நாகர்ஹொளே - விலங்குகளின் உறைவிடம்

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள நாகர்ஹொளே நகரம், அதன் பெயரிலேயே உள்ள நாகர்ஹொளே தேசியப் பூங்காவுக்காக உலகப் பிரசித்தி பெற்றது. அதன் அடர்ந்த காடுகளில் வளைந்தும், நெளிந்தும் ஓடிக்கொண்டிருக்கும் நாகர்ஹொளே நதியின் காரணமாகவே அதற்கு நாகர்ஹொளே என்று பெயர் வந்தது. கன்னடத்தில் 'நாகர்' என்றால் பாம்பு என்றும், 'ஹொளே' என்றால் நதி என்றும் அர்த்தம்.

நாகர்ஹொளே நகரப் பகுதியின் முக்கிய அங்கமாக விளங்கி வருகிறது ராஜீவ் காந்தி தேசியப் பூங்கா. இந்த நகரின் அற்புதமான வெப்ப நிலைக்காகவும், செழுமையான அடர்ந்த காடுகளுக்காகவும் ஆண்டு தோறும் இங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

நாகர்ஹொளே காடுகள் ஆதி காலத்திலிருந்தே வனவிலங்குகளுக்காக பிரபலமாக இருந்து வருகின்றன. அந்த காலங்களில் மைசூர் மகாராஜாக்கள் இங்கு காட்டெருமைகள் உள்ளிட்ட மிருகங்களை வேட்டை ஆடி வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் இன்றும் எண்ணற்ற விலங்கு இனங்களை நீங்கள் நாகர்ஹொளே காடுகளில் பார்த்து ரசிக்கலாம்.

நாகர்ஹொளே வரும் பயணிகள் பிரம்மகிரி மலைகளுக்கும், இறுப்பு நீர்வீழ்ச்சிக்கும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். இதில் இறுப்பு நீர்வீழ்ச்சி இங்கே ஓடிக்கொண்டிருக்கும் லக்ஷ்மண தீர்த்த நதியிலிருந்து பிறக்கிறது.

இந்த லக்ஷ்மண தீர்த்த நதி இராமாயண காலத்திலிருந்தே இருப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. ஒரு முறை சீதா பிராட்டியார் தாகத்தால் தவித்த போது, லக்ஷ்மணன் வில்லில் நாணைப் பூட்டி தரையை நோக்கி அம்பு எய்ததாகவும், அதிலிருந்து பொங்கிப் பெருகி வந்ததே இன்று லக்ஷ்மண தீர்த்த நதியாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

Please Wait while comments are loading...