ஜாலியன் வாலா பாக் – சுதந்திரப்போராட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் தியாகபூமி!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தின் களமாக இந்த ஜாலியன் வாலா பாக் வீற்றிருக்கிறது.  இந்திய மக்களின் மனதில் ஒரு அழியாத வடுவாக பதிந்திருக்கும் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் ஆங்கிலேயர்களே பின்னாளில் வருந்தும் பிழையாக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. இந்த ஆறரை ஏக்கர் பரப்புள்ள தோட்டப்பூங்கா வளாகம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரித்சர் நகரில் அமைந்திருக்கிறது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஸ்தலம் ஒரு நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு, பஞ்சாபி புது வருடப்பிறப்பான ஏப்ரல் 13ம் தேதியன்று 1961ம் வருடத்தில் அப்போதைய குடியரசுத்தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

சுதந்திரப்போராட்ட வரலாற்று பின்னணியை கொண்டுள்ள இந்த ஸ்தலம் பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் அனைத்து பயணிகளாலும் விஜயம் செய்யப்படுகிறது.

ஜாலியன் வாலா பாக் படுகொலை!

எந்த ஒரு சராசரி இந்தியக்குடிமகனின் உள்ளத்திலும் தேசிய உணர்வை தூண்டும் விதமாக இந்த ஜாலியன் வாலா பாக் நினைவு ஸ்தலம் மௌனமாக வீற்றிருக்கிறது.

1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் நாள் அமைதியான முறையில் நடைபெறவிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த வளாகத்தில் கூடியிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு ஜெனரல் டயர் எனும் ஆங்கிலேய ராணுவத்தளபதி உத்தரவிட்டார்.

ஆங்கிலேய காலனிய ஆட்சியிலேயே அப்படி ஒரு மூர்க்கத்தனமான சம்பவம் வேறெங்கும் நடந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு, மைதானத்தின் மூடப்பட்ட வாசல்களுக்கு நடுவே சிக்கிக்கொண்ட மக்கள் மீது துப்பாக்கிக்குண்டுகள் சரமாரியாக பொழியப்பட்டன. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் இதில் மரணமடைந்தனர்.

தியாகிகளை நினைவு கூறும் ஞாபகார்த்த சின்னம்!

1961-ம் ஆண்டில் ஒரு நினைவுச்சின்னம் இந்த ஜாலியன் வாலா பாக் வளாகத்தில் கட்டப்பட்டு இந்த வளாகம் ஒரு நினைவு ஸ்தலமாக இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆறரை ஏக்கர் பரப்புள்ள இந்த தோட்டப்பூங்கா வளாகத்தின் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த அடையாளங்களையும் சேதங்களையும் இன்றும் பார்வையாளர்கள் காண முடியும்.

இந்த வளாகத்தை சுற்றிப்பார்க்கும்போது, அந்த கொடூரமான அதிகார வன்முறை எந்த அளவுக்கு இரக்கமின்றி நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்பது பற்றிய கற்பனைக்காட்சி நம் மனக்கண் முன்னால் விரிகிறது. 

அந்த சம்பவத்தின்போது துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பிப்பதற்காக பலர் இந்த மைதான மூலையில் இருந்த கிணற்றில் விழுந்து உயிர்விட்டனர். அந்த கிணற்றையும்கூட இன்றும் இந்த பூங்கா வளாகத்தில் பார்வையாளர்கள் பார்க்கலாம்.

நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டுள்ள ஜாலியன் வாலா பாக் பூங்காவின் வாசற்பகுதியில் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை விவரிக்கும் ஒரு கல்வெட்டு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பூங்காவின் உள்ளே ‘சுதந்திரச்சுடர்’ எனப்படும் அணையா தீபம் ஒன்றும் இறந்தவர்களின் நினைவாக ஏற்றப்பட்டு தொடர்ந்து எரிந்து வருகிறது.

ஜாலியன் வாலா பாக் மெமோரியல் டிரஸ்ட் எனும் எனும் அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் இந்த நினைவு ஸ்தலம் கோடைக்காலத்தில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும்,  குளிர்காலத்தில் காலை 7 முதல் இரவு 8 மணி வரையிலும்  பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது.

ஜாலியன் வாலா பாக் ஸ்தலத்துக்கு அருகிலேயே முக்கியமான இதர சுற்றுலா அம்சங்களான அம்ரித்சர் தங்கக்கோயில் மற்றும் வாக பார்டர் போன்றவையும் அமைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் யாவற்றையும் இணைத்த ஒரு விரிவான சுற்றுலாப்பயணத்திற்கு திட்டமிட்டுக்கொள்ளலாம்.

எப்படி செல்லலாம்?

அம்ரித்ஸர் நகரத்திலுள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ்ஜி சர்வதேச விமான நிலையம் மூலமாகவோ அல்லது அம்ரித்ஸர் நகர ரயில் நிலையம் வழியாகவோ பயணிகள் ஜாலியன் வாலா பாக் ஸ்தலத்திற்கு வரலாம்.

பிரசித்தமான அம்ரித்ஸர் தங்கக்கோயிலுக்கு மிக அருகிலேயே இது அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. பேருந்துகள், ஆட்டோ, டாக்சி, சைக்கிள் ரிக்ஷா போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் இந்த பூங்கா வளாகத்தை வந்தடையலாம்.

பருவநிலை

ஜாலியன் வாலா பாக் கடுமையான கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்தை கொண்டுள்ளது. மழைக்காலத்தில் இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது.

சுற்றுலாவுக்கு ஏற்ற பருவம்

வருடம் முழுக்கவே இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம் என்றாலும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் குளுமையான சூழலுடன் காணப்படுகிறது.

Please Wait while comments are loading...