முகப்பு » சேரும் இடங்கள் » கஜுராஹோ » ஈர்க்கும் இடங்கள்
 • 01ஷில்ப்கிராம்

  ஷில்ப்கிராம்

  புராதன வரலாற்று நகரமான கஜுராஹோவில் உள்ள ஒரு முக்கியமான அம்சம் இந்த ஷில்ப்கிராம் ஆகும். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் உன்னதங்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த மையத்தை இந்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

  1998ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த ஷில்ப்கிராம் மையம் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. உலகெங்கிலிருந்தும் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்திற்கு விஜயம் செய்யும் கலாரசிகர்களுக்கும் இந்திய கலைப்பாரம்பரியத்தை காட்சிப்படுத்தவேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கம்.

  பத்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் இரவு நேரத்தில் பல்வேறு நாட்டுப்புற மற்றும் சாஸ்திரிய நிகழ்த்துகலை அரங்கேற்றங்கள் நடத்தப்படுகின்றன.

  நட்சத்திரங்கள் மின்னும்  வானக்கூரையின் கீழ் இந்த பிரம்மாண்டமான திறந்த வெளி அரங்கில் அமர்ந்து வண்ணமயமான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ரசிக்கும் அனுபவம் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மற்றுமொரு இனிய ஞாபகமாக அமையக்கூடும்.

  மேலும் இந்த மையத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கிய கைவினைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற பொருட்களை சுற்றுலாப்பயணிகள் விலை கொடுத்து வாங்க வசதியாக ஒரு பிரத்யேக அங்காடியும் இந்த வளாகத்திலேயே உள்ளது. 

  + மேலும் படிக்க
 • 02ஸ்டேட் மியூசியம் ஆஃப் டிரைபல் அன்ட் ஃபோக் ஆர்ட்

  ஸ்டேட் மியூசியம் ஆஃப் டிரைபல் அன்ட் ஃபோக் ஆர்ட்

  ஸ்டேட் மியூசியம் ஆஃப் டிரைபல் அன்ட் ஃபோக் ஆர்ட் எனும் இந்த அருங்காட்சியகம் கஜுராஹோவில் சந்தேளா கல்ச்சுரல் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் அமைந்திருக்கிறது. அளவில் மிகப்பெரியதாக இல்லையென்றாலும் இங்கு பல அபூர்வமான புராதன பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

  இந்திய நாகரிகத்தின் தொன்மை செழிப்பு உன்னதம் போன்றவற்றை எடுத்துக்காட்டும் பல்வேறு காலச்சான்றுகளை இந்த அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். அருகிலுள்ள வனப்பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்கள் குறித்த பல அரும்பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

  பழங்குடி மக்களின் ஆதி நாகரிகம் மற்றும் வளர்ச்சி குறித்த சுருக்கமான வரலாற்று காட்சி அமைப்புகள் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சுடுமண் பொருட்கள், உலோக பொருட்கள், பூர்வகுடி ஓவியங்கள் ஆகியவை இங்குள்ள காட்சிக்கூடங்களில் இடம் பெற்றுள்ளன.

  கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு பயணியும் தவறவிடக்கூடாத ஒரு முக்கிய அம்சம் இந்த அருங்காட்சியகமாகும்.

  + மேலும் படிக்க
 • 03ஆதிநாத் கோயில்

  முதற்பார்வையிலேயே சொக்க வைத்துவிடும் சௌந்தர்யத்தோடு காட்சியளிக்கும் இந்த ஆதிநாத் ஜைனக்கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் மற்றும் ஒரு ரத்தினக்கல்லாக பொதிந்திருக்கிறது.

  11ம் நூற்றாண்டில் சந்தேள மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் ஜைன குரு ஆதிநாதருக்காக எழுப்பப்பட்டிருக்கிறது. ‘சப்த-ரத’ வடிவமைப்பை கொண்டதாக ஒரு பிரம்மாண்ட தேர் போன்ற நுணுக்கமான அலங்கார கலையம்சங்களுடன் இந்த கோயில் எழும்பி நிற்கிறது.

  உலகில் கண்ணைக்கவரும் படைப்புகள் என்று பார்த்தால் இயற்கை படைப்புகள் மட்டுமே சீர்மையும் ஒழுங்கும் தனித்தன்மையும் நிரம்பியதாக காட்சியளிக்கும் தன்மை கொண்டவை.

  இந்த கோயிலும் அது போன்றே அப்பழுக்கற்ற நேர்த்தியுடன் இயற்கையால் பிரசவிக்கப்பட்ட ஒரு படைப்பு போன்று இந்த கோயில் மண்ணில் வீற்றிருக்கிறது.

  பீடம் போன்ற ஒருங்கிணைந்த அடித்தளம், அலங்கார மண்டபங்களை கொண்ட முகப்பு மண்டபம் மற்றும் நுழைவாயில் ஆகியவற்றோடு வானோக்கி நீண்ட ஒற்றை உருளைக்கோபுரம் இதன் பிரதான அம்சமாய் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

  இந்த கோபுரத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு ஆபரணத்தின் நுண்ணிய வடிவமைப்பை இந்த கோபுரத்தில் பார்க்க முடிகிறது. பூரி ஜகன்னாதர் கோயில் கோபுரத்தை ஒத்திருப்பது போன்ற ஒரு சாயலையும் நம்மால் உணர முடிகிறது என்பது ஒரு மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.

  இந்த கோயிலின் சுவர்களில் அரசவை இசைக்கலைஞர்களின் உருவங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆதிநாதர் அவையில் புகழ் பெற்று விளங்கிய நிலஞ்சனா எனும் நர்த்தகியின் நடன ரூபங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன.

  அக்காலத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்த நாயிகா, காமினி மற்றும் பாமினி ஆகிய பெண்களின் உருவச்சிற்பங்களையும் இந்த கோயில் சுவர்களில் பார்க்க முடிகிறது. இந்த சிற்பங்களில் கானப்படும் கலையம்சம் மற்றும் நேர்த்தி ஆகியவை உலகளாவிய அளவில் கலா ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.

  + மேலும் படிக்க
 • 04ராணேஹ் நீர்வீழ்ச்சி

  ராணேஹ் நீர்வீழ்ச்சி

  கஜுராஹோ நகரத்திலிருந்து 43 கி.மீ தூரத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில் இந்த ராணேஹ் நீர்வீழ்ச்சிப்பகுதி அமைந்துள்ளது. கென் ஆற்றில் உள்ள ஒரு கம்பீரமான நீர்வீழ்ச்சி ஸ்தலம் இது.

  இங்கு கென் ஆற்றில் 5 கி.மீ நீளமும் 30 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு பாறை குடைவு பள்ளத்தாக்குப்பகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் ஸ்படிகம் போன்ற கிரானைட் பாறைகள் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் மின்னுவது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

  இந்த குடைவுப்பள்ளத்தாக்குப்பகுதியில் பல நீர்வீழ்ச்சிகள் உருவாகின்றன. இவற்றில் சில நீர்வீழ்ச்சிகள் வருடமுழுதும் வற்றாமலும் ஏனைய சிறிய நீர்வீழ்ச்சிகள் கோடைக்காலத்தில் வற்றியும் காணப்படுகின்றன.

  பன்னா தேசிய பூங்காவை ஒட்டியே இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதியின் பசுமையும் பாறைகளில் விழும் நீர்வீழ்ச்சிகளின் மினுமினுக்கும் விவரிக்க முடியா ரம்மியத்துடன் கண்களை கவர்கின்றன.

  மிரட்டும் இயற்கை அழகோடு காட்சியளிக்கும் இந்த ராணேஹ் நீர்வீழ்ச்சியை தரிசித்துவிட்டு திரும்பும் பயணிகள் பிரமிப்பிலிருந்து மீள்வதற்கே சில நாட்களாகலாம். 

  + மேலும் படிக்க
 • 05துல்ஹாதேவ் கோயில்

  துல்ஹாதேவ் கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தின் தென் தொகுதியில் அமைந்துள்ள கோயில்களில் ஒன்றாகும். இது சந்தேள வம்ச மன்னர்களால் 1130ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது.

  அவர்கள் காலத்திய தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ள இந்த கோயில் ஐந்து சிறிய அறைகள் மற்றும் ஒரு மண்டபம் அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.

  துல்ஹாதேவ் கோயில் சிவ பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. எனவே இங்கு சிவன் மற்றும் பார்வதி தேவியின் சிற்பங்கள் அதிகமாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

  கோயிலின் மையப்பகுதியில் ஒரு அழகிய சிவலிங்கம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் மையப்பகுதியில் நுணுக்கமான விரிவான சிற்ப வேலைப்பாடுகள் காட்சியளிக்கின்றன.

  முன்பே சொன்னதுபோல் வேறெந்த கோயில் போன்றும் அல்லாது தனித்தன்மையான கட்டமைப்புக்கூறுகளுடன் இது எழுப்பப்பட்டிருப்பதை கண்கூடாகக்காணலாம்.

  பீடத்தில் வைத்த ஆபரணம் போன்று பார்க்க பார்க்க திகட்டாத கம்பீரத்துடன் அமர்ந்திருக்கும் இந்த கோயில் வரலாற்று ஆர்வலர்களும் கலாரசிகர்களும் அவசியம் தரிசிக்க வேண்டிய உன்னதப்படைப்பாகும்.

  + மேலும் படிக்க
 • 06அஜய்கர் கோட்டை

  அஜய்கர் கோட்டை

  அஜய்கர் கோட்டை கஜுராஹோ நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.  விந்திய மலைத்தொடரில் ஒரு தனித்து வீற்றிருக்கும் ஒரு மலையின் உச்சியில் இந்த கோட்டை வீற்றிருக்கிறது.

  குடிமக்களை எதிரிகளின் தாக்குதல் மற்றும் முற்றுகைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக சந்தேள வம்ச மன்னர்கள் இக்கோட்டையை கட்டியுள்ளனர். அஜய்கர் கோட்டையிலிருந்து மலையுச்சிக்கு கீழே ஓடும் கேன் ஆற்றின் அழகை நன்றாக பார்த்து ரசிக்க முடியும்.

  இந்த கோட்டைக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. வடபகுதியில் உள்ள தர்வாஸா நுழைவாயில் மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள தர்ஹாவ்னி நுழைவாயில் என்பவையே அவை.

  பல்வேறு அழகிய சிற்ப வடிவங்கள் மற்றும் அஷ்ட சக்தி தெய்வத்தின் சிலைகள் ஆகியவற்றை இந்த கோட்டை வளாகத்தில் பார்க்கலாம். கோட்டை ஒட்டியவாற அஜய் பால் கா தலாவ் எனும் அழகிய ஏரியும் அமைந்துள்ளது.

  பார்வையாளர்கள் வெகுவாக இந்த ஏரிப்பகுதியின் வனப்பால் கவரப்படுகின்றனர். கோட்டைக்குள்ளே ஒரு ஜைன கோயிலும் அமைந்திருக்கிறது. இது தற்சமயம் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த ஜைனக்கோயில் வெகு பிரசித்தமாக அறியப்பட்டிருக்கிறது.

  அஜய்கர் கோட்டை ஸ்தலத்தில் நாம் கழிக்கும் ஒவ்வொரு கணமும் வேறொரு யுகத்துக்குள் நுழைந்த விட்டது போன்றது பிரமையையும் மயக்கத்தையும் அளிக்கின்றன. இந்த உணர்வை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். ஒரு குளிர்கால காலைப்பொழுதை இந்த ஸ்தலத்தில் அனுபவித்து பார்த்தவர்களுக்கு புரியும்.

  + மேலும் படிக்க
 • 07ஷாந்திநாத் கோயில்

  ஷாந்திநாத் கோயில் எனப்படும் இந்த ஜைனக்கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தின் கிழக்குத்தொகுதியில் உள்ள ஒரு பிரசித்தமான கோயிலாகும். கஜுராஹோவிலுள்ள ஏனைய புராதனக்கோயில்களைப்போன்றே இது காட்சியளித்தாலும் இது புதிதாக கட்டப்பட்ட கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஜைன வகுப்பை சேர்ந்த மக்களின் முக்கியமான யாத்திரைஸ்தலமாக இந்த கோயில் புகழ் பெற்றுள்ளது. கோயிலின் உள்ளே வீற்றிருக்கும் பிரதான சிலையானது நின்ற கோலத்தில் நான்கரை அடி உயரத்தில் காணப்படுகிறது.

  இந்த சிலை 1028ம் வருடத்தை சேர்ந்ததாகும். ஒரு பீடத்தின் மீது வீற்றுள்ள எருது சிலை இந்த கோயிலின் நுழைவாயிலில் பார்வையாளர்களை வரவேற்கும் வண்ணம் காட்சியளிக்கிறது.

  கோயிலின் உள்ளே பல ஜைன தீர்த்தங்கரர்களின் சிலைகள் காணப்படுகின்றன. கஜுராஹோவுக்கு வருகை தரும் யாத்ரீகர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள தர்மஷாலாவில் யாத்ரீகர்கள் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றது.

  + மேலும் படிக்க
 • 08கண்டாய் கோயில்

  கண்டாய் கோயில்

  கண்டாய் கோயில் எனும் ஜைனக்கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் உள்ள கிழக்குத்தொகுதி கோயில்களில் அமைந்திருக்கிறது. கண்டாய் எனும் சொல் கோயில் மணியை குறிக்கிறது.

  இந்த கோயிலில் வடிக்கப்பட்டுள்ள தூண்களில் மணிகளின் வடிவம் சித்தரிக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் வழங்கிவருகிறது. 950-1050ம் ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் மஹாவீரரின் தாயார் கண்ட 16 கனவுக்காட்சிகள் புடைப்புச்சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

  கருடனின் மீது சவாரி செய்யும் பல கைகள் கொண்ட ஜைனக்கடவுள் உருவத்தையும் இங்கு பார்க்கலாம். ஜைன பக்தர்கள் மஹாவீரரை கடைசி தீர்த்தங்கரராக வணங்கி வருகின்றனர்.

  எனவே ஜைன ஆன்மீக யாத்ரீகர்கள் மத்தியில் இந்த கோயில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. பர்ஷவநாதர் கோயிலைப்போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் அதை விட அளவில் இரு மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.இதர ஜைன கோயில்களும் இந்த கண்டாய் கோயிலைச்சுற்றி அமைந்திருக்கின்றன.

  + மேலும் படிக்க
 • 09கலிஞ்சார் கோட்டை

  கலிஞ்சார் கோட்டை

  கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் மற்றொரு முக்கியமான அம்சம் இந்த கலிஞ்சார் கோட்டையாகும். ஒரு மலையுச்சியில் உள்ள இந்த புராதன கோட்டை வளாகத்தில் எண்ணற்ற வரலாற்றுச்சின்னங்களும் சிற்பச்சிலைகளும் காணப்படுகின்றன.

  சந்தேள வம்ச மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டை அந்த வம்சத்தின் ஆட்சிக்காலத்தில் விளங்கிய உன்னதங்களின் சாட்சியமாக காலத்தில் நீடித்து நிற்கிறது. இந்த கோட்டை வளாகத்திற்குள் பல பிரம்மாண்ட கட்டமைப்புகளும் கோயில்களும் இடம்பெற்றுள்ளன.

  சாத்ரிகள் எனப்படும் நினைவு மாடங்கள் மற்றும் கம்பீரமான அரண்மனைகள் போன்றவை வெகு நுணுக்கமான அலங்கார கலை அம்சங்களுடன் இந்த கோட்டை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

  சிவ பெருமான் வசிக்கும் தெய்வீக இருப்பிடமாக இந்த கலிஞ்சார் கோட்டை கருதப்பட்டு வந்திருக்கிறது. நீலகண்ட மஹாதேவ் கோயில் எனும் கம்பீரமான சிவன் கோயிலை இந்த கோட்டை வளாகத்தில் பார்க்கலாம்.

  பாறைகளை அகழ்ந்து உருவாக்கப்பட்ட தடாகங்கள் மற்றும் நிசப்தமான ஏரிகள் போன்றவற்றையும் இந்த கோட்டை வளாகம் கொண்டிருக்கிறது. சிவன், விநாயகர், விஷ்ணு மற்றும் சக்தி ஆகியோரின் வித்தியாசமான கற்சிலைகளை இந்த வளாகத்தில் உள்ள கோயில்களில் தரிசிக்கலாம்.  

  பிற்காலத்தில் உருவான ஐரோப்பிய நாகரிகம் மற்றும் மத்திய கிழக்காசிய நாகரிகம் போன்றவற்றுக்கே உரிய நேர்த்தியான கட்டிடக்கலை நுணுக்கங்களை எல்லாம் விஞ்சும் படியான கலையம்சங்கள் இந்த கோட்டை ஸ்தலத்தில் ஒளிர்கின்றன. 

  இந்திய மண்ணில் வேரூன்றியிருந்த அரச வம்சங்களின் மகோன்னத காலத்துக்குள் நம்மை விசையுடன் இழுத்துசெல்கிறது இந்த கலிஞ்சார் கோட்டை ஸ்தலம்.

  மனதை அழுத்தும் பாரத்தை என்னவென்று புரிந்துகொள்ள முடியாத அபூர்வ அவஸ்தை அனுபவத்தை இங்கு பார்வையாளர்கள் உணரலாம். அந்த உணர்வு ஏன் எதனால் தோன்றுகிறது என்பதை இங்கு ஒரு முறை விஜயம் செய்து விட்டு நீங்களும் சொல்லலாமே!

  + மேலும் படிக்க
 • 10கண்டரிய மஹாதேவ் கோயில்

  கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் அமைந்துள்ள மேற்குத்தொகுதி கோயில்களில் மிகப்பெரிய கோயில் இந்த கண்டரிய மஹாதேவ் கோயிலாகும். ஒரு மேடை அமைப்பின்மீது கட்டப்பட்ட முதல் கோயில் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

  சந்தேள வம்ச மன்னர்களால் 1025-1050ம் ஆண்டுகளில் இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலின் உள்ளே கர்ப்பக்கிருகத்தின் மையப்பகுதியில் சிவலிங்கம் காணப்படுகிறது.

  ஐந்து அங்கங்களை உள்ளடக்கிய கோயிற்கலை பாணியில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கர்ப்பகிருகம், அர்த்தமண்டபம், பிரதக்ஷணம்,  மஹாமண்டபம் மற்றும் முகமண்டபம் ஆகிய ஐந்து அங்கங்கள் இதில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

  இதன் பிரதான கோபுரம் 100 அடிக்கும் அதிகமாக வானுயர்ந்து காட்சியளிக்கிறது. கோயிலின் மையப்பகுதியின் வெகு நுணுக்கமான கலையம்சங்களைக்கொண்ட சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன.

  அது மட்டுமல்லாமல் இந்த கோயிலில் மட்டுமே இரண்டு பிரத்யேக அலங்கார தோரண வாயில் அமைப்புகள் உட்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

  கோயிலின் சுவர்களில் உள்ள சிற்பச்சித்தரிப்புகள் மூன்று வகைப்பாடுகளில் அடங்குகின்றன. ஆண் தெய்வச்சிலைகள், பெண் தெய்வச்சிலைகள் மற்றும் காதற்கலை சித்தரிப்புகள் என்பவையே இந்த மூன்று வகைப்பாடுகள்.

  + மேலும் படிக்க
 • 11துபேலா மியூசியம்

  துபேலா மியூசியம்

  ஜான்சி – கஜுராஹோ நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஏரியின் கரைப்பகுதியில் இந்த துபேலா மியூசியம் அமைந்திருக்கிறது. ஒரு புராதன கோட்டையின் உள்ளே இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

  புராதன மற்றும் நவீன காலத்தை சேர்ந்த பல்வேறு அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கஜுராஹோ பகுதியை ஆண்ட புந்தேள வம்சத்தின் தோற்றம் மற்றும் வீழ்ச்சி குறித்த ஏராளமான காட்சிச்சான்றுகள் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

  இந்த சிற்பங்களும் அரும்பொருட்களும்தான்  புந்தேள ஆட்சியின் உன்னத காலத்தை நமக்கு எடுத்துரைக்கும் சான்றுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சக்தி வழிப்பாடு வழக்கத்தில் இருந்ததை குறிக்கும் ஏராளமான சிற்பங்களையும் இங்கு காணலாம்.

  மேலும், புந்தேள அரசர்கள் பயன்படுத்திய வாட்கள், தோற்ற சித்திரங்கள் ஆகியவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு சாம்ராஜ்ஜியத்தின் பொற்காலத்தை கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் வீற்றிருக்கும் கோயில்கள் மூலமாக மட்டுமல்லாமல் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சான்றுகளின் மூலமாகவும் பார்வையாளர்கள் கண்கூடாக தெரிந்துகொள்ள முடியும். 

  எனவே இந்த அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்யாமல் கஜுராஹோ சுற்றுலாவை முடிக்கக்கூடாது என்பது அவசியம் பின்பற்ற வேண்டிய எழுதப்படாத விதிமுறையாகும்.

  ஏனெனில் இங்குதான் புந்தேள வம்சம் குறித்த தகவல் சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவர்களது நாகரீகம் மற்றும் படைப்புகள் குறித்த ஏராளமான தகவல்கள் இந்த அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கின்றன.

  + மேலும் படிக்க
 • 12கங்காவ் அணை

  கங்காவ் அணை

  சிமிரி ஆறும் கென் ஆறும் ஒன்று சேரும் இடத்தில் இந்த கங்காவ் அணை அமைந்திருக்கிறது. பன்னா தேசிய பூங்கா மற்றும் கங்கு சராணாலயம் போன்ற இயற்கை வனப்பகுதிகள் இந்த அணைப்பகுதியை சூழ்ந்துள்ளன.

  குளிர்காலத்தில் பல்வகையான புலம்பெயர் பறவைகள் இந்த அணைப்பகுதிக்கு விஜயம் செய்யும்போது இப்பகுதி மேலும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் மக்களும் இந்த அணைப்பகுதியின் அழகை ரசிக்க திரள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இயற்கை ஆர்வலர்கள், சாகசப்பிரியர்கள் மற்றும் மீன்பிடி ரசிகர்கள் போன்றோரை கவர்ந்து இழுக்கும் ஒரு சுற்றுலாத்தலமாக இந்த கங்காவ் அணை பிரசித்தி பெற்றுள்ளது. கென் ஆற்றில் ஓடும் நீரை தேக்கி பயன்படுத்தும் வகையில் இந்த அணை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

  இங்கு படகுச்சவாரி மற்றும் மீன்பிடிப்பு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் சுற்றுலாப்பயணிகள் ஈடுபடலாம். வார இறுதி நாட்களில் நீர்த்தேக்கத்தின் அழகு மற்றும் இயற்கை எழில் போன்ற அம்சங்களை ரசித்தபடி விடுமுறை சுற்றுலாவை கழிக்கும் பயணிகளை இங்கு காணமுடியும்.

  + மேலும் படிக்க
 • 13தேவி ஜக்தம்பா கோயில்

  கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில் அமைப்புகளில் இந்த தேவி ஜக்தம்பா கோயில் முக்கியமான ஒன்றாகும். இது நிஜம்தானா? இந்த அமைப்புகள் யாவும் நம் முன்னோர்கள் உருவாக்கியதா? என்று சிலிர்க்க வைக்கும் மற்றொரு படைப்பு இந்த தேவி ஜக்தம்பா கோயில் கோயில்.

  துல்லியம் மற்றும் தனித்தன்மை ஆகிய இரண்டும் இந்த கோயில் வடிவமைப்பின் ஒவ்வொரு அங்கத்திலும் பொதிந்து கிடக்கின்றன. கோயில் சுவர்களில் அற்புதமான சிற்ப உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

  முதலில் விஷ்ணு பஹவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு பின்னர் பார்வதி தேவிக்கானதாய் மாற்றப்பட்டு இறுதியின் காளி தெய்வத்துக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

  மூன்று பிரிவுகளைக்கொண்ட வடிவமைப்பாக இது காட்சியளிக்கிறது. தோற்றத்தில் சித்திரகுப்தா கோயிலையும் இது ஒத்திருக்கிறது. உள்நுழையமுடியாத கருவறையின் மீது இந்த கோயில் எழுப்பப்பட்டிருப்பது ஒரு முக்கிய அம்சமாகும்.

  ஏனைய கஜுராஹோ கோயில்களைப்போன்றே இந்த கோயிலின் சுவர்களிலும் பிரமிப்பூட்டும் சிற்ப வடிப்புகள் காணப்படுகின்றன. வேறெங்கும் காண முடியாத கலையம்சங்களுடன் வீற்றிருக்கும் இக்கோயில் கஜுராஹோ விஜயத்தில் தவறவிடக்கூடாத ஒரு அம்சமாகும்.

  + மேலும் படிக்க
 • 14மாதங்கேஷ்வரர் கோயில்

  மாதங்கேஷ்வரர் கோயில்

  மாதங்கேஷ்வரர் கோயில் சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கோயிலாகும். இது 8 அடி உயரமுள்ள ஒரு பிரம்மாண்ட் சிவலிங்கத்தை கொண்டுள்ளது. மஹாசிவராத்திரியின்போது இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.

  வட இந்தியாவிலுள்ள மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாக இந்த கோயிலில் உள்ள சிவலிங்கம் புகழ் பெற்றுள்ளது. மஞ்சள் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த சிவலிங்கம் தேய்த்து மெருகேற்றப்பட்டு வழவழப்பாக காட்சியளிக்கிறது.

  இந்த மாதங்கேஷ்வரர் கோயில் கஜுராஹோ ஸ்தலத்தில் ஆரம்ப காலத்திலேயே உருவாக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் பக்தர்கள் மத்தியில் மிகப்புனிதமான கோயிலாகவும் இது அறியப்படுகிறது.

  லட்சுமணா கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு சுற்றுச்சுவர் அமைப்பு அல்லது பாதுகாப்பு வேலி எதுவும் இல்லை. மற்ற கோயில்களோடு ஒப்பிடும்போது சாதாரண தோற்றத்தை கொண்டிருந்தாலும் இந்த கோயில் மிக பிரசித்தமானதாக அறியப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 15ஆர்க்கியாலஜிகல் மியூசியம்

  கஜுராஹோ ஆர்க்கியாலஜிகல் மியூசியம் முற்காலத்தில் ஜார்டைன் மியூசியம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 1952ம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இது வந்த பிறகு ஆர்க்கியாலஜிகல் மியூசியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

  1910ம் ஆண்டில் ஜார்டைன் என்பவரால் இந்த தொல்லியல் அருங்காட்சியகம் துவங்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான இந்த அருங்காட்சியகத்தில் கஜுராஹோ வரலாற்றுத்தலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட பல அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

  கட்டிட இடிபாடுகள் மற்றும் சிலைகள் சிற்பங்கள் போன்றவை இவற்றில் அடங்கும். இந்த தொல்லியல் அருங்காட்சியகம் மாதங்கேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது.

  அருங்காட்சியகத்தின் உள்ளே திறந்த வெளி காட்சிக்கூடத்தில் அரும்பொருட்கள் வைக்கப்பட்டிருப்பது அவற்றில் இயல்புக்கு பொருத்தமான சூழலில் ரசிக்க உதவுகிறது. தற்போது நாம் காணும் அருங்காட்சியக வளாகம் 1967ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

  இதில் ஐந்து பெரிய காட்சிக்கூடங்கள் உள்ளன. பிரதான கூடத்தில் பிராம்மணிய, பௌத்த மற்றும் ஜைன பிரிவுகளுக்குரிய சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் 2000 த்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் அடங்கியுள்ளன.

  அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலை ஒன்று இவற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது தவிர நான்கு தலைகளை உடைய விஷ்ணு சிலையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

  இந்த சிலை வைகுந்தா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. கஜுராஹோ சுற்றுலாப்பயணத்தின்போது தவறவிடக்கூடாத ஒரு சிறப்பம்சம் இந்த தொல்லியல் அருங்காட்சியகமாகும்.

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Feb,Mon
Return On
20 Feb,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
19 Feb,Mon
Check Out
20 Feb,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
19 Feb,Mon
Return On
20 Feb,Tue