பசுமையான பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பிரகாசிக்கும் ஆறுகள் அல்லது வரலாற்றுச் சின்னங்கள் வழியாக ரயிலில் பயணம் செய்வது எவ்வளவு பிரமிப்பாக இருக்கும் தெரியுமா? இந்தியாவின் சில குறிப்பிட்ட அழகிய ரயில் பாதைகளை நீங்கள் தேர்ந்தெடுத்தால் கண்ணுக்கு குளிர்ச்சியான, அழகான, வினோதமான பல காட்சிகளை நீங்கள் கண்டு ரசித்துக் கொண்டே செல்லலாம். அதற்கு அதிக செலவு ஆகாது, அதிகபட்சமாக வெறும் ரூ.200 இருந்தால் போதும்! அந்த வகையில் நீங்கள் செல்ல வேண்டிய இந்தியாவின் அழகிய ரயில் பாதைகளின் லிஸ்ட் இதோ!
மேட்டுப்பாளையம் - ஊட்டி
தமிழ்நாட்டில் எத்தனை அழகான ரயில் பாதைகள் இருந்தாலும் அவற்றிற்கு எல்லாம் மணி மகுடம் போல் இருப்பது மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் பயணம் தான். 1908 இல் கட்டி முடிக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் பாதை மூடுபனி புல்வெளிகள் மற்றும் பசுமையான தேயிலை தோட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகள் வழியாக உங்களை ஊட்டிக்கு அழைத்து செல்கிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களில் இடம் பிடித்துள்ள ஊட்டி மலை ரயில் பயணம் 6,200 அடி உயரத்தில் மெதுவாக உங்களை தாலாட்டிக் கொண்டே முழு நீலகிரி இயற்கை அழகையும் கண்டு ரசிக்க வைக்கிறது.

ஜம்மு - பாரமுல்லா
ஜம்மு, உதம்பூர், ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா ஆகிய நகரங்களை இணைக்கும் இந்த ரயில் பாதை அழகானது மற்றும் வசீகரமானது மட்டுமல்ல, மிகவும் சவாலானதும் கூட. உயரமான மலைப்பாதைகள் மற்றும் கடுமையான நிலப்பரப்புகளுக்கு இடையே கடுமையான குளிருக்கு நடுவே பயணம் செய்யும் போது, காஷ்மீரின் அழகில் திளைப்பதோடு சாகசத்தையும் உணருவீர்கள்.

கல்கா - சிம்லா
அழகிய பள்ளத்தாக்குகள், செங்குத்தான பாதைகள் மற்றும் பனிமூட்டமான புல்வெளிகள் வழியே இந்த அழகிய பயணம் சிம்லாவிற்கு பயணிக்கும் பயணிகளின் மனதை கவர்கிறது. செங்குத்தான பாதையை கட்டி முடித்ததற்காக 'கின்னஸ் சொசைட்டி'யால் இது மிகவும் பாராட்டப்பட்ட ஒரு முயற்சியாகும். ஐந்து மணி நேரம் நீடிக்கும் இந்த பயணத்தில் 20 ரயில் நிலையங்கள், 102 சுரங்கப்பாதைகள், 900 வளைவுகள் மற்றும் 82 பாலங்களை நீங்கள் கடந்து செல்வீர்கள்.
பொள்ளாச்சி - பாலக்காடு
தமிழ்நாட்டின் அழகிய ரயில் பயணங்களில் குறுகிய ரயில் பயணமாக இருப்பது பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு வரை செல்லும் பயணம் தான். ஆம் இரண்டு இடங்களுக்கும் இடையே உள்ள 54 கிமீ தூரத்தை ரயில் 45 நிமிடம் முதல் 1 மணி நேரத்தில் கடந்திடலாம். பயண நேரம் குறைவாக இருந்தாலும், பயணத்தில் போது பல மலைகளையும், சமவெளிகளையும், அழகிய காட்சிகளையும் நீங்கள் கண்டு ரசிப்பீர்கள். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை என இரண்டிலும் பாலக்காடு மழைப்பொழிவைப் பெறுகிறது. அதனால் சீசன் நேரங்களில் இந்த ரயிலில் நீங்கள் ஒருமுறை பயணம் செய்து பார்த்தால், நிச்சயம் பல போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுக்காமல் இருக்க மாட்டீர்கள்.

விசாகப்பட்டினம் - அரக்கு பள்ளத்தாக்கு
கம்பீரமான கிழக்கு தொடர்ச்சி மலைகள், காபி தோட்டங்கள் வழியாக ஷிமிலிகுடாவின் மிக உயரமான மலைப்பாதையில் நீங்கள் எண்ணற்ற சுரங்கங்கள் மற்றும் கூர்மையான வளைவுகள் வழியாக பயணம் செய்யலாம். அரக்கு பள்ளத்தாக்கை அடைய இந்த அழகிய மலைப்பாதையில் நீங்கள் பயணம் செய்யலாம்.

மண்டபம் - ராமேஸ்வரம்
த்ரில் மற்றும் சாகசங்கள் நிறைந்த இந்தியாவின் மிக அழகான ரயில் பாதைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் இரண்டாவது நீளமான பாலமான பால்க் ஜலசந்தி வழியாக செல்லும் இந்த பாலம் இந்தியாவின் பிரதான நிலப்பகுதியை பாம்பன் தீவுடன் இணைக்கும் ஒரே பாதையாகும். குறுகிய பாலத்தின் மீது கடலில் பயணிக்கும் போது இந்த பயணம் பிரமிப்பூட்டும் அனுபவத்தை வழங்குகிறது. பாம்பன் பாலம் மீது பயணிக்கும் எவரும் நிச்சயம் பிரமிப்படையாமல் இருக்க முடியாது.
மும்பை - கோவா
மும்பையிலிருந்து கோவா செல்லும் இந்த ரயில் பாதை சஹ்யாதாரி பள்ளத்தாக்குகள் அரபிக்கடலின் விளிம்புகள் வழியாகச் செல்லும் ஒரு அழகிய பயணமாகும். பசுமையான மேற்கு தொடர்ச்சி மலைகள், சுரங்கப்பாதைகள், பாலங்கள், எண்ணற்ற சிறிய ஆறுகள், பருவகால நீரோடைகள் மற்றும் பசுமையான புல்வெளிகள் என இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகள் நிறைந்த பாதையாகும். அதுவும் குறிப்பாக கோவாவின் துத்சாகர் நீர்வீழ்ச்சி அருகே ரயில் செல்லும் போது, நீங்கள் அந்தக் காட்சியை கண்டு மெய் சிலிர்ப்பது உறுதி.
கன்னியாகுமரி - திருவனந்தபுரம்
அரேபிய கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகியவை சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு செல்லும் இந்த ரயில் பயணம், நாட்டின் வளமான தோட்ட நடைமுறைகளின் ஸ்லைடுஷோ போன்றது. இந்த மூன்று மணி நேர ரயில் பயணத்தில், பயணிகள் பசுமையான தேயிலை, தென்னந்தோப்புகள் மற்றும் பலவிதமான மசாலாப் பொருட்களின் பண்ணைகள் ஆகியவற்றை கண்டு களிப்பார்கள். இந்தப் பாதை இயற்கை அழகை கண்டு ரசிக்க வாய்ப்பு அளிப்பதோடு பயணிகள் தெற்கின் உள்ளூர் வாழ்க்கையை நெருக்கமாக அனுபவிக்க அனுமதிக்கிறது.

புதிய ஜல்பைகுரி - டார்ஜிலிங்
நியூ ஜல்பைகுரியிலிருந்து டார்ஜிலிங் செல்லும் இந்த அழகிய பயணம் 78 கிமீ நீளமுள்ள ஒரு 8 மணிநேரம் பயணமாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த மலைப்பாதை ரயில் பயணத்தில் மகிழ்ச்சியுடன் சவாரி செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் டார்ஜிலிங்கிற்கு வருகிறார்கள். இந்த டாய் டிரெயினில் பயணம் செய்தபடியே கஞ்சன்ஜங்கா மலையின் அழகைப் பார்த்து ரசிப்பதை நீங்கள் நிச்சயம் உங்கள் வாழ்வில் மறக்க மாட்டீர்கள்.



Click it and Unblock the Notifications







