மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலுள்ள ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த ‘நக்கி ஏரி’யாகும். இது அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகளாலும், உள்ளூர்வாசிகளாலும் விஜயம் செய்யப்படுகிறது.
1200 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஒரே செயற்கை ஏரி என்ற பெருமையை இது பெற்றுள்ளது. பின்னணியில் அழகான மலைகள் காட்சியளிக்க அற்புதமான எழிலுடன் இந்த ஏரி அமைதியாக வீற்றுள்ளது.
அசுரர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தேவர்கள் தங்கள் நகங்களால் இந்த ஏரியை தோண்டி உருவாக்கியதால் ‘நக்கி’ எனும் பெயரை பெற்றதாகவும் ஐதீகமாக நம்பப்படுகிறது.
மற்றொரு புராணிக நம்பிக்கையின்படி, தில்வாரா ஜெயின் கோயில்களை உருவாக்கிய ரஸியா பலாம் எனும் ஸ்தபதி இந்த ஏரியை ஒரே இரவில் வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ஏரிஸ்தலத்தில் காந்தி காட் எனப்படும் காந்திஜியின் நினைவுச்சின்னத்தையும் பார்க்கலாம். அவரது அஸ்தி இந்த ஏரியில் 1948ம் ஆண்டு பிப்ரவரி 12ம் நாள் கரைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஏரியைச் சுற்றிலும் பாறைகளால் ஆன குன்றுகள் சூழ்ந்துள்ளதால் சாகச பொழுதுபோக்குகளில் விருப்பம் உள்ள பயணிகள் மலையேற்றம் போன்றவற்றில் ஈடுபடலாம். அதுதவிர, இந்த ஏரியில் படகுச்சவாரி செய்வது அதன் அமைதியான அழகை ரசிக்க உதவும் அனுபவமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications