2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் ருத்ர தாண்டவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இன்றளவும் நாம் கொரோனாவின் பாதிப்புகளுடன் தான் வாழ்ந்து வருகின்றோம். இன்னும் அந்த தாக்கத்தில் இருந்தே நாம் வெளியே வரவில்லை, அதற்குள் கொரோனாவின் புதிய வகை, ஒமிக்ரான் பி 7 என்றெல்லாம் என்னென்னவோ வருகின்றன. இதோ இப்போது கேரளாவில் புதிய நோரோவைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் 62 நபர்களுக்கு இந்த வைரஸின் பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரஸின் பிடியில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி? இதன் அறிகுறிகள் என்னென்ன? என்பவற்றை இங்கே காண்போம்!

நோரோவைரஸ் என்றால் என்ன?
"நோரோவைரஸ்" என்பது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களின் குடும்பத்தில் சேர்ந்த வைரஸ் ஆகும். மேலும் இது பரவக்கூடிய ஒரு தொற்றுநோய் ஆகும். நோரோவைரஸ் குளிர்கால "வாந்தி பிழை" (vomiting bug) என்றும் அழைக்கப்படுகிறது. பலர் நோரோவைரஸை "வயிற்றுக் காய்ச்சல்" என்று குறிப்பிட்டாலும், அதற்கும் காய்ச்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நோரோவைரஸ் அறிகுறிகள் பொதுவாக 24 முதல் 72 மணிநேரம் வரை நீடிக்கும், ஆனால் அதை விட நீண்ட நேரம் நீடித்தால், நீங்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும், குறிப்பாக உங்கள் மலத்தில் இரத்தம் வெளியேறத் தொடங்கினால்.

ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் உயிரிழப்புகள்
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த நோரோவைரஸ் ஏற்கனவே உலகில் இருக்கின்ற ஒரு வைரஸ் ஆகும், இதற்கும் கொரோனா வைரஸுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துக்கணிப்பின் படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 20 கோடி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட 68.5 கோடி நோரோவைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இது ஆண்டுக்கு 50,000 குழந்தைகள் உட்பட 200,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள ஏழை நாடுகளில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

கேரளாவில் கண்டறியப்பட்ட நோரோவைரஸ்
கொச்சியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு நோரோவைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தியை கொச்சி பள்ளி மற்றும் மாநில அரசு உறுதி செய்துள்ளது. நோரோவைரஸ் தொற்று கடுமையான இரைப்பை குடல் அழற்சிக்கு ஒரு காரணமாகும். காக்கநாடு அருகே உள்ள ஒரு பள்ளியில் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தொற்று வைரஸ் கண்டறியப்பட்டது.
இவர்களில் மூன்று மாணவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அது மட்டுமின்றி வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, குமட்டல், அதிக வெப்பநிலை, தலைவலி மற்றும் உடல்வலி உள்ளிட்ட நோரோவைரஸின் அறிகுறிகள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உட்பட 62 பேரிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோரோவைரஸின் அறிகுறிகள்
o குமட்டல்
o வாந்தி
o வயிற்று வலி அல்லது பிடிப்புகள்
o நீர் அல்லது தளர்வான வயிற்றுப்போக்கு
o உடம்பு சரியில்லை
o குறைந்த தர காய்ச்சல்
o தசை வலி

நோரோவைரஸ் பரவுவதற்கான காரணங்கள்
நோரோவைரஸ் பல்வேறு வழிகளில் மக்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு, அசுத்தமான மேற்பரப்புகளைத் தொட்ட பிறகு உங்கள் வாயைத் தொடுதல் அல்லது கறைபடிந்த உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வது ஆகியவை வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகள். நோரோவைரஸ்கள் அதிக மற்றும் குறைந்த வெப்பநிலை மற்றும் ஏராளமான கிருமிநாசினிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை என்பதால், அவற்றை ஒழிப்பது சவாலானது. உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த வைரஸ் தொற்று இயற்கையில் இருப்பதால் யாரையும் எளிதில் பாதிக்கலாம் என்று கூறியுள்ளது.

நோரோவைரஸ் தடுப்பதற்கான வழிமுறைகள்
o உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள்.
o பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன் நன்றாக அலசி சுத்தம் செய்த பின்னர் சாப்பிடுங்கள்.
o நண்டு, மீன், இறால் போன்ற கடல் உணவுகளை முழுவதுமாக சமைத்து சாப்பிடுங்கள்.
o காலாவதியான உணவை உண்ணக் கூடாது.
o திறந்த வெளியில் வைக்கப்படும் உணவை உண்ணக் கூடாது.
o ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே இருங்கள், அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
o நிறைய தண்ணீர் குடிக்கவும்.
இது குழந்தைகளை எளிதில் பாதிக்கும் என்பதால் நம் வீட்டுக் குழந்தைகளிடம் அதிக கவனம் செலுத்துங்கள்!