வந்தே பாரத் அதிவிரைவு ரயிலின் ஐந்தாவது பதிப்பு சென்னையில் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயிலை பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பெங்களூரில் நவம்பர் 10 ஆம் தேதி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இனி சென்னையிலிருந்து பெங்களூர் மற்றும் மைசூருக்கு பயணிகள் வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணிக்கலாம்!

மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், ஒரு வெற்றி கரமான முயற்சியாகும். இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் அதிவேக ரயில்கள் கொண்டு இணைக்கும் வகையில், அமிர்த மஹோத்சவின் 75 வாரங்களில் இதுபோன்ற 75 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்படும் என்று பாரத பிரதமர் கூறினார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புது தில்லி - வாரணாசி, புது தில்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மற்றும் காந்திநகர் மற்றும் மும்பை இடையே இயக்கப்படுகின்றன. சமீபத்தில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரயில்களை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் ஐந்தாவது ரயில் சென்னை - பெங்களூர் - மைசூர் இடையே தொடங்கப்படவுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய இரயில்வே அமைப்புகளில் ஒன்றான இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரயிலில் பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளன. 2 எக்சிகியூட்டிவ் கிளாஸ் அடங்கிய 16 குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் மொத்தமாக 1,128 பயணிகள் அமரலாம். சுழலக்கூடிய நாற்காலிகள், ஜிபிஎஸ்-அடிப்படையிலான ஆடியோ-விஷுவல் பயணிகள் தகவல் அமைப்பு, பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஆன்போர்டு ஹாட்ஸ்பாட் வைஃபை, சூடான உணவுகள், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் என ஏகப்பட்ட தனித்துவமான வசதிகள் இந்த ரயிலில் உண்டு.
ஆகவே பயணிகள் இனி சென்னையிலிருந்து, பெங்களூர் மற்றும் மைசூருக்கு வந்தே பாரத் அதிவேக ரயிலில் பயணிக்கலாம்.



Click it and Unblock the Notifications





