சிவகாசி - பட! பட! பட்டாசு நகரம்!

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி, பட்டாசுகளுக்கும், தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் பெயர் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிவகாசி நகரம் ஒரு சுற்றுலா தலமாகவும்  விளங்கி வருகிறது. குறிப்பாக இங்கு இருக்கும் இந்து சமய கோயில்கள், மற்றும் இங்கு கொண்டாடப்படும் வண்ணமயமான திருவிழாக்கள் ஆகியவை பக்தர்களை மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் அம்சங்களாக உள்ளன.

சிவகாசியின் வரலாறு

சிவகாசி நகரம் ஏறக்குறைய 600 ஆண்டு கால வரலாற்றை கொண்டிருக்கிறது. தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சி பகுதியின் ஒரு பகுதியாக சிவகாசி இருந்திருக்கிறது.

இந்த மன்னர், தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து சிவகாசியில் நிறுவினார்.

காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால், காசி சிவலிங்கம் பெயராலே சிவகாசி என்று அழைக்கப்படுகிறது. பிற்கால பாண்டிய மன்னர்களும் மற்றும் நாயக்க மன்னரான திருமலை நாயக்கரும் சிவலிங்கம் இருக்கும் கோயிலை மிகப் பெரிய கோயிலாக கட்டினர்.

இந்த கோயில் தற்போது காசி விஸ்வநாத சாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த கோயில் ஆன்மீக பக்தர்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளும் வந்து தரிசித்துவிட்டு அருள் பெரும் முக்கிய ஆன்மீகத் ஸ்தலமாக விளங்குகிறது.

சிவகாசியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள்

சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஆலயங்களும் மற்றும் சுற்றுலாத் தலங்களும் உள்ளன. குறிப்பாக திரு பத்ரகாளியம்மன் ஆலயம், பராசக்தி மாரியம்மன் ஆலயம், திருத்தங்கல், திரு வெங்கடாசலபதி ஆலயம், மாரியம்மன் கோயில் போன்றவை சிவகாசியில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான ஆன்மீக தலங்கள் ஆகும்.

ஆலயங்களை தவிர்த்து, அய்யனார் நீர்வீழ்ச்சி, முதலியார் ஊத்து, பிளவக்கல் அணை, நென்மேனி, குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் மற்றும் வெம்பக்கோட்டை ஆகியவை சிவகாசியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும்.

Please Wait while comments are loading...