கொனார்க் – கல்லில் வடிக்கப்பட்ட சிருங்காரக்கவிதைகள்!

ஒடிஷா மாநிலத்தின் தலைநகரான புபனேஷ்வரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ‘கொனார்க்’ நகரம் அதிஅற்புதமான புராதன கோயிற்கலைச்சின்னங்களுடன் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக உலகப்புகழ் பெற்றுள்ளது.  வசீகரிக்கும் வங்காள விரிகுடாவின் கரையில் வீற்றிருக்கும் இந்த சிறிய நகரத்தில் அக்கால இந்தியாவின் மஹோன்னத சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சில கம்பீரமான கோயில்கள் அமைந்திருக்கின்றன.

ஒடிஷா மாநிலத்துக்கே உரிய மஹோன்னதகோயிற்கலை அம்சங்களின் காட்சிக்கூடமாக இந்த கொனார்க் நகரம் ஜொலிக்கிறது. இந்திய மண்ணின் முன்னோடிகள் தங்கள் நாகரிகம், அறிவு, தீர்க்கம், கலைத்திறன் போன்றவற்றை காலத்தில் நீடித்து நிற்கும்படியாக கல்லில் வடிக்கப்பட்ட கவிதைகளாக இந்நகரத்தில் விட்டு சென்றிருக்கின்றனர். மொத்தத்தில், இங்குள்ள கோயில்கள் யாவுமே ஒரு அதிஉன்னத மனித நாகரிகம் விட்டுச்சென்ற ஆவணங்களாக ஜொலிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் ஆன்மிக ஆர்வலர்கள் விரும்பி விஜயம் செய்யும் ஒரு முக்கியமான யாத்திரை ஸ்தலமாகவும் இந்த கொனார்க் நகரம் பிரசித்தி பெற்றுள்ளது.

கொனார்க் நகரம் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்கள்

கொனார்க் நகரம் உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பல்வேறு புராதன கட்டிடக்கலை அம்சங்களை தன்னுள் அடக்கியிருக்கிறது. இந்த நகரத்தின் முக்கிய அடையாளமாக ‘சூரியக்கோயில்’ எனும் அதிஅற்புதமான கோயில் இடம் பெற்றுள்ளது.

உலகத்திலுள்ள அற்புதமான கட்டிடக்கலை படைப்புகளில் இந்த சூரியக்கடவுள் கோயிலும் ஒன்று என்பது இந்தியர் அனைவருமே பெருமைப்படத்தக்க விஷயம்.

கொனார்க் எனும் பெயரும் கூட ‘கோனா’ மற்றும் ‘அர்க்கா’ எனும் சொற்களிலிருந்து பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘கோனா’ என்பது கோணத்தையும் ‘அர்க்கா’ என்பது சூரியனையும் குறிக்கிறது. சூரியனுக்கான கோயில் அமைந்துள்ள இடம் என்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

சூரியக்கோயில் வளாகத்தில் மாயாதேவி கோயில் மற்றும் வைஷ்ணவா கோயில் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களாக அமைந்திருக்கின்றன. இவை தவிர ராமசண்டி கோயில் எனும் கோயிலும் இங்கு முக்கியமான கோயிலாக காட்சியளிக்கிறது.

குருமா எனும் புராதனமான புத்தமடாலயம் அமைந்திருந்த தொல்லியல் ஸ்தலத்தில் காணப்படும் எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட புத்தர் சிலையும் பயணிகள் ரசிக்க வேண்டிய மற்றொரு சுவாரசிய அம்சமாகும்.

காகடபூர் மங்களா கோயில் எனும் முக்கியமான கோயில் ஒன்று பிராச்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஜாமு யாத்ரா எனும் பிரசித்தமான திருவிழா ஒன்று கொண்டாடப்படுகிறது.

சௌராஸி எனும் இடத்தில் அமைந்துள்ள பராஹி கோயில் அங்குள்ள வித்தியாசமான தேவி சிலைக்கு புகழ் பெற்றுள்ளது. அஸ்தரங்கா எனும் இடம் சூரிய அஸ்தமனத்தின்போது தொடுவானில் காணக்கிடைக்கும் அற்புதக்காட்சிக்காக பிரசித்தி பெற்றுள்ளது.

கொனார்க் மத் எனும் மடமும் இந்நகரிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். கோயிற்கலை அம்சங்கள் மற்றும் ஆன்மிக அம்சங்கள் மட்டுமல்லாது கொனார்க் நகரத்தில் சந்திரபாகா எனும் கடற்கரைப்பகுதியும் ஒரு முக்கியமான இயற்கை சுற்றுலா அம்சமாக ரசிக்கப்படுகிறது.

இந்நகரத்தின் புராதன வரலாறு குறித்த விரிவான தகவல்களை அளிக்கும் விதத்தில் ஒரு தொல்லியல் அருங்காட்சியகமும் இங்கு அமைந்துள்ளது. இங்கு சூரியக்கடவுள் கோயில் வளாகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட பல வரலாற்று சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

கொனார்க் – பழமையோடு புதுமையும்!

கொனார்க் நகரம் சுற்றுலாப்பயணிகளுக்கு புராதன அம்சங்களோடு நவீன வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் போன்றவற்றையும் வழங்குகிறது. பாரம்பரியக்கலை அம்சங்கள் நிறைந்த கோயில்கள், அழகிய கடற்கரை ஆகியவற்றோடு நவீன பொழுது போக்கு அம்சங்களுக்கும் இந்நகரத்தில் குறைவில்லை.  

கொனார்க் – அற்புத காட்சிகளின் கதம்ப தரிசனம்!

சுற்றுலாப்பயணிகளுக்கு எல்லா விதத்திலும் மனநிறைவை அளிக்கும் ஒரு வித்தியாசமான ஸ்தலம் இந்த கொனார்க் நகரம் என்று சொல்லலாம். இங்கு வருடந்தோறும் நடத்தப்படும் வெவ்வேறு கலைநிகழ்ச்சிகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன.

கொனார்க் நடனத்திருவிழா எனும் பிரசித்தமான கலைநிகழ்ச்சி இங்கு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த நடனத்திருவிழாவில் ஒடிசி, பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, மணிப்புரி மற்றும் உள்ளூர் சாவ் எனும் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன.

கிராஃப்ட்ஸ் மேளா எனப்படும் கைவினைப்பொருள் கண்காட்சியும் கொனார்க் நகரத்தின் மற்றொரு சுற்றுலா கவர்ச்சி அம்சமாக விளங்குகிறது.

இதுதவிர பிப்ரவரி மாதத்தில் இங்கு மஹா சப்தமி மேளா அல்லது சந்திரபாகா மேளா எனும் திருவிழாவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உணவுப்பிரியர்கள் விரும்பும்வகையில் வகைவகையான உணவுகளும் இங்கு கிடைக்கின்றன.

கொனார்க் நகரத்தில் ஷாப்பிங் செய்வதும் ஒரு அற்புதமான அனுபவமாக உள்ளது. அப்ளிக் எனப்படும் அலங்காரப்பொதிப்பு வேலைகள் செய்யப்பட்ட குடைகள் மற்றும் பைகள் போன்றவை இங்கு அதிக அளவில் விற்கப்படும் முக்கியமான குடிசைத்தொழில் கைவினைப்பொருட்களாகும்.

ஹிந்து கடவுள்களின் படங்கள் மற்றும் ஓவியங்கள், மரம் மற்றும் கற்களால் உருவாக்கப்பட்ட பலவகையான அலங்காரப்பொருட்கள் மற்றும் பட்டா ஓவியங்களும் இங்கு விற்கப்படுகின்றன.

சுற்றுலாவுக்கேற்ற பருவம்

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் கொனார்க் நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றவையாக உள்ளன. இந்த மாதங்களில் நிலவும் குளிர்காலப்பருவம் கோயில் வளாகங்களை சுற்றிப்பார்ப்பதற்கு வசதியான சூழலை அளிக்கிறது.

கொனார்க்கை எப்படி அடைவது?

இந்தியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற பாரம்பரிய சுற்றுலாத்தலம் என்பதால் இந்நகருக்கான போக்குவரத்து வசதிகளில் எந்த குறையுமில்லை. புவனேஷ்வர் நகர விமான நிலையம் வழியாக இங்கு வரலாம்.

ரயில் பயணத்திற்கு வசதியாக பூரி மற்றும் புவனேஷ்வர் நகர ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.  சாலை மார்க்கமாகவும் எளிதில் இந்த நகரத்துக்கு பயணம் மேற்கொள்ள வசதியாக அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் கொனார்க் நகரத்துக்கு பேருந்து சேவைகள் உள்ளன.  

Please Wait while comments are loading...