பேருந்து, கார், ரயில், கப்பல், விமானம் என போக்குவரத்திற்கு பல வழிகள் இருந்தாலும், ஜன்னல் ஓரத்தில் ரயில் இருக்கையில் அமர்ந்தபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு நமக்கு பிடித்தமான இசையை கேட்டுக்கொண்டு பயணித்தால் எப்படி இருக்கும். என்ன? நினைத்து பார்க்கவே ஆனந்தமாக உள்ளது அல்லவா. ஆனால் அந்த வழித்தடமே இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் இருந்தால் சொல்லவா வேண்டும்?
நகரங்கள், கிராமங்கள், மலைப்பாதைகள், நீர்வீழ்ச்சிகள், சுரங்கப்பாதைகள், கடல்கள், ஆறுகள் என ரயில் கடந்து செல்லும் போது, உள்ளிருந்து பார்த்து ரசிப்பது மிகவும் ரம்மியமாக இருக்கும். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய ரயில்பாதைகள் மிகவும் அழகானவை. நீங்கள் நிச்சயம் வாழ்வில் ஒருமுறையேனும் இதில் ஏதேனும் ஒன்றில் பயணிக்க வேண்டும்!

கல்கா – சிம்லா
அழகிய பள்ளத்தாக்குகள், செங்குத்தான பாதைகள் மற்றும் பனிமூட்டமான புல்வெளிகள் வழியே இந்த அழகிய பயணம் சிம்லாவிற்கு பயணிக்கும் பயணிகளின் மனதை கவர்கிறது. செங்குத்தான பாதையை கட்டி முடித்ததற்காக 'கின்னஸ் சொசைட்டி'யால் இது மிகவும் பாராட்டப்பட்ட ஒரு முயற்சியாகும். ஐந்து மணி நேரம் நீடிக்கும் இந்த பயணத்தில் 20 ரயில் நிலையங்கள், 102 சுரங்கப்பாதைகள், 900 வளைவுகள் மற்றும் 82 பாலங்களை நீங்கள் கடந்து செல்வீர்கள்.

ஜம்மு - பாரமுல்லா
ஜம்மு, உதம்பூர், ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா ஆகிய நகரங்களை இணைக்கும் இந்த ரயில் பாதை அழகானது மற்றும் வசீகரமானது மட்டுமல்ல, மிகவும் சவாலானதும் கூட. உயரமான மலைப்பாதைகள் மற்றும் கடுமையான நிலப்பரப்புகளுக்கு இடையே கடுமையான குளிருக்கு நடுவே பயணம் செய்யும் போது, காஷ்மீரின் அழகில் திளைப்பதோடு சாகசத்தையும் உணருவீர்கள்.

ஜெய்சால்மர் – ஜோத்பூர்
'டெசர்ட் குயின்' ரயில் பாதையில் செரோஃபைடிக் தாவரங்கள், மஞ்சள் மண், குன்றுகள், ஒட்டகங்கள் மற்றும் பாலைவன வாசிகளின் சிறு சிறு குடியிருப்புகள் போன்ற பொதுவான பாலைவன நிலப்பரப்பு போன்ற பலதரப்பட்ட நிலப்பரப்பை நீங்கள் கண்டு மகிழலாம். 6 மணி நேர பயணம் கொண்ட இந்த அழகிய ரயில் பாதை பயணம் இந்தியாவின் மிக அழகான ரயில் பயணங்களில் ஒன்றாகும்.

மும்பை – கோவா
மும்பையிலிருந்து கோவா செல்லும் இந்த ரயில் பாதை சஹ்யாதாரி பள்ளத்தாக்குகள் அரபிக்கடலின் விளிம்புகள் வழியாகச் செல்லும் ஒரு அழகிய பயணமாகும். பசுமையான மேற்கு தொடர்ச்சி மலைகள், சுரங்கப்பாதைகள், பாலங்கள், எண்ணற்ற சிறிய ஆறுகள், பருவகால நீரோடைகள் மற்றும் பசுமையான புல்வெளிகள் என இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகள் நிறைந்த பாதையாகும். அதுவும் குறிப்பாக கோவாவின் துத்சாகர் நீர்வீழ்ச்சி அருகே ரயில் செல்லும் போது, நீங்கள் அந்தக் காட்சியை கண்டு மெய் சிலிர்ப்பது உறுதி.

மண்டபம் – ராமேஸ்வரம்
த்ரில் மற்றும் சாகசங்கள் நிறைந்த இந்தியாவின் மிக அழகான ரயில் பாதைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் இரண்டாவது நீளமான பாலமான பால்க் ஜலசந்தி வழியாக செல்லும் இந்த பாலம் இந்தியாவின் பிரதான நிலப்பகுதியை பாம்பன் தீவுடன் இணைக்கும் ஒரே பாதையாகும். குறுகிய பாலத்தின் மீது கடலில் பயணிக்கும் போது இந்த பயணம் பிரமிப்பூட்டும் அனுபவத்தை வழங்குகிறது. பாம்பன் பாலம் மீது பயணிக்கும் எவரும் நிச்சயம் பிரமிப்படையாமல் இருக்க முடியாது.

மேட்டுப்பாளையம் – ஊட்டி
1885 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் வணிகத்திற்காக திறக்கப்பட்ட இந்த அழகிய ரயில் பாதை 2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. 26 கிமீ தூரம் கொண்ட இந்த சிறிய சவாரி, 16 சுரங்கங்கள், அடர்ந்த பைன், கருவேலம், யூகலிப்டஸ் என மேற்கு தொடர்ச்சி மலைகளின் வழியே ஒரு ரம்மியமான பயணத்தை வழங்குகிறது.

விசாகப்பட்டினம் - அரக்கு பள்ளத்தாக்கு
கம்பீரமான கிழக்கு தொடர்ச்சி மலைகள், காபி தோட்டங்கள் வழியாக ஷிமிலிகுடாவின் மிக உயரமான மலைப்பாதையில் நீங்கள் எண்ணற்ற சுரங்கங்கள் மற்றும் கூர்மையான வளைவுகள் வழியாக பயணம் செய்யலாம். அரக்கு பள்ளத்தாக்கை அடைய இந்த அழகிய மலைப்பாதையில் நீங்கள் பயணம் செய்யலாம்.

புதிய ஜல்பைகுரி – டார்ஜிலிங்
நியூ ஜல்பைகுரியிலிருந்து டார்ஜிலிங் செல்லும் இந்த அழகிய பயணம் 78 கிமீ நீளமுள்ள ஒரு 8 மணிநேரம் பயணமாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த மலைப்பாதை ரயில் பயணத்தில் மகிழ்ச்சியுடன் சவாரி செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் டார்ஜிலிங்கிற்கு வருகிறார்கள். இந்த டாய் டிரெயினில் பயணம் செய்தபடியே கஞ்சன்ஜங்கா மலையின் அழகைப் பார்த்து ரசிப்பதை நீங்கள் நிச்சயம் உங்கள் வாழ்வில் மறக்க மாட்டீர்கள்.

ரத்னகிரி – மங்களூர்
இயற்கையின் சில அசாதாரண அழகை அனுபவிக்க ரத்னகிரியில் இருந்து மங்களூர் செல்லும் கொங்கன் இரயில்வேயில் நீங்கள் பயணிக்க வேண்டும். அடர்ந்த காடுகள், வலிமைமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைகள், ஆழமான சுரங்கங்கள், ஆற்றுப் பாலங்கள், கூர்மையான வளைவுகள் மற்றும் எண்ணற்ற பருவகால நீரோடைகள் வழியே செல்லும் இந்த மயக்கும் இந்த ரயில் பயணம் இந்தியாவின் மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் இரயில் பயணங்களில் ஒன்றாகும்.

கவுகாத்தி – சில்சார்
ஜடிங்கா நதி, பசுமையான அசாம் பள்ளத்தாக்கு, தேயிலை தோட்டங்கள் மற்றும் அலை அலையான ஹஃப்லாங் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் இந்த அழகிய பாதை உங்கள் மனதை மயக்க தவறாது. கவுகாத்தியில் இருந்து லும்டிங் மற்றும் பராக் பள்ளத்தாக்கு வழியாக சில்சார் செல்லும் பாதை இந்தியாவின் மிக அழகான ரயில் பயணங்களில் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications





