தொழில் நகரம் என்று அழைக்கப்படுகிற இந்த பாலி நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. பாலி மாவட்டத்தின் தலைநகரமாகவும் இது இயங்குகிறது. இந்த பிரசித்தமான சுற்றுலாத்தலம் பந்தி ஆற்றின் கரையில் உள்ளது. முற்காலத்தில் இந்த நகரம் பாலிகா அல்லது பால்லி என்று அழைக்கப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில், பாலிவால் பிராம்மணியர்கள் அதிகம் வசித்த பிரதேசம் என்ற காரணத்தால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. தற்காலத்தில் நெசவாலைகளுக்காக புகழ் பெற்றும் இந்நகரம் வரலாற்று காலத்திலிருந்தே முக்கிய வணிக நகரம் எனும் பின்னணியை கொண்டுள்ளது.
பாலி நகரமானது ஜெயின் கோயில்கள், கோட்டைகள், பூங்காத்தோட்டங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் போன்ற அம்சங்களுக்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது. நவ்லக்கா கோயில் இங்குள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாகும்.
23வது தீர்த்தங்கரருக்காக இக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. பரசுராம் மஹாதேவ் கோயில், சாமுண்ட மாதா கோயில், சோம்நாத் கோயில் மற்றும் ஹட்டுண்டி ராதா மஹாபிர் ஸ்வாமி கோயில் ஆகியவை இங்குள்ள இதர முக்கியமான கோயில்களாகும்.
கோயில்கள் தவிர்த்து பாலி நகரத்திலுள்ள பங்கூர் மியூசியமும் அவசியம் பார்க்க வேண்டிய விசேஷ அம்சமாகும். இது நகரத்தின் பழைய பேருந்து நிலையத்துக்கருகில் அமைந்துள்ளது.
பயணிகள் இங்கு பல அரிய வரலாற்றுகால கலைப்பொருட்கள், புராதன நாணயங்கள், ராஜ உடைகள் மற்றும் ஆபரணங்கள் போன்றவற்றைப்பார்க்கலாம். இவை தவிர, நகரின் மத்தியில் அமைந்துள்ள லகோத்தியா கார்டன் எனும் பூங்காத்தோட்டத்தையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இங்குள்ள ஒரு புராதனமான சிவன் கோயிலைத் தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.
பாவ்ரி எனப்படும் படிக்கிணறுகளும் பாலி நகரத்தில் அதிகம் காணப்படுகின்றன. இந்த கிணறுகளின் படிகளில் நுணுக்கமான அலங்கார வடிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள சோஜட் எனும் இடமும் முக்கியமான சுற்றுலாத்தலமாக பெயர் பெற்றுள்ளது.
இங்கு ஹென்னா எனப்படும் மருதாணி (மெஹந்தி) தாவரம் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. நிம்போ கா நாத், ஆதீஷ்வர் கோயில் மற்றும் சூர்யா நாராயணா கோயில் ஆகிய கோயில்களும் இங்கு பிரசித்தமானவையாக அறியப்படுகின்றன.
பாலி நகரத்தை விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். ஜோத்பூர் விமான நிலையம் பாலி நகருக்கு அருகிலுள்ள விமானத்தளமாக அமைந்துள்ளது.
ரயில் மூலமாகவும் பாலி நகரத்துக்கு செல்லலாம். இவை தவிர, தேசிய நெடுஞ்சாலை ‘எண் 111’ பாலீ நகரத்தை பிலாஸ்பூர் மற்றும் அம்பிகாபூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது.
மேலும், பாலி நகரத்துக்கு, ஜோத்பூர், மற்றும் உதய்பூர் போன்ற நகரங்களிலிருந்தும் பேருந்துச்சேவைகள் உள்ளன.
பாலி நகரமானது பாலைவனப்பகுதியில் அமைந்துள்ளதால் சுட்டுப்பொசுக்கும் வெப்பம் மற்றும் வறட்சியுடன் காணப்படுகிறது. கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 46° C வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது.
குளிர்காலம் பாலி நகருக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. பொதுவாக, அக்டோபர் முதல் பிப்ரவரி வரையான இடைப்பட்ட காலத்தில் பாலீ நகருக்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது.



Click it and Unblock the Notifications