ரூப்நகர் – சிந்துநதி பள்ளத்தாக்கு நாகரீகத்தின் அத்தாட்சி!

ரோபார் என்ற பெயரில் முன்பு வழங்கப்பட்டு வந்த ரூப்நகர், சட்லெஜ் நதியின் இடப்புற கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு புராதன நகரமாகும். இந்நகரம், 11 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட ராஜா ரோகேஷரின் புதல்வராகிய இளவரசர் ரூப் சென்னின் பெயரைக் கொண்டு வழங்கப்படுகிறது. இது, சிந்துநதி பள்ளத்தாக்கு நாகரீகத்தைச் சேர்ந்த பிராதன நகரங்களுள் ஒன்றாகும்.

இந்திய தொல்பொருளியல் ஆய்வுத் (ஏஎஸ்ஐ) துறையினால் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் இந்த நாகரீகத்தின் ஆறு வெவ்வேறு காலகட்டங்களின் மிச்சங்களை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த கலைப் பொக்கிஷங்களை பத்திரமாக பாதுகாக்கும் பொருட்டு, இந்திய தொல்பொருளியல் ஆய்வுத் துறை ஒரு பிரத்யேக அருங்காட்சியகத்தை இங்கு நிறுவியுள்ளது. இந்த அருங்காட்சியகம் ரூப்நகர் சுற்றுலா பயண நிரலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது.

ரூப்நகர் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

மாநில எல்லைக்கு மிக அருகாமையில், கிழக்குப்புறமாக அமைந்துள்ள ரூப்நகர், சட்லெஜ் நதிக்கும், ஷிவாலிக் மலைத்தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது.

இந்நகரம் அனந்த்பூர் சாஹிப், பக்ரா நங்கல் அணைக்கட்டு, ஜடேஷ்வர் மஹாதேவ் கோயில் மற்றும் கீரத்பூர் சாஹிப் போன்ற எண்ணிலடங்கா சுற்றுலா ஈர்ப்புகளின் உறைவிடமாகத் திகழ்கிறது.

ரூப்நகர் சுற்றுலாவின் போது, பயணிகள் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வரவும் திட்டமிடலாம். மாநிலத் தலைநகரமான சண்டிகர், ரூப்நகரிலிருந்து சில மணி நேரப் பயண தூரத்திலேயே உள்ளது; அதனால் ரூப்நகர் வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு சென்றும் ஓரிரு நாட்களை செலவிடலாம்.

சுற்றுலாப் பயணிகள் ஷிம்லா (125 கி.மீ.) மற்றும் கசௌலி (88 கி.மீ.) உள்ளிட்ட மேலும் பல இடங்களுக்கும் சென்று வரலாம்.

கொண்டாட்டங்கள் மற்றும் வசதி வாய்ப்புகள்

இந்நகரில் வசிப்பவர்கள் மிக்க ஆர்வத்தோடும், உவகையோடும் ஏராளமான திருவிழாக்களை சமய ஒற்றுமை மேலோங்க கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஹோலிக்குப் பின் அனந்த்பூர் சாஹிப்பில் கொண்டாடப்படும் ஹொல்லா மொஹல்லா, இந்நகரில் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாக்களுள் ஒன்றாகும்.

இந்த மூன்று நாள் கண்காட்சிக்கு நாடெங்கிலுமிருந்து சீக்கிய பக்தர்கள் வந்து குழுமுகின்றனர். கடைசி நாளன்று, நிஹாங்குகள் என்றழைக்கப்படும் சீக்கியப் போர்வீரர்கள் பாரம்பரிய உடையலங்காரத்துடன், பாரம்பரிய ஆயுதங்களைத் தாங்கி ஹோல்கார் கோட்டையை நோக்கி பீடு நடை போட்டு, சரண் கங்காவின் மணல்படுகையில், எதிரி முகாம்களை குதிரையில் சென்று தரைமட்டமாக்குதல், குதிரையேற்றம், வாள்சண்டை முதலியவற்றை அரங்கேற்றுவர்.

ஏராளமான உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளை உடைய இந்நகரில் பாரம்பரிய பஞ்சாபி உணவு வகைகளைப் பரிமாறும் சாலையோர தாபாக்கள் பலவும் காணப்படுகின்றன.

இவ்வாறான பல்வேறு அம்சங்களும் நிறைந்த ரூப்நகர், விடுமுறையை சிறப்பாகக் கழிக்க விரும்புவோரின் மனதிற்கினிய இடமாக இருப்பதில் வியப்பேதுமில்லை.

ரூப்நகரை எவ்வாறு அடையலாம்?

தேசிய நெடுஞ்சாலை 21 இந்நகரின் வழியே செல்வதனால், பஞ்சாபின் பிரதான நகரங்களிலிருந்து ரூப்நகரை சாலை வழிப் போக்குவரத்து சேவைகளின் மூலம் எளிதாக அடையலாம்.

மேலும், ரூப்நகரிலிருந்து நாட்டின் தலைநகரமான புது தில்லி சுமார் 297 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரமான சண்டிகர் சுமார் 45 கி.மீ. தொலைவிலும் உள்ளதனால், அருகாமையில் உள்ள அமிர்தசரஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்தும், சண்டிகரில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திலிருந்தும் இயக்கப்படும் விமானங்கள் மூலமாக சுற்றுலாப் பயணிகள் ஆகாய மார்க்கமாகவும் எளிதாக பயணிக்கலாம்.

ரூப்நகர் பல்வேறு இந்திய நகரங்களுடனும் ஏராளமான இரயில்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளதனால் சுற்றுலாப் பயணிகள் இரயில் வழி பயணத்தையும் தேர்வு செய்யலாம்.

ரூப்நகர் செல்ல உகந்த காலகட்டம்

வட இந்தியாவின் இதர பகுதிகளைப் போன்றே, ரூப்நகரிலும் வெம்மையான கோடைகாலம், கனத்த மழைக்காலம் மற்றும் வாட்டும் குளிருடன் கூடிய குளிர்காலம் போன்ற வானிலைகளே நிலவுகின்றன. ரூப்நகர் சுற்றுலாவுக்கு ஏற்ற காலகட்டம் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே ஆகும்.

Please Wait while comments are loading...