என்ன தான் நாம் நவீன காலத்திற்கு ஏற்றார்போல் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டாலும், சமூகம் பல்வேறு வகையில் மேம்பட்டாலும் நம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நம் முன்னோர்களையும் நாம் போற்றி வருகிறோம்! பழங்காலத்து பொருட்களை பொக்கிஷமாக சேர்த்து வைத்து பாதுகாப்பதே ஒரு பெருமை தான் அல்லவா. அப்படித்தான் இங்கு ஒரு ஆசிரியர் தன்னிடம் இருப்பது ராஜ ராஜ காலத்து நாணயம் என்பது தெரியாமல் நீண்ட நாட்களாக பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார். உண்மை அறிந்து இப்போது வியந்து போயிருக்கிறார்! இந்த ரசிகர் சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது.

பழங்கால பொருட்களை சேகரிப்பதே ஒரு தனி இன்பம்
நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு பொழுதுபோக்கு உள்ளது. சிலருக்கு நடனம் பிடிக்கும், சிலருக்கு பாடுவது பிடிக்கும், பலருக்கு பொருட்களை சேகரிப்பது பிடிக்கும். அதே போல சிலருக்கு பழங்காலத்து பொருட்களை சேகரித்து வைப்பது மிகவும் பிடிக்கும். நீங்கள் அது போல பழங்காலத்து நாணயங்களை சேர்த்து வைப்பவராக இருந்து, உங்களிடம் இருப்பது ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஒரு ராஜ ராஜ சோழர் காலத்து நாணயம் என்று தெரிந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். நிஜமாகவே பூரிப்பாக இருக்கிறது அல்லவா! தொல்லியல் ஆய்வின் போது ஒரு வரலாற்று ஆசிரியருக்கு இதே நிகழ்வு நடந்துள்ளது.

ஆசிரியரிடம் இருந்த 1000 ஆண்டுகள் பழமையான நாணயம்
விருதுநகரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த பயிற்சியின் போது பல அரிய விஷயங்களைப் பற்றி அவர் தெரிந்துக் கொண்டார். அதில் மிகவும் ஆச்சரியமாக இருந்த விஷயம் என்னவென்றால், அவரிடம் இருந்த ஒரு நாணயம் 1000 ஆண்டுகள் பழமையான செப்பு நாணயம் என்பது தான். இந்த நாணயம் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தது.
ஆசிரியருக்கு நாணயத்தைப் பரிசாக வழங்கிய மாணவர்
ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த இந்த நாணயத்தை, மாணவர் ஒருவர் இந்த ஆசிரியருக்கு பரிசாக வழங்கியுள்ளார். மாணவர் நியாபகமாக இந்த பழங்கால நாணயத்தை தன் சேமிக்கும் பழங்கால பொருட்களுடன் அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இதை அந்த மாணவர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் கொடுத்துள்ளார். இந்த பயிற்சியில் தஞ்சாவூரைச் சேர்ந்த நாணயவியல் அறிஞர் ஆறுமுக சீதாராமன் அந்தக் காலத்து நாணயங்களைப் பற்றிப் பேசும்போது, ஆசிரியருக்கு அவருடைய செப்புக் காசுதான் நினைவுக்கு வந்ததாம்.

ராஜராஜ சோழர் காலத்து நாணயம்
அவர் வீட்டிற்கு சென்றவுடன் அந்த நாணயத்தை எடுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்தார். பயிற்சியில் ஈடுபட்ட ஆசிரியர்களையும் தொடர்புக் கொண்டு மேலும் கேட்டறிந்ததில் அவர் வைத்திருந்த நாணயம் ராஜராஜ சோழர் காலத்து நாணயம் என்பது தெரிவாக தெரிந்துள்ளது. இந்த 1000 ஆண்டுகள் பழமையான செப்பு நாணயம் முதலாம் இராஜராஜ சோழன் காலத்திலிருந்து முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 985-கி.பி. 1120) வரை பயன்பாட்டில் இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றில் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஈழத்து வெற்றியாக ஈழத்து நாணயம்
அந்தக் காலத்தில் மன்னர்கள் வெற்றிகளை கொண்டாடுவதற்காக சிறப்பு நாணயங்களை வெளியிட்டு கொண்டாடுவது வழக்கம். ஆசிரியர் வைத்திருந்த நாணயம் ஈழத்து நாணயம் என்றும், இலங்கையை கைப்பற்றியபோது சோழ மன்னர்களால் வெளியிடப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது.

தேவநாகரி எழுத்துக்களில் 'ஸ்ரீராஜராஜா'
நாணயத்தின் ஒரு பக்கம் இடது கையில் ஒரு பூவை வைத்திருப்பவர் உள்ளார். அவரது இடதுபுறத்தில் ஒரு சங்கு மற்றும் நான்கு வட்டங்கள் உள்ளன. மேலும் கீழே ஒரு மலரும் மேலே பிறை ஒன்றும் உள்ளது. மறுபுறம் ஒருவன் கையில் சங்கு ஏந்தியபடி அமர்ந்திருக்கிறான். அவரது இடது கைக்கு அருகில் தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட 'ஸ்ரீராஜராஜா' என்ற எழுத்துக்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகம்
தமிழ்நாட்டின் வேலூர், சென்னை, தருமபுரி, ஆற்காடு, திருநெல்வேலி, பூண்டி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் அரசு தொல்லியல் அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. இங்கே நீங்கள் பழங்காலத்து சிற்பங்கள், கலைப் பொருட்கள், ஆபரணங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை பார்த்து ரசிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அகழ்வாராய்ச்சி தளங்கள்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி, தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகாலை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை, மாவட்டத்தில் திருநெல்வேலியில் துலுக்கர்பட்டி, மாவட்டம் தர்மபுரியில் பெரும்பாளை ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள அகழ்வாராய்ச்சி தளங்களாகும்.



Click it and Unblock the Notifications





