ஜுல்டா மினாரா என்பது இரண்டு மினாரெட்கள் ஜோடியாக காணப்படும் அமைப்புகளை குறிப்பிடுகிறது. இது போன்ற இரண்டு ஜோடி மினாரெட் அமைப்புகள் அஹமதாபாத் நகரில் உள்ளன.
ஒன்று சரங்பூர் தர்வாஜாவிற்கு எதிரே உள்ள சிதி பஷிர் மசூதி வளாகத்திலும் மற்றொன்று அஹமதாபாத் ரயில் நிலையத்திற்கு எதிரேயும் உள்ளது. இந்த மினாரெட் ஜோடி அமைப்புகளில் ஒரு மினாரெட் கோபுரத்தை லேசாக அசைத்து ஆட்டும்போது சிறிது நேரம் கழித்து மற்றொரு மினாரெட் கோபுரமும் தானாக ஆடுவது இதுவரை விளக்கப்படாத கட்டிடக்கலை அதிசயமாக பிரசித்தி பெற்றுள்ளது.
சிதி பஷீர் மசூதியில் உள்ள இவ்வகை மினாரெட் ஜோடி மூன்று அடுக்குகள் மற்றும் பலகணி அமைப்புகளோடு காட்சியளிக்கின்றது. இந்த தூண் கோபுர அமைப்பில் காணப்படும் நுணுக்கமான கற்குடைவு அலங்கார அமைப்புகள் பிரமிக்க வைக்கும் தனித்தன்மையுடனும் துல்லியத்துடனும் வடிக்கப்பட்டிருக்கின்றன.
சுல்தான் அஹமது ஷாவிடம் பணி புரிந்த ஷிதி பஷீர் எனும் கலைஞர் இதை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. ஒரு கோபுரத்தை ஆட்டும் போது இன்னொரு கோபுரமும் ஆடுவது எப்படி என்பது தற்கால பொறியாளர்களையும் திகைக்கவைக்கும் அம்சமாக இருந்து வருகிறது.
இதற்கான காரணத்தை கண்டறியும் நோக்கத்துடன் ஆங்கிலேயர்கள் தற்போது அஹமதாபாத் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் மற்றொரு ஜோடி மினாரெட் அமைப்புகளை பிரித்து ஆராய முயற்சித்தனர்.
ஆனால் அவர்களால் அந்த மினாரெட் கட்டமைப்பை திரும்ப பொருத்தவே முடியவில்லை. இந்த மினாரெட் அமைப்புகள் பார்வையாளர்கள் ஏறிப்பார்க்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாகவும் கலையம்ச ரீதியாகவும் உன்னதமாக காட்சியளிக்கும் இந்த மினாரெட் ஜோடிகள் சுற்றுலாப்பயணிகளை வசீகரிக்கும் அம்சமாக அஹமதாபாத் நகரத்தில் வீற்றிருக்கின்றன.



Click it and Unblock the Notifications