சித்ரகுப்தா கோயில், கஜுராஹோ

மிகப்புராதனமான, மானுட நாகரிகத்தின் அற்புதக்கட்டுமானங்களில் ஒன்றான இந்த சித்ரகுப்தா கோயில் சூரிய தேவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. 11ம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

ஏழு குதிரைகள் இழுத்துச்செல்லும் ரதத்தில் வீற்றிருக்கும் சூரிய பஹவானை இந்த கோயிலில் தரிசிக்கலாம். மேலும் கோயிலின் சுவர்களை வெகு நுணுக்காமான சிற்ப வடிப்புகள் அலங்கரிக்கின்றன.

சூர்யசுந்தரிகளின் கற்சிற்பங்கள், 11 தலைகளை உடைய விஷ்ணு கடவுள் சிலை மற்றும் காதற்கலவி விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கும் தம்பதியர் சிற்பங்கள் ஆகியவற்றை இந்த கோயிலில் காணலாம். 

மூன்று அடுக்குகளை கொண்ட ஒரு பிரம்மாண்ட குளம் ஒன்றும் இந்த கோயிலில் உள்ளது. இந்த குளம் பெரும்பாலான பார்வையாளர்களை வசீகரிக்கும் அம்சமாக அமைந்திருக்கிறது. கோயிலின் வெளிப்புறச்சுவர்களிலும் தெய்வச்சிலைகள், பெண்ணுருவங்கள் மற்றும் இதர சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன.கோயிலின் நுழைவாயிற்பகுதியை சூரியக்கடவுளின் சிறிய சிலைகள் அலங்கரிக்கின்றன.

பொதுவாக கஜுராஹோ ஸ்தலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கோயிலும் கட்டமைப்பும் தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கின்றன.

அந்த உண்மைக்கு சரியான உதாரணம் இந்த சூரியக்கடவுள் கோயில் ஆகும். இந்த கோயில் வேறு எந்த கோயில் போன்றும் இல்லாத புதுவித கலையம்சங்களோடு பார்வையாளர்களை திகைக்க வைக்கிறது.

புராதன மானுட நாகரிகத்தின் எச்சங்கள் யாவுமே நம்மை பல உணர்வுகளுக்கு உள்ளாக்கும் வல்லமை படைத்தவை. இந்த சித்ரகுப்தா கோயில் மிரட்டவில்லை, அசத்தவில்லை - ஆனால் பார்வையாளர்களை சோதிக்கிறது.

என்ன உணர்கிறோம் என்று விவரிக்க முடியாத இக்கட்டில் நம்மை தள்ளுகிறது. பார்ப்பவர் மனதில் இப்படித்தான் தோன்றவேண்டும் என்று திட்டமிட்டுக்கொள்ளாமலா சிற்பிகள் இதனை வடிவமைத்திருப்பார்கள்? வந்து பார்த்துவிட்டு முடிந்தால் உங்கள் உணர்வுகளையும் சொல்லுங்கள்!

Please Wait while comments are loading...