Search
  • Follow NativePlanet
Share
» »ஏலே… எப்போதும் குளிக்கலாம் வாங்க எங்க ஊருக்கு…!

ஏலே… எப்போதும் குளிக்கலாம் வாங்க எங்க ஊருக்கு…!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான, அந்த ஊர் வரலாற்றில் பல தீர்க்கமான தருணங்களைக் கண்டுள்ளது. அந்த ஊரின் பெயரின் சொற்பிறப்பியல் வேர்கள் பற்றிய கதையும் சுவாரசியமானது.

ஹலோ...! அப்படி எந்த ஊரை பற்றி பேசுகிறீர்கள் என, நீங்கள் கேட்பது புரிகிறது. கட்டுரை பற்றிய சுருக்கத்தை பார்த்தவர்களுக்கு, நான் எந்த ஊரின் பெருமை பற்றி பேசுகிறேன் என்பது தெரியும்.

இல்லை என்றாலும் பரவாயில்லை. அந்த ஊர் பெயர் வர காரணம் அறிந்தால்... நீங்க( 2k கிட்ஸ்) நிச்சயமாக வாய் பிளப்பீர்கள். சிவபெருமானின் தீவிர பக்தரான வேதசர்மா நெல் விதைத்து ஆற்றுக்குச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

அப்போது, அந்த பகுதி கனமழையால் பாதிக்கப்பட்டது, ஆனால், அதையும் மீறி, நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கவில்லை. எனவே, இந்த இடம் "திரு-நெல்-வேலி" (தெய்வீகத்தால் பாதுகாக்கப்பட்ட நெல்) என்று அழைக்கப்பட்டது.

ஊர் பெயர் காரணம் கேட்டால் புல்லரிக்குதுல. அப்படிபட்ட ஊரின் பெருமையை, தினமும் பேசலாம் போங்க. சரி கட்டுரைக்கு வருகிறேன். கோடை விடுமுறையில், எல்லோரும் போகிற இடங்களை தவிர்த்து, இதுபோன்ற ஊர்களுக்கு போய் என்ஜாய் பண்ணுவது மட்டுமின்றி, ஊர் பெருமை, அந்த ஊர் உணவு என, பலவற்றையும் தெரியும் வாய்ப்பு கிடைக்கும்ல.

parampara waterfalls

ஊர் சுற்ற என்னென்ன அணைகள்

அடவிநயினார் அணை

அடவிநயினார் அணை, திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை தாலுகா மேக்கரை கிராமத்தில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.குற்றாலம் மற்றும் அச்சன்கோவில் பகுதிக்கு அருகில் அடவிநயினார் அணைகட்டு அமைந்துள்ளது.

பருவக்காலங்களில் குற்றாலத்திற்கு வருகை புரியும் போது, இந்த அணைக்கட்டு பகுதிக்கு வருகை தரலாம். இந்த அணைக்கட்டு பகுதியில் , சிறிய அருவி ஒன்றும் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் வாயிலாக, இந்த பகுதியை அடையலாம்.

கடனாநதி அணை

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணைக்கட்டு பகுதி சிவசைலம் கிராமத்தில் ஆழ்வார்குறிச்சியில் அமைந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று.

தற்போது இந்த அணைக்கட்டு பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். குற்றால பருவக் காலங்களிலும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவிக்கும் காலத்திலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிகின்றனர்.

மணிமுத்தாறு அணை

திருநெல்வேலிக்கு மேற்கே சுமார் 47 கி.மீ. தொலைவில் மணிமுத்தாறு அணை அமைந்துள்ளது.அணையின் மொத்த நீளம் அரை மைல்.மலையின் மூன்று பக்கங்களையும் சுற்றி தண்ணீர் உள்ளது. அதன் மேலே உள்ள மணிமுத்தாறு அருவியில், கோடை உச்சம் பெறும் நாட்கள் தவிர, மற்ற எல்லா நாட்களிலும் அருவியில் விழும் நீரின் ஓசையும், அதன் சுவையும் நம்மை அங்கிருந்து திரும்ப விடாது என்பது மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்.

tirunevelidams1

ராமநதி அணை மற்றும் பூங்கா

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலூகா கடையத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது ராமநதி அணைக்கட்டு. இது ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். அதைத்தொடர்ந்து அமைந்துள்ள பூங்காவிற்கும், அணைக்கட்டை பார்வையிடுவதற்கும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர்.

குண்டாறு அணை

திருநெல்வேலியிலிருந்து 70கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.குற்றாலம் மற்றும் செங்கோட்டை நகரங்களுக்கு அருகில் உள்ள மலை அடிவாரத்தில் குண்டாறு அணை அமைந்துள்து.திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களின் ஒன்று.

குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர்.இந்த அணைக்கட்டு பகுதியில் அருமையான காலநிலை நிலவுகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 1கி.மீ. தொலைவில் இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது.இங்கு அழகான அருவி ஒன்று அமைந்துள்ளது.இந்த அருவிக்கு செல்ல நான்கு சக்கர வாகனம் ஏற்றது.

அகஸ்தியர் அருவி

திருநெல்வேலியிலிருந்து 42கி.மீ தொலைவில் பாபநாசம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அகஸ்தியர் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சிகள் முனிவரின் அகஸ்தியத்திற்கு முன் சிவன் மற்றும் பார்வதி தோன்றிய இடத்தில் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

பாபநாசம் என்பதன் பொருள் பாவங்களை நிவர்த்தி செய்வது என்பதாகும். இந்த அருவியில் இருந்து விழும் நீரில் மக்கள் குளித்தால் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடும் ஒரு முக்கிய யாத்ரீக மையமாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

காரையார் அணை

காரையாறு அணையை நீங்கள் நெருங்கும் தருணத்தில், அதன் பிரம்மாண்டமான கொள்ளளவு மற்றும் பரப்பளவு ஆகியவற்றின் பிரமிப்பு மின்னல் போல் உங்களைத் தாக்கும். திரவ தங்க நதியைப் போல சூரியனின் கதிர்களால் ஒளிரும் அதன் பளபளப்பான நீரை நீங்கள் அணுகும்போது, அவை உங்கள் இதயத்தை ஆச்சரியத்தாலும், பிரமிப்பாலும் நிரப்பும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு படகில் ஏறி நீங்கள் அதன் மீது செல்லும்போது, காரையார் அணை அதன் ரகசியங்களை அவிழ்க்கட்டும். அதன் முறுக்கு கால்வாய்கள் மற்றும் கிளை நதிகள் உணர்வுகளுக்கு விருந்து அளிக்கும். புத்துணர்ச்சியூட்டும் காற்று, சுற்றியுள்ள காடுகளின் நறுமணத்துடன், உள்ளத்தை புத்துணர்ச்சியூட்டுகிறது என்றால் நம்பி தான் ஆக வேண்டும்.

papanasanam dam

இதுபோக, மாநகரை சுற்றிய பகுதிகளில் ஓடும் தாமிரபரணி ஆற்றில், குடும்பத்துடன் உணவை எடுத்து சென்று உடலில் சூரியன் சுடும் வரை குளித்துவிட்டு, பசியில் அந்த உணவை ஆற்றின் உள்ளே வைத்து சாப்பிடும் சுகம் இருக்கே.... அதை வார்த்தைகளால் வர்ணக்க முடியாது. நாகரிகம் என்ற பெயரில், நீச்சல் குளத்தில் கும்மி அடிச்சுட்டு பெருமை பீத்தும் நபர்களுக்கு தெரியாது... ஹலோ என்ன நாகரிக வாழ்வில் வாழ்கிறவர்களை மரியாதை குறைவாக பேசுகிறீர்கள் என நீங்க போர்க்கொடி தூக்கிடாதீங்க...

'என்ஜாய்' பண்ணுவது எப்படி என்று தான் அவங்களுக்கு சொல்ல வந்தேன். மற்றபடி ஒன்னும் இல்லைங்க. அதாவது, ஆற்று நீரின் குளிர்ச்சியில் விரல்கள் வெண்ணிறமாகி, உதடுகள் அடிக்கும் நேரத்தில் சூடாக சால்னாவில் கட்டிய புரோட்டா ஊறி, வெங்காய மனத்துடன் இருப்பதை சாப்பிடுவதும், வீட்டில் கட்டிய பழைய சோற்றுடன் குழம்பையும், ஊறுகாயும் சேர்த்தும் நீரில் இருந்தவாறே சாப்பிடும் சுகம் இருக்கே.... அப்பப்ப அட போங்கபா... நான் வர்றேன். எனக்கு பசிக்குது...!

அடுத்த கோடைக்கு ஊர் போகும் போது தான் இதை அனுபவிக்க முடியும். பொருளாதார தேவைக்காக என்னை போன்று ஊரை விட்டு, இங்க வந்து ஊரில் அன்றாடம் அனுபவித்த சுகத்தை, உங்களுக்கு தெரிய வார்த்தைகளால் எழுத வேண்டிய கட்டாயத்துக்கு நானும் தள்ளப்பட்டுள்ளேன் என்கிற போது... கொஞ்சம் பீல்லா தான் இருக்கு பா...!

விழிப்புணர்வு வேண்டும் நமக்கு...!

கடந்த மாதம் தந்தையின் நினைவு தினத்துக்கு போன நம் நண்பர், ஒரு விஷயத்தை வருத்தப்பட்டு சொன்னார். என்னை போன்று அவரும் இளமை காலங்களில் சுற்றிய பகுதிகளில் ஒன்றான பாபநாசம் அருகிலுள்ள சொரிமுத்தனார் கோவில் பகுதியை சுற்றி, குப்பை கூளங்கள், ' குட்டீஸ்களுக்கு பயன்படுத்திய பேம்பர்ஸ்', பழைய துணிகள், பிளாஸ்டிக் என, நீரோடையின் அருகில் குவிந்து கிடக்கிறது.

இதுபோன்று குப்பை கூளங்களை சரியாக அப்புறப்படுத்தாமல், அலட்சியமற்ற முறையில் சுற்றுலா வந்த இடத்தில் வீசிவிட்டு செல்வது எந்த வகையான நாகரீகம் என வருத்தப்பட்ட அந்த நபர், இதே நிலை நீடித்தால் நம் எதிர்கால தலைமுறைக்கு இதுபோன்ற இடம் இருந்தது என்று புத்தகத்தில் தான் சொல்ல வேண்டியிருக்கும் என்று ஆதங்கப்பட்டார். கல்வி கற்று கொடுப்பதை தாண்டி, நாம் தான் நம் வாரிசுகளுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்பதை, பெற்றோர்களான நாமும் உணர வேண்டும். சரி விடுங்க... நீங்க மாறுவீங்கனு நம்பிக்கையோடு, எங்க ஊரில் எப்போதும் தண்ணீர் நிரம்பி ஆனந்தம் விளையாடும் ஊர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...! ஏலே நம் ஊருக்கு வர்ற வெளியூர் பயலட்ட ஊர் சுற்ற போனா இடத்தில் ஒழுங்கா குப்பைகளை, அதற்குரிய இடத்தில் கொட்ட சொல்லுங்கல மறக்காம...

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+