமானின் வலதுபக்கத்தில் நம்பிக்கை நாச்சியார், வஞ்சுளவல்லி என்ற திருநாமத்துடன் தமது வலது திருக்கையில் வரத முத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்க விட்டுக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவ்வாறு நாச்சியார் மூலவர் பெருமாளுடன் மூலஸ் தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் மற்ற எந்த திவ்விய தேசத்திலும் இல்லாத வகையில் இக்கோவிலில் தரிசனம் தருகிறார். இந்த சிறப்பு வாய்ந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதேசி மிக சிறப்பாக நடைபெறும்.

 திரிவிக்கிரம பெருமாள் கோயில், சீர்காழி

திரிவிக்கிரம பெருமாள் கோயில், சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டத்தில் காழிச் சீராம விண்ணகரம், பாடலிகவனம் என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான, சீர்காழி திருவிக்கிரம பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி உற்சவம் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். நீங்கள் சீர்காழிக்கு அருகமையில் இருந்தால் இந்த கோவிலின் சொர்க்க வாச திறப்பில் கலந்துக் கொண்டு பகவானின் அருளைப் பெற்றிடுங்கள்.

மேற்கூறிய ஸ்தலங்கள் மட்டுமின்றி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயில் மற்றும் தமிழ்நாடு, புதுவையில் அமைந்துள்ள ஏனைய வைணவத் திருத்தலங்களிலும் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கோலாகலமாக நடைபெறும். உங்களுக்கு எந்த கோவில் அருகாமையில் இருக்கிறதோ அங்கு சென்று மனமுருகி மகாவிஷ்ணுவை வேண்டிடுங்கள், மோட்சம் கிட்டும்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X