Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் பெஸ்ட் சன் செட் மற்றும் சன் ரைஸ்!

இந்தியாவின் பெஸ்ட் சன் செட் மற்றும் சன் ரைஸ்!

By

சூரியன் உதயமாகும் போதும் சரி, அஸ்த்தமனமாகும் போதும் சரி வண்ணங்களை வானமெங்கும் வாரியிறைத்து வர்ணஜாலமே நிகழ்த்திவிட்டு சென்றுவிடும்.

இப்படிப்பட்ட தருணத்தில் எந்த ஒரு இடமும் ரெட்டிப்பு அழகுடன் காட்சியளிக்கும். நாம் தினம் தினம் பார்த்து பழகிய நம் வீட்டு மொட்டை மாடி கூட அப்போது புதிய பொலிவுடன் நம்மை கிறங்கடிக்கும்.

நம்முடன் கண்ணாமூச்சி ஆடுவது போல கடலுக்கு அடியிலும், மலைச்சிகரங்களுக்கு அடியிலும் ஒளிந்துகொள்ளும் போதும், பின்பு அதிகாலை வேளையில் மெல்ல மெல்ல மலைகளுக்கு பின்னாலிருந்தும், கடல் அலைகளிலிருந்தும் எட்டிப் பார்த்து சிரிக்கும் சூரியன் உலகத்தையே அழகு மிளிர செய்துவிடும்.

இந்தியாவின் எழில் கொஞ்சும் இடங்களை சூரியன் உதயமாகும் போதோ, அஸ்த்தமனத்தின் போதோ காணும் வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவில் வாழ்வதற்கு எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று வாய்விட்டே சொல்லிவிடுவீர்கள்.

டைகர் ஹில், டார்ஜீலிங்

டைகர் ஹில், டார்ஜீலிங்

2600 மீட்டர் உயரத்தில் இருக்கும் டைகர் ஹில்லிருந்து சூரிய உதயத்தை கண்டு ரசிக்கும் அனுபவம் உன்னதமானது. தொடுவானத்திலிருந்து சூரியன் மெல்லக்கிளம்பி இளஞ்சிவப்பு நிறத்தை வானமெங்கும் பூசியவாறு கஞ்சன்ஜங்கா மலைப்பகுதியை முத்தமிட்டு அதை ஜொலிக்க வைக்கும் அழகு விவரிக்க முடியாதது. அதுமட்டுமல்லாமல் அதிகாலை குளிரை விரட்டி அடித்து உங்களை தீண்டும் தங்க நிற சூரிய ஒளி தரும் உணர்வு அற்புதமானது!

தாஜ் மஹால், ஆக்ரா

தாஜ் மஹால், ஆக்ரா

தாஜ் மஹாலை சாதாரணமாக பார்த்தாலே மனதில் அப்படியே ஒட்டிக்கொள்ளும். அதிலும் சூர்ய அஸ்த்தமனத்தின்போது தாஜ் மஹால் தாவித் தாவி வந்து உங்கள் இதயத்திலேயே நிரந்தரமாக குடிபுகுந்து விடும்! ஆனால் உங்கள் காதலரோடு மட்டும் இங்கே வந்துவிடாதீர்கள், அப்புறம் தாஜ் மஹால் அழகில் உங்கள் காதலர் கண்ணுக்கு தெரியமாட்டார்!!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் என 3 சமுத்திரங்கள் சங்கமமாகும் இடத்தில் நின்று சூர்ய அஸ்த்தமனத்தையும், சூர்யோதத்தையும் கண்டு ரசிக்கும் அனுபவத்தை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும்?! அதிலும் முருகன் குன்றத்தின் மீதிருந்து பார்க்கும்போது திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும் தெய்வீக ஒலியுடன் ஜொலிக்கின்ற காட்சி நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிடும்!

கொச்சி

கொச்சி

'சீனாவாலா' என்ற சீன மீன்பிடி வலைகளின் பின்னணியில் அஸ்த்தமனமாகும் சூரியன், அதன் பிறகு ஒவ்வொருநாளும் உங்கள் மனதில் உதயமாகிக்கொண்டே இருக்கும். அதிலும் மே மற்றும் ஜூன் மாதங்களில் மஞ்சள் வண்ணத்தை வானம் முழுவதும் அள்ளித்தெளித்து அஸ்த்தமிக்கும் சூரியன் கொள்ளை அழகு! இதை பார்க்கும்பொழுது நம் உதடு 'அந்த அரபிக்கடலோரம் ஒரு அழகை கண்டேனே...' என்ற பாடலை தன்னாலே முனுமுனுக்கும்!!

சீ பீச், பூரி

சீ பீச், பூரி

உலகத்தை மறந்து, உங்களை மறந்து, கண்கள் இமையாமல் ஒரு சிலையை போல நிற்க போகிறீர்கள் சீ பீச்சின் சூரிய அஸ்த்தமனத்தை முதன்முதலாக பார்க்கும் தருணத்தில். அதுமட்டுமல்ல ஒரு முறை பார்த்து ரசித்த அற்புதத்தை தினம் தினம் பார்க்க வேண்டும் என்று ஒரு குழந்தையை போல நீங்கள் அடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!

தன்னீர்பாவி கடற்கரை, மங்களூர்

தன்னீர்பாவி கடற்கரை, மங்களூர்

மங்களூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் பனம்பூர் எனும் இடத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. குர்புரா நதி கடலில் கலக்கின்ற அற்புதமான காட்சியுடன், சூரிய அஸ்த்தமனக் காட்சியும் சேர்ந்து அற்புதமான ஒரு மாலை நேரத்தை உங்களுக்கு பரிசாக கொடுக்கப்போகின்றன!

கலங்கூட் பீச், கோவா

கலங்கூட் பீச், கோவா

கலங்கூட் பீச் பாராகிளைடிங்கிற்காக உலக அளவில் புகழ்பெற்றது. அதிலும் சூரிய அஸ்த்தமனத்தின் போது காலுக்கு கீழே கடல், தலைக்கு பின்னால் சூரியன் என்று அந்தரத்தில் மிதக்கும் அனுபவம், அப்பப்பா சாகசத்தின் உச்சம்!

திருச்செந்தூர் கடற்கரை

திருச்செந்தூர் கடற்கரை

'திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்..' என்ற பாடலில் வருவது போல இந்த கடற்கரையிலிருந்து சூரிய உதயத்தை ரசிப்பதற்காகவே முருகப்பெருமான் இங்கு குடிகொண்டுள்ளாரோ என்னவோ?! இங்கு வரும் பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்வதற்கு முன் இந்த கடலில் நீராடிச் செல்வது வழக்கமாக உள்ளது.

மெரினா பீச், சென்னை

மெரினா பீச், சென்னை

சென்னை மக்களின் செல்லக் கடற்கரையாகவும், இந்தியாவின் நீளமான கடற்கரையாகவும் அறியப்படும் மெரினா பீச் சூர்யோதய காட்சிக்கும் பிரபலமானது. ஒவ்வொரு நாள் காலையும் சூரியனை கைகுலுக்கி வரவேற்றுவிட்டு எக்கச்சக்கமான மக்கள் மெரினாவில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் இருப்பதை பார்த்து சூரியனும் புன்னகையுடன் உதயமாகிறது!

முழுப்பிளாங்காட் பீச்

முழுப்பிளாங்காட் பீச்

இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசியாவின் ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருகில் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் பீச் திருவிழாவை ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சாகச பயணிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கௌப் கடற்கரை, உடுப்பி

கௌப் கடற்கரை, உடுப்பி

கர்நாடக மாநிலத்தில் அதிகம் விரும்பப்படும் கடற்கரைகளுள் ஒன்று இந்த கௌப் கடற்கரை. இந்தக் கடற்கரையை சுற்றி காணப்படும் கரும்பாறைகள், 100 வருட பழமையான கலங்கரை விளக்கு, கடலின் ஒங்கார இசை என்ற பின்னணியில் சூரிய அஸ்த்தமனத்தை பார்த்து ரசிப்பது மறக்கமுடியாத அனுபவம்.

தென்னெட்டி பார்க் பீச், விசாகப்பட்டணம்

தென்னெட்டி பார்க் பீச், விசாகப்பட்டணம்

ஒருபக்கம் கைலாசகிரி, மறுபக்கம் வங்காள விரிகுடா என்று காண்போரை கவர்ந்திழுக்கிறது தென்னெட்டி பார்க் பீச். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சூர்யோதய காட்சிக்கு அடிமையாகி திரும்ப திரும்ப இங்கே வந்து குட்டிபோட்ட பூனை போல சுற்றிக்கொண்டு உள்ளனர். இதன் காரணமாக ஏராளமான திரைப்படங்களில் இந்த கடற்கரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பூரி சீ பீச்

பூரி சீ பீச்

இந்தியாவில் சூரிய உதயம், சூரிய அஸ்த்தமனம் இரண்டையும் பார்த்து ரசிக்கக்கூடிய இடங்களில் பூரி சீ பீச் முக்கியமானது. நீளமான கடற்கரையும், ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் அலையோசையும், வண்ணங்களை வாரியிறைத்து சூரியன் செய்யும் மாயவித்தைகளும் பயணிகள் மனதை விட்டு என்றும் அகலாது.

குட்ஜ்

குட்ஜ்

16,000 சதுர கிலோமீட்டர் அளவில் உலகின் மிகப்பெரிய உப்பு பாலைவனப்பகுதியாக அறியப்படும் குட்ஜ் பூமி சூரிய அஸ்த்தமனத்தின் போது எவரையும் தன்னழகில் கலங்கடித்துவிடும். இதுதவிர நிலா வெளிச்சத்தில் குட்ஜ் பகுதியில் ஒட்டகச் சவாரி செய்யும் அனுபவம் வானத்தில் மிதப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும்!

Read more about: கடற்கரை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X