ஆதிநாத் கோயில், கஜுராஹோ

முதற்பார்வையிலேயே சொக்க வைத்துவிடும் சௌந்தர்யத்தோடு காட்சியளிக்கும் இந்த ஆதிநாத் ஜைனக்கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் மற்றும் ஒரு ரத்தினக்கல்லாக பொதிந்திருக்கிறது.

11ம் நூற்றாண்டில் சந்தேள மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் ஜைன குரு ஆதிநாதருக்காக எழுப்பப்பட்டிருக்கிறது. ‘சப்த-ரத’ வடிவமைப்பை கொண்டதாக ஒரு பிரம்மாண்ட தேர் போன்ற நுணுக்கமான அலங்கார கலையம்சங்களுடன் இந்த கோயில் எழும்பி நிற்கிறது.

உலகில் கண்ணைக்கவரும் படைப்புகள் என்று பார்த்தால் இயற்கை படைப்புகள் மட்டுமே சீர்மையும் ஒழுங்கும் தனித்தன்மையும் நிரம்பியதாக காட்சியளிக்கும் தன்மை கொண்டவை.

இந்த கோயிலும் அது போன்றே அப்பழுக்கற்ற நேர்த்தியுடன் இயற்கையால் பிரசவிக்கப்பட்ட ஒரு படைப்பு போன்று இந்த கோயில் மண்ணில் வீற்றிருக்கிறது.

பீடம் போன்ற ஒருங்கிணைந்த அடித்தளம், அலங்கார மண்டபங்களை கொண்ட முகப்பு மண்டபம் மற்றும் நுழைவாயில் ஆகியவற்றோடு வானோக்கி நீண்ட ஒற்றை உருளைக்கோபுரம் இதன் பிரதான அம்சமாய் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோபுரத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு ஆபரணத்தின் நுண்ணிய வடிவமைப்பை இந்த கோபுரத்தில் பார்க்க முடிகிறது. பூரி ஜகன்னாதர் கோயில் கோபுரத்தை ஒத்திருப்பது போன்ற ஒரு சாயலையும் நம்மால் உணர முடிகிறது என்பது ஒரு மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.

இந்த கோயிலின் சுவர்களில் அரசவை இசைக்கலைஞர்களின் உருவங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆதிநாதர் அவையில் புகழ் பெற்று விளங்கிய நிலஞ்சனா எனும் நர்த்தகியின் நடன ரூபங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன.

அக்காலத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்த நாயிகா, காமினி மற்றும் பாமினி ஆகிய பெண்களின் உருவச்சிற்பங்களையும் இந்த கோயில் சுவர்களில் பார்க்க முடிகிறது. இந்த சிற்பங்களில் கானப்படும் கலையம்சம் மற்றும் நேர்த்தி ஆகியவை உலகளாவிய அளவில் கலா ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.

Please Wait while comments are loading...