கலிஞ்சார் கோட்டை, கஜுராஹோ

கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் மற்றொரு முக்கியமான அம்சம் இந்த கலிஞ்சார் கோட்டையாகும். ஒரு மலையுச்சியில் உள்ள இந்த புராதன கோட்டை வளாகத்தில் எண்ணற்ற வரலாற்றுச்சின்னங்களும் சிற்பச்சிலைகளும் காணப்படுகின்றன.

சந்தேள வம்ச மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டை அந்த வம்சத்தின் ஆட்சிக்காலத்தில் விளங்கிய உன்னதங்களின் சாட்சியமாக காலத்தில் நீடித்து நிற்கிறது. இந்த கோட்டை வளாகத்திற்குள் பல பிரம்மாண்ட கட்டமைப்புகளும் கோயில்களும் இடம்பெற்றுள்ளன.

சாத்ரிகள் எனப்படும் நினைவு மாடங்கள் மற்றும் கம்பீரமான அரண்மனைகள் போன்றவை வெகு நுணுக்கமான அலங்கார கலை அம்சங்களுடன் இந்த கோட்டை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

சிவ பெருமான் வசிக்கும் தெய்வீக இருப்பிடமாக இந்த கலிஞ்சார் கோட்டை கருதப்பட்டு வந்திருக்கிறது. நீலகண்ட மஹாதேவ் கோயில் எனும் கம்பீரமான சிவன் கோயிலை இந்த கோட்டை வளாகத்தில் பார்க்கலாம்.

பாறைகளை அகழ்ந்து உருவாக்கப்பட்ட தடாகங்கள் மற்றும் நிசப்தமான ஏரிகள் போன்றவற்றையும் இந்த கோட்டை வளாகம் கொண்டிருக்கிறது. சிவன், விநாயகர், விஷ்ணு மற்றும் சக்தி ஆகியோரின் வித்தியாசமான கற்சிலைகளை இந்த வளாகத்தில் உள்ள கோயில்களில் தரிசிக்கலாம்.  

பிற்காலத்தில் உருவான ஐரோப்பிய நாகரிகம் மற்றும் மத்திய கிழக்காசிய நாகரிகம் போன்றவற்றுக்கே உரிய நேர்த்தியான கட்டிடக்கலை நுணுக்கங்களை எல்லாம் விஞ்சும் படியான கலையம்சங்கள் இந்த கோட்டை ஸ்தலத்தில் ஒளிர்கின்றன. 

இந்திய மண்ணில் வேரூன்றியிருந்த அரச வம்சங்களின் மகோன்னத காலத்துக்குள் நம்மை விசையுடன் இழுத்துசெல்கிறது இந்த கலிஞ்சார் கோட்டை ஸ்தலம்.

மனதை அழுத்தும் பாரத்தை என்னவென்று புரிந்துகொள்ள முடியாத அபூர்வ அவஸ்தை அனுபவத்தை இங்கு பார்வையாளர்கள் உணரலாம். அந்த உணர்வு ஏன் எதனால் தோன்றுகிறது என்பதை இங்கு ஒரு முறை விஜயம் செய்து விட்டு நீங்களும் சொல்லலாமே!

Please Wait while comments are loading...