சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. லேட்டஸ்ட் தகவலின் படி, வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்தே இந்த வசதியை அறிமுகப்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சென்னை பீச்-செங்கல்பட்டு இடையே விரைவு ரயில் தடத்தில் இரு சேவைகள், தாம்பரம் - சென்னை பீச் இடையே ஒரு சேவையிலும் இந்த ஏசி மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை காலம் துவங்கி உள்ள சமயத்தில் சென்னையில் உள்ளூர் ரயில் பயணத்திலும் ஏசி வசதியை அறிமுகமப்படுத்துவது மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசி மின்சார ரயிலில் உள்ள வசதிகள் :
- தானியங்கி கதவுகள்
- லக்கேஜ் வைப்பதற்கு அலுமினியம் ரேக்
- ஜிபிஎஸ் அடிப்படையிலான எல்இடி டிஸ்பிளே போர்டு
- ரயில் நிலையம் தொடர்பான அறிவிப்பு முறை
- பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமிராக்கள்
ஏசி மின்சார ரயில் விபரம் :
இதற்காக 12 பெட்டிகள் கொண்ட ஏசி ரயில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பயணத்தில் 5700 பயணிகள் வரை பயணிக்க முடியும். மொத்தம் 1320 இருக்கைகள் என சொல்லப்படுகிறது. 2336 பேர் வரை நின்று கொண்டு பயணிக்கும் அளவிற்கு இட வசதி கொண்டதாக இந்த ரயில் பெட்டிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இந்த ரயில் சென்னை மண்டலத்திடம் ஒப்படைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

ஆனால் ஒரு நாளைக்கு எத்தனை முறை இந்த ஏசி இயக்கப்படும் என்பது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. சென்னை பீச் - தாம்பரம் இடையே 12 நிறுத்தங்களில் நின்று செல்லும். கோட்டை, பூங்கா, எக்மோர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, போத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய 12 நிறுத்தங்களில் நின்று செல்லும் வகையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்த ஏசி மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
ரயில் கட்டணம் எவ்வளவு இருக்கும் ?
வழக்கமான மின்சார ரயில்களை விட மூன்று மடங்கு கட்டணம் இந்த ஏசி மின்சார ரயிலுக்கு நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தாம்பரம் முதல் சென்னை பீச் வரை பயணிக்க ரூ.20 முதல் ரூ.30 மட்டுமே ரயில் கட்டணமாக உள்ளது. ஆனால் இந்த ஏசி மின்சார ரயிலில் சென்னை பீச்- தாம்பரம் இடையேயான 29 கி.மீ., பயணத்திற்கு ரூ.95 கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதாவது, 9 கி.மீ., வரையிலான தூரத்திற்கு ரூ.35ம், 24 கி.மீ., வரையிலான பயணத்திற்கு ரூ.70ம், 34 கி.மீ., வரையிலான பயண தூரத்திற்கு ரூ.95ம் கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications






