• Follow NativePlanet
Share
» »கச்சத்தீவுல அப்படி என்ன தான் இருக்கு – ஏன் இத்தனை வருஷமா இந்தியாவால அத மீட்க முடியல?

கச்சத்தீவுல அப்படி என்ன தான் இருக்கு – ஏன் இத்தனை வருஷமா இந்தியாவால அத மீட்க முடியல?

உங்களுக்கு எத்தனை வயது ஆகி இருந்தாலும் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்டுக் கொடுப்போம்' என பல கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை கொடுப்பதை உங்களின் சிறு வயதில் இருந்தே நீங்கள் கேட்டு இருப்பீர்கள். எத்தனை காலமாக கச்சத்தீவு பற்றி கேள்விப்பட்டு கொண்டிருக்கிறோம் அல்லவா? எங்கு தான் இருக்கிறது கச்சத்தீவு? அதனால் என்ன பலன்? ஏன் இத்தனை வருடங்களாக இந்தியாவும் இலங்கையும் அதற்காக சண்டையிட்டு வருகிறார்கள் தெரியுமா?

காலம் காலமாக தொடரும் கச்சத்தீவு பிரச்சினை

கச்சத்தீவு மீட்பு என்பது தமிழக அரசியல் களத்திலும் இந்திய அரசியல் களத்திலும் ஒரு புதிய முழக்கம் அல்ல. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுகவும் அதிமுகவும் கச்சத்தீவை மீட்போம் என பல தேர்தல்களில் வாக்குறுதி வழங்கியுள்ளன. நாடாளுமன்றத்திலும் 1960களிலும் சரி, தற்போதும் சரி, இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது. நூறு ஆண்டுகளாக நிலவி வரும் இந்த விவகாரம் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக என கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

katchatheevuisland

இந்த இடத்திற்கா இப்படி ஒரு போராட்டம்

அரசியல் களத்தில் பேசப்படும் அளவு பெரிதாக இருக்கும் கச்சத்தீவு உண்மையில் 285 ஏக்கர் மட்டுமே கொண்ட சிறிய தீவாகும். இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்கள் தான், நீளம் 1.6 கி.மீ ஆகும். இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையிலான கடற்பகுதியில் கச்சத்தீவு உள்ளது. அதாவது, இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் இலங்கை யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தொலைவிலும் பாக் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மிகச் சிறிய தீவுதான் கச்சத்தீவு.

பாதிப்படையும் தமிழக மீனவர்கள்

கச்சத்தீவு அளவில் மிக சிறியதாக இருந்தாலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் அது அமைந்திருக்கும் பகுதி முக்கியமானதாகும். கச்சத்தீவு தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் ராமேஸ்வரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மீனவர்களின் மீன்பிடி உரிமை பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இது வரை 74 மீனவர்களை இலங்கை அரசு கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களின் 67 மீன்பிடி படகுகள் இலங்கையிடம் உள்ளது. இந்த தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்தியா கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.

ஒரு நாளும் இலங்கைக்கு சொந்தமில்லாத கச்சத்தீவு

வரலாற்றின் எந்த கால கட்டத்திலும் மக்கள் வசிக்காத இந்த தீவு, 17ஆம் நூற்றாண்டில், ராமநாபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமாக இருந்தது. 1622ஆம் ஆண்டு, ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட, சேதுபதி மன்னரால் வெளியிடப்பட்ட செப்பு பட்டயத்தில், கச்சத்தீவையும் தாண்டி, இலங்கையின் தலைமன்னார் கடல் பரப்பு வரை, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1822ஆம் ஆண்டு, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, ராமநாதபுரம் சமமஸ்தானத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டனர். அதன்படி, கச்சத் தீவு உட்பட, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட நிலபரப்பை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திக்கொள்ள உரிமை வழங்கப்பட்டது.

katchatheevuisland11

100 ஆண்டுகளாக கச்சத்தீவு மீது சொந்தம் கொண்டாடும் இலங்கை

1858ஆம் ஆண்டு, கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்து, இங்கிலாந்து ராணியின் ஆட்சியின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டபோது, கச்சத் தீவு, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தம் என்பது எழுத்துப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.ஆங்கிலேயருக்கு முன்னர், இலங்கையை ஆண்ட, போர்ச்சுகீசியர்களாலும், டச்சுக்காரர்களாலும் வெளியிடப்பட்ட இலங்கையின் வரைபடத்திலும், கச்சத் தீவு இடம் பெறவில்லை. இவ்வாறு, வரலாற்றின் எந்த சந்தர்ப்பத்திலும், இலங்கையின் நிலப்பரப்போடு இணைக்கப்படாத கச்சத்தீவிற்கு, 1921ஆம் ஆண்டு முதல் முறையாக இலங்கை அரசு சொந்தம் கொண்டாடியது.

நட்புக்காக தாரை வாரக்கப்பட்ட கச்சத்தீவு

1971ஆம் ஆண்டு, பாகிஸ்தானுடன் போரிட்ட இந்தியா, மிகப்பெரிய வெற்றியை பெற்று, பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கியது. சீனாவும், பாகிஸ்தானும், இலங்கையை தங்கள் நட்பு நாடாக மாற்றிக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டன. இந்தியாவின் நட்புநாடாகத் தொடர்வதற்கு கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பண்டார நாயக்கா கோரினார். சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சறுத்தல், ஸ்மைலிங் புத்தா திட்டத்தின் எதிர்விளைவு ஆகியவற்றுடன், பூகோள அரசியல் ரீதியாக இலங்கையின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த இந்திரா காந்தி, அதற்கு ஒப்புக் கொண்டார்.

மிகப்பெரிய அளவில் ஏமாற்றமடைந்த தமிழகம்

தமிழகத்தின் கருத்தை கேட்காமல், இந்திய நாடாளுமன்றத்திற்கு கூட தெரிவிக்காமல், இந்திரா காந்தி அவர்கள் 1974 ஆம் ஆண்டுஜூன் மாதம், 21 ஆம் தேதியில் கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தமிழக மீனவர்களின் எதிர்காலத்தை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம், ஆதம் பாலம் முதல், பாக் ஜலசந்தி வரையிலான கடல் பரப்பில், இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் எல்லைக்கோட்டை வகுத்தது.

இதற்கான முடிவு என்று தான் வரும்?

அப்பொழுதில் இருந்தே இன்று வரை கச்சத்தீவு பெரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க சென்றாலும் தமிழக மீனவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பினார். காங்கிரஸ் எப்படி நாட்டை பிளவுப்படுத்தியது என்பதற்கு உதாரணமாக இந்திரா கந்தி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை குறிப்பிட்டு பேசியதில் இருந்து மீண்டும் கச்சத்தீவு பிரச்சினை பெரிதாகியுள்ளது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+