கண்டரிய மஹாதேவ் கோயில், கஜுராஹோ

கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் அமைந்துள்ள மேற்குத்தொகுதி கோயில்களில் மிகப்பெரிய கோயில் இந்த கண்டரிய மஹாதேவ் கோயிலாகும். ஒரு மேடை அமைப்பின்மீது கட்டப்பட்ட முதல் கோயில் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

சந்தேள வம்ச மன்னர்களால் 1025-1050ம் ஆண்டுகளில் இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலின் உள்ளே கர்ப்பக்கிருகத்தின் மையப்பகுதியில் சிவலிங்கம் காணப்படுகிறது.

ஐந்து அங்கங்களை உள்ளடக்கிய கோயிற்கலை பாணியில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கர்ப்பகிருகம், அர்த்தமண்டபம், பிரதக்ஷணம்,  மஹாமண்டபம் மற்றும் முகமண்டபம் ஆகிய ஐந்து அங்கங்கள் இதில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

இதன் பிரதான கோபுரம் 100 அடிக்கும் அதிகமாக வானுயர்ந்து காட்சியளிக்கிறது. கோயிலின் மையப்பகுதியின் வெகு நுணுக்கமான கலையம்சங்களைக்கொண்ட சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன.

அது மட்டுமல்லாமல் இந்த கோயிலில் மட்டுமே இரண்டு பிரத்யேக அலங்கார தோரண வாயில் அமைப்புகள் உட்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கோயிலின் சுவர்களில் உள்ள சிற்பச்சித்தரிப்புகள் மூன்று வகைப்பாடுகளில் அடங்குகின்றன. ஆண் தெய்வச்சிலைகள், பெண் தெய்வச்சிலைகள் மற்றும் காதற்கலை சித்தரிப்புகள் என்பவையே இந்த மூன்று வகைப்பாடுகள்.

Please Wait while comments are loading...