சூரியக்கோயில், கொனார்க்

கொனார்க் நகரத்தின் பிரதான அடையாளமான சூரியக்கோயிலை முதன் முதலாக தரிசிக்கும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். அப்படி ஒரு நுணுக்கமான புராதன கட்டிடக்கலை அம்சங்களுடன், கடந்து போன ஒரு ஆதி நாகரிகத்தின் வாசனை சிறிதும் மறையாமல் இந்த கோயில் வீற்றிருக்கிறது.

ஒடிஷா மாநிலத்துக்கே உரிய தனித்தன்மையான கோயிற்கலை மரபின் உச்சபட்சமான அழகியல் அம்சங்களை இங்கு தரிசிக்கலாம். கற்களில் வடிக்கப்பட்ட மஹோன்னத கட்டிடக்கலை அற்புதங்களை கொண்ட இந்திய புராதன சின்னங்களின் மத்தியில் இந்த கோயில் தனக்கென ஒரு தனி இடத்தை கொண்டுள்ளது.  

இந்த கோயிலில் அழகை தரிசிக்க வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தேடி வருகின்றனர். நரசிம்மதேவா எனும் மன்னரின் ஆட்சிக்காலத்தில் 13ம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த கோயில் வளாகத்தில் 24 சக்கரங்களுடன் ஏழு குதிரைகள் இழுத்துச்செல்லும் ஒரு தேர் அமைப்பு வெகு நுணுக்கமான சிற்பக்கலை அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. சூரியக்கடவுளின் வாகனமாக இந்த தேர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வெகு உன்னதமான ஒரு கற்பனைப்படைப்பாகவும் மற்றும் கட்டிடச்சிற்பக்கலை நிர்மாணமாகவும் இந்த தேர் அமைப்பு கருதப்படுகிறது. கொனார்க் நகரின் இதர சிறப்பம்சங்கள் யாவற்றையும்விட இது அதிக அளவில் ரசிக்கப்படும் அம்சமாகவும் புகழ் பெற்றுள்ளது.

1984ம் ஆண்டில் உலகப்பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இந்த சூரியக்கோயில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது இதன் மற்றொரு பெருமைக்குரிய அம்சமாகும். கொனார்க் நடனத்திருவிழா எனும் பிரபல்யமான நிகழ்வு இந்த சூரியக்கோயில் வளாகத்தில்தான் ஒவ்வொரு வருடமும் நிகழ்த்தப்படுகிறது.

இந்த அற்புதமான கோயிலின் சில பகுதிகள் கால ஓட்டத்தில் சிறிது சேதமடைந்து காணப்பட்டாலும் இதன் பொலிவு இன்றளவும் குறையாமல் பார்வையாளர்களை பிரமிக்கச்செய்கிறது.

Please Wait while comments are loading...