தங்கக்கோயில், அம்ரித்ஸர்

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த தங்கக்கோயில் நாட்டிலுள்ள முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் சீக்கிய மதப்பிரிவின் அடையாளச்சின்னமாகவும் புகழுடன் அறியப்படுகிறது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். அம்ரித்ஸரில் உள்ள இந்த குருத்வாரா கோயில் 16ம் நூற்றாண்டில் 5 வது சீக்கிய குருவான அர்ஜன் தேவ்ஜி என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மஹாராஜா ரஞ்சித் சிங் இந்த கோயிலின் மேல்தளப்பகுதியை 400 கிலோ எடையுள்ள தங்கத்தகடுகளால் போர்த்தினார். அதற்குபிறகு இது தங்கக்கோயில் என்றழைக்கப்பட்டு வருகிறது.

சலவைக்கல்லால் ஆன இரண்டு அடுக்கு அமைப்பை கொண்டுள்ள இந்த குருத்வாராவை சுற்றி அம்ரித் சரோவர் எனும் புனித தீர்த்தக்குளம் அமைந்திருக்கிறது. ‘அம்ரித்’ எனும் சொல் அமிர்தத்தை குறிப்பிடுகிறது.

ஆதி கிரந்த் என்றழைக்கப்படும் சீக்கியர்களின் வேத நூல் புத்தகம் பகல் பொழுதில் மட்டும் இந்த கோயிலின் உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் போன்ற கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் நான்கு வாசல்கள் இந்த கோயிலுக்குள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அற்புத குருத்வாரா வளாகத்தில் நுழைந்த கணமே அச்சூழலின் நிலவும் ஆன்மீக தூய்மையையும், இறையுணர்வுக்கு மனிதர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தையும் நம்மால் உணர முடியும்.

சாதி, மத, தேச பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த கோயிலுக்குள் செல்லலாம். இருப்பினும் ஒரு சில விதிமுறைகள் காலங்காலமாக இங்கு பின்பற்றப்படுகின்றன. காலணிகளை தவிர்ப்பது, போதை வஸ்துக்களை தவிர்ப்பது, உட்பிரகாரத்தில் தரையில் அமர்வது போன்ற வழக்கங்கள் இங்கு நடைமுறையில் உள்ளன.

இந்திய சுற்றுலா பிரியர்கள், ஆன்மீக யாத்ரீகர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் தம் வாழ்நாளில் இந்தியாவில் தரிசிக்க வேண்டிய அம்சங்களில் ஒன்றாக இந்த தங்கக்கோயிலையும் கூறலாம். 

Please Wait while comments are loading...