மக்களே! திருப்பதி போறீங்களா? உஷார்! நீங்கள் குறைந்தபட்சம் 20 மணி நேரமாவது காத்திருந்து தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். கோடை விடுமுறை எதிரொலியினால் திருப்பதி முழுக்க பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது! திருமலையில் சமீபத்திய நிலவரப்படி, வைகுண்ட காத்திருப்பு அறைகளில் 31 குடவுன்களும் நிரம்பி வழிந்து, பல கிலோமீட்டர் தூரத்திற்கு வெளியே வரிசையில் காத்திருக்கின்றனர்! நீங்கள் திருப்பதி போறீங்கன்னா, கீழ்க்கண்ட விஷயங்களை தெரிந்துக் கொண்டு ட்ரிப் பிளான் பண்ணவும்!
நிரம்பி வழியும் திருமலை திருப்பதி
உலகப்பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தாலும் கோடை விடுமுறை மாதங்களான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டின் மூலை முடுக்ககளிலிருந்தும் திருமலைக்கு வருகை தருவதால், திருமலை முழுக்கவும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இப்போது கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருக்கிறது. திருப்பதியில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருப்பதால் பாலாஜியை பார்க்க பல மணி நேரம் ஆவதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

கோடை விடுமுறையால் திணறிப் போன திருப்பதி
கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருகிறது. பல மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசை கட்டி நிற்பதால் கோவில் ஊழியர்கள் திணறிபோய் இருக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திரா மட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்பட பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். வழக்கமாக விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா போன்ற சமயங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் கோடை விடுமுறை காரணமாக கடுமையாக கூட்டம் காணப்படுகிறது.
மணி கணக்கில் காத்து கிடக்கும் பக்தர்கள்
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் சுமார் 3-4 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆதார் டிக்கெட் பெற்றவர்கள் 6-8 மணிநேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம். பார்க்க முடியும். ஒருவேளை அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நேரடியாக இலவச தரிசனத்திற்கு போக முடியும். ஆனால் அப்படி செல்பவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய பல மணி நேரமாகும். கூட்டம் குறைவாக இருந்தால் 12 மணி நேரம் வரையிலும், கூட்டம் மிக அதிகம் என்றால் 24 மணிநேரத்தை கடந்தும் நேரம் ஆக வாய்ப்பு உள்ளது.

சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ள TTD
திருமலையில் பக்தர்களின் கூட்டம்அதிகரித்ததால், திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், மாதவம்உள்ளிட்ட தேவஸ்தான விடுதிகளில் தங்கும் அறை கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். திருப்பதியில் பஸ் நிலையம், ரயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் இடங்களில் 27 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களையும், அன்னபிரசாத விநியோகத்தையும் தேவஸ்தானம் ஏற்பாடுசெய்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 2.60 லட்சம் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மார்க்கமாக திருமலைக்கு நடந்து சென்றுள்ளனர். நேற்று சனிக்கிழமை மட்டும் மாலை 5 மணி நிலவரப்படி 46,486 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.
விஐபி தரிசனம் கூட ரத்து
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30 ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானம் இப்படி என்ன முயற்சி செய்தாலும்கூட்டத்தை கட்டப்படுத்த முடியவில்லை. நீங்கள் திருப்பதி சென்றால் இவற்றை கவனத்தில் கொண்டு செயல்படவும்.



Click it and Unblock the Notifications





