வேம்பநாட் ஏரி அல்லது வேம்பநாட் காயல் என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்குள்ளேதான் குமரகம் என்று அழைக்கப்படும் தீவுத்திட்டுகளின் தொகுப்புகள் அமைந்துள்ளன. தீட்டப்பட்ட ஓவியம் போன்று காட்சியளிக்கும் தன் பசுமையான இயற்கை எழிற்சூழலாலும் படிகம் போன்று மின்னும் நீர்த்தேக்கத்தாலும் இந்த ஏரிப்பகுதி பயணிகளை வசீகரிக்கிறது.
கேரளாவின் மிகப்பெரிய ஏரியாகவும், இந்தியாவிலுள்ள மிக நீண்ட ஏரியாகவும் இது புகழ்பெற்றுள்ளது. கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் பரந்துள்ள வேம்பநாட் ஏரி புன்னமடா காயல் என்றும் கொச்சி ஏரி என்றும் இடத்துக்கேற்றபடி அழைக்கப்படுகிறது.
நேரு கோப்பை படகுப்போட்டி எனும் படகுப்போட்டித் திருவிழா வருடாவருடம் கோலாகலமாக இந்த ஏரியில் நடத்தப்படுகிறது. கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான படகுகள் கலந்துகொள்ளும் இந்த பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு கண் கொள்ளா விருந்தாக தோற்றமளிக்கும் ஒன்றாகும்.
கேரள மாநிலத்தின் உப்பங்கழி நீர்த்தேக்க சுற்றுலா அம்சங்களின் முதுகெலும்பாக விளங்கும் இந்த வேம்பநாட் ஏரி உலகெங்கிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது.
நூற்றுக்கணக்கான படகுகள் இந்த ஏரிப்பகுதியில் உலா வரும் காட்சியைப் பார்த்து ரசிப்பதே பிரமிக்க வைக்கும் ஒரு அனுபவமாகும். இந்த ஏரியின் கிழக்குக்கரை பகுதி ஏராளமான புலம்பெயர் பறவைகள் வருகை தரும் ஸ்தலமாகவும் அமைந்துள்ளது. இது குமரகம் பறவைகள் சரணாலயம் என்ற பெயரில் அறியப்படும் முக்கிய சுற்றுலா அம்சமாக புகழ்பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications